featued_image

பேரியல் அஸ்ரப் |சிறப்பு நேர்காணல்

auhtor

on
2018-02-25


By :
Oorukai

பேரியல் அஸ்ரப்!

இலங்கை அரசியலில் தனித்துவம் மிக்க பெயர்.

இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களின் மிகப்பெரிய கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் துணைவி. அஸ்ரப் அவர்களின் அகால மரணத்தை தொடர்ந்து அந்த கட்சியை வழிநடத்துவதற்கு முயன்றபோது அந்த கட்சியினால் வெளியேற்றப்பட்டார். ஆனால், தனது அரசியல் ஓர்மத்தை ‘தேசிய ஒருமைப்பாட்டு முன்னணி’ ‘நுவா’ என்ற கட்சியின் ஊடாக வெளிப்படுத்தியவர்.

2000ஆம் ஆண்டு இடம்பெற்ற அஸ்ரப் மரணத்தின் பின்னர் பேரியலை யார் என்று தெரியாமலேயே பெரியளவில் தேர்தல் பிரச்சாரங்கள் எதனையும் மேற்கொள்ளாமல் அவர் கண்டியை சொந்த இடமாக கொண்ட பெண்மணி என்றபோதிலும்கூட அம்பாறை மாவட்ட மக்களை பெருவாரி வாக்குகளை வழங்கி வெற்றிபெற வைத்தார்கள். அவரை அஸ்ரப் உருவத்தில் பார்த்தார்கள்.

ஆனால், ‘நுவா’ கட்சியின் தலைவியாக தனது அரசியலை முன்னெடுத்த பேரியல் தனது தனித்துவமான அரசியல் அடையாளத்தை உருவாக்கினார். ஒரு பெண் ஆளுமையாக முஸ்லிம் மக்களின் மத்தியிலிருந்து எவ்வாறெல்லாம் பணியாற்றமுடியும் என்ற முன்மாதிரியான நபராக தன்னை வெளிப்படுத்தினார். அந்த அரசியல் பயணம் அவருக்கு இலங்கை அமைச்சரவையில் முதலாவது முஸ்லிம் பெண் என்ற ஸ்தானத்தை கொடுத்தது. சந்திரிக்கா மற்றும் மகிந்த அரசுகளின் அமைச்சுக்கள் இரண்டிலும் பணியாற்றும் சந்தர்ப்பத்தை கொடுத்தது. தொடர்ந்து அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புக்களிலிருந்து தான் சார்ந்த மக்களுக்கு சேவை செய்தார்.

2010 இடம்பெற்ற தேர்தலில் பேரியல் தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2011இல் சிங்கப்பூருக்கான இலங்கை தூதுவராக நியமனம் பெற்று 2013ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். அந்த பதவிக்காலம் நிறைவடைந்ததுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துக்கொண்டார்.

மெல்பேர்னுக்கு தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்திருந்த பேரியலை ‘எதிரொலி’ சார்பாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மலர்ந்த முகத்தோடும் நிறைந்த மனதோடும் செவ்வி தருவதற்கு இசைந்துகொண்ட பேரியல், பல்வேறு விடயங்களை ஆழமாக பேசினார்.

அவருடைய முழுமையான செவ்வி வருமாறு –

கேள்வி – அரசியலில் இருந்து முற்றாக ஓய்வுபெற்றுவிட்டு இளைப்பாறும் இந்த காலப்பகுதி உங்களுக்க எவ்வாறுள்ளது? அரசியலில் இருந்ததைவிட நிறைவை தருகிறதா?

பதில் – இந்த ஓய்வு எனக்கு நன்றாக உள்ளது. ஆனால் அரசியலில் இருந்ததைவிட இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொல்லமாட்டேன். அரசியலில் இருந்தபோதும் மகிழ்ச்சியோடுதானிருந்தேன். அரசியில் செய்த காரியங்கள் அனைத்தையும் மனநிறைவோடுதான் செய்துகொண்டிருந்தேன். ஆனால், அரசியல் இனி போதும் என்று நான்தான் முடிவுசெய்து வந்தேன். ஆகவே, அதில் பெரிய இழப்பு வெறுப்பு என்றெல்லாம் எதுவுமில்லை.

கேள்வி – அஸ்ரப்பின் மறைவுக்கு பின்னர் அவருடைய இன்னொரு முகமாக உங்களை பெருமாதரவுடன் மக்கள் தெரிவு செய்தார்கள். முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக நீங்கள் பயணம் செய்ய தலைப்பட்ட ‘நுவா’ கட்சிக்கும் மக்கள் பாரிய ஆதரவு கிடைத்தது. அந்த வகையில், இன்று அந்த ஆதரவுகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அந்த மக்களிடம் இருந்து பிரிந்துகொண்டு அரசியலால் ஓய்வு பெற்றதையிட்டு உங்களுக்கு குற்ற உணர்வொன்றும் இல்லையா? அந்த மக்களை கைவிட்டுவிட்டோம் என்று கவலைகொண்டது உண்டா?

பதில் – ஒரு சிறிய திருத்தம். அஸ்ரப் மறைவுக்கு பின்னர் நான் அரசியலுக்கு வரும்போது எனக்கு நீங்கள் கூறியதுபோல பெரிய ஆதரவொன்றும் இருக்கவில்லை. அதற்கு காரணம், ஒரு முஸ்லிம் பெண் இப்படியான ஒரு நிலமைக்கு வந்தது முஸ்லிம் மக்களுக்கு புதிதாக இருந்தது.

கேள்வி – புதிதாக இருந்ததா அல்லது அவர்கள் விரும்பவில்லையா?

புதில் – புதிதாக இருந்தது. அப்போது மக்களின் முழுக்கவனமும் என் மீது இருந்தது. நான் என்ன செய்யப்போகிறேன் என்பதில் அவர்களின் கவனம் இருந்தது. அந்த நேரத்தில் அவர்களிடம் போய் எதை சொன்னாலும் அதை நம்பக்கூடிய நிலையில்தான் இருந்தார்கள். என்னை மிகப்பெரிய கேள்விக்குறியோடுதான் பார்த்தார்கள்.

அப்போது கடவுளின் அருளால், சிங்கள வாக்குகளும் எனக்கு கிடைத்தது. அம்பாறை மாவட்டத்தில் பெரிய வாக்குகள் என்றில்லாவிட்டாலும்க கூட சமப்படுத்தும் விதத்தில் கிடைத்தது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், அப்போது முஸ்லிம் வாக்குகளை மாத்திரம் நம்பி போட்டியிட்டிருந்தால் 2001இல் நான் நாடாளுமன்றத்திற்கு போயிருக்க முடியாது. அந்த சிங்கள மக்கள் மத்தியில் அஸ்ரப் நிறைய வேலைகள் செய்தருந்தார். அதேவேளை, நான் சிறியதொரு காலப்பகுதி அவர்களுடன் வாழ்ந்திருந்தாலும் அவர்களுக்கும் எனக்குமான மொழி இரண்டு தரப்புக்கும் இடையில் மிகப்பெரியதொரு புரிந்துணர்வை ஏற்படுத்தியது. பின்னர், அவர்களுடன் நான் தொடர்ந்து வேலை செய்தேன்.

அவர்களையெல்லாம் பிரிந்து வந்ததை நினைக்கும்போது இப்போது கஸ்டம்தான்.

கேள்வி – பொதுவிலேயே, முஸ்லிம் அரசியல்வாதிகள் என்றால் பதவிகளுக்கு பின்னால் போகின்றவர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆக, அந்த வழியில்தான் இப்போது நீங்களும் வந்துவிட்டீர்களோ என்று நீங்கள் கூறும் அந்த சிங்கள மக்கள்கூட சிந்திக்கலாம் இல்லையா?

பதில்: ஆமாம்,நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. ஆனால், என்னைப்பொறுத்தவரை கடவுள் என்னை காப்பாற்றியதுபோலத்தான் இது நடந்தது. நான் கடவுளை மிகவும் நம்புகின்ற ஒரு ஆள்.

அது எப்படியென்றால், எனக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவை பார்த்த சில சிங்கள அரசியல்வாதிகள் அம்பாறை மாவட்டத்தில் என்னை அந்த மக்களிமிருந்து பிரித்தெடுப்பதற்கு மும்முரமாக வேலை செய்தார்கள். 2010 தேர்தல் காலத்தின்போது,’சிங்கள மக்களுக்கு சேவை செய்வதற்கு சிங்கள அரசியல்வாதிகள் உள்ளார்கள். அதை செய்வதற்கு நாங்கள் முஸ்லிம்களிடம் போகவேண்டியதில்லை’ – என்று அந்த சிங்கள மக்கள் மத்தியில் அரசியல்வாதிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். அதன் விளைவாக அந்த மக்களுக்கும் எனக்கும் இடையிலான உறவு அடிபட்டுப்போனது.

அப்போதும்கூட, அந்த சிங்கள மக்களுக்கு எனக்கு இப்படியொரு அநியாயம் நடைபெறுகிறதே என்று உணர்வு வந்ததே தவிர, நான் போய்விட்டேன் என்ற உணர்வு அவர்களுக்கு வரவில்லை. அது உண்மையில் ஒரு பிரிவினையால் ஏற்பட்ட விளைவு என்றுதான் கூறுவேன்.

மற்றும்படி, முஸ்லிம் மக்களை பொறுத்தவரை அந்தளவுக்கு பெரியளவில் எனக்கு பெரிய ஆதரவொன்றும் கிடைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்கள்தான் எனக்கு பெரும் ஆதரவை வழங்கிக்கொண்டிருந்தார்கள். பின்னர், எனது தோல்வியும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக போய்விட்டது.

அதற்கு பிறகு, சிங்கப்பூருக்கு மூன்றரை வருடங்கள் இன்னொரு பணி நிமிர்த்தமாக வந்துவிட்டேன். அந்த காலப்பகுதியில் நான் இல்லாத அரசியல் வெற்றிடத்தில் அந்த மக்கள் வாழப்பழகிக்கொண்டு விட்டார்கள் என்பதை நான் கண்டுகொண்டேன். ஆனால், எனது சிங்கள ஆதரவாளர்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. நான் அவர்களை பிரிந்து வந்தது என்பதற்கு அப்பால், அவர்கள் என்னை தேர்தலில் தோற்கடித்து அனுப்பினார்கள் என்பதுதானே உண்மை என்பதையும் புரிந்துகொண்டேன்.

சிங்கப்பூருக்கு வந்த பின்னர் இந்த விடயங்களை தூர இருந்து பார்க்கும்போது எல்லாமே வித்தியாசமாக தெரிந்தன. நாட்டிலிருக்கும்போது நான் நான் என்று தெரிந்த பல விடயங்களை தொலைவிலிருந்து பார்க்கும்போது அவற்றில் நான் அவ்வளவு முக்கியமில்லை என்று தெரிந்தது. அதுவே எனது பிரியாவிடைக்கான சரியான தருணம் என்பதை உள்ளுர உணர்த்திவிட்டன.

சிலர் எனது பிரிவால் வருந்தக்கூடும். ஆனால், எனது மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு வந்ததாக நான் நினைக்கவில்லை.

கேள்வி – சிங்கப்பூரில் நீங்கள் தூதுவராக பதவி வகித்த காலப்பகுதியிலும்கூட நீங்கள் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக செயற்படுவதாகவும் குறிப்பாக இலங்கை சுதந்திரதின நிகழ்வில் சிங்களத்தில் தேசிய கீதத்தை இசைக்க அனுமதிக்கவில்லை என்றும் உங்களின் மீது ‘பொதுபல சேன’ போன்ற அமைப்புக்கள் இலங்கையிலிருந்து இனவாத கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஓட்டுமொத்தமாக இந்த சம்பவங்கள், நாட்டில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான இனப்பிரச்சினை என்பவற்றை பார்க்கும்போது சிங்கள அரசியலதிகார மனோபாவத்தினை எவ்வாறு உணர்கிறீர்கள்? இவ்வாறான ஒரு சிங்கள மேலாதிக்க மனோபாவம் கொண்டவர்களினால் இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று சாத்தியம் என்று கருதுகிறீர்களா?

பதில் – சிங்கப்பூரில் நான் தூதுவராக இருந்த காலப்பகுதியில சில சக்திகள் குழப்பம் விளைவிக்கும் காரியங்களை கொழுத்திப்போட்டு பற்றவைக்க பார்த்தார்கள். ஆனால், நான் அவற்றை கவனமாக கையாண்டுகொண்டதால், அவர்களது அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

எமது நாட்டில் தீர்வு ஏற்படுவதற்கான அடிப்படை புரிந்துணர்வு வருவதற்கு இன்னமும் காலமெடுக்கும் என்று நினைக்கிறேன். இது இன்று நேற்றல்ல ஆரம்பம் முதலே இருந்து வருகின்ற பிரச்சினை.

ஆனால், எமது அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை உணர்வுபூர்வமாக அணுகுவதற்கு தயாரில்லை. இனப்பிரச்சினை எமது நாட்டின் முதன்மை பிரச்சினை என்பது அரசியல் தலைவர்கள் மத்தியில் இல்லை என்பது எனது அபிப்பிராயம். ஓவ்வொரு புதுப்புது பிரச்சினைகள் வரும்போதும் அவற்றை நோக்கி தாவி தாவி சென்றுவிடுவதே அரசியல்வாதிகளின் போக்காக உள்ளது தவிர, இனப்பிரச்சினையின் மீது கவனத்தை குவியப்படுத்தி அதற்கு தீர்வை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆத்மார்த்தமான கரிசனை அவர்கள் யாரிடமும் இல்லை.

கேள்வி – இப்போதும் அந்த நிலை தொடர்வதாக கருதுகிறீர்களா?

பதில்: கரிசனை உள்ளது. ஆனால், காணாது என்று நினைக்கிறேன். இந்த பிரச்சினையால் முப்பது வருடங்கள் போர் நடைபெற்ற நாடு என்ற கனதியோடு அதனை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் காணாது.

சிங்கப்பூரில் நான் இருந்தபோது,அந்த நாட்டில் அவர்கள் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை எவ்வளவுதூரம் இறுக்கமாக பேணிக்கொள்கிறார்கள் என்பதை பார்க்கும்போது பிம்மிப்பாக இருந்தது. ஒரு சின்ன விடயம் என்றாலும் அதில் எல்லோரும் இணைந்து பங்கெடுத்து, அந்த பிரச்சினை இனிமேல் வரக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக செயற்படுகிறார்கள்.

அந்த அளவுக்கு நாங்கள் வரவில்லை என்பதுதான் கவலை.

கேள்வி – ஒரு கற்பனை கேள்வி ஒன்றை உருவாக்கி அதனை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்.

தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களில் இவர் இவர் இவர் இருந்திருந்தால் இலங்கை அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க சாத்தியமிருந்திருக்கும் என்று நீங்கள் கருதும் மூவினங்களினதும் ஆளுமைகள் யார்.. யார்?

பதில் – எனக்கு அவ்வளவு தெளிவாக இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. ஏனென்றால், நாங்கள் ஒருபோதும் இனப்பிரச்சினையை முதன்மை பிரச்சினையாக கருதி அதற்கு தீர்வு காண்பதற்கு செயலாற்றவில்லை. வேறு வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்தான் மும்முரமாக இருந்திருக்கிறோம்.

நாங்கள் முதன்மைப்படுத்தாத காரணத்தினால், அது மக்கள் மத்தியிலும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஆக, மக்கள் மத்தியிலிருந்து வந்த இப்படிப்பட்ட தலைவர்களிடமும் இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற ஒர்மம் இருக்கவில்லை.

உதாரணத்துக்கு தந்தை செல்வா, அஸ்ரப், சந்திரிகா ஆகியோரை எடுத்துக்கொ ண்டாலும் அவர்களுக்கு தங்கள் தங்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட ஒடுக்குமுறைகளை பற்றி பேசுவதற்குத்தான் நேரம் இருந்தது.

அஸ்ரப் அவர்களை பொறுத்தவரை அவர் ‘வடக்கு – கிழக்கு பிரச்சினை உட்பட எல்லா விடயங்களிலும் முஸ்லிம் மக்களின் குரலை நீங்கள் கேட்கவில்லை, அவர்களை தீர்வின் பங்காளிகளாக்கவில்லை’ – என்றுதான் பேசினார். நாங்களும் இருக்கிறோம் என்ற அடையாளத்தை கோரும் போராட்டமாக தொடங்கி, அதனை நிரூபித்தார். இலங்கை முஸ்லிம்களின் அடையாளத்தை பெற்றுக்கொடுத்த பின்னர், அவர் இல்லாமல் போய்விட்டார்.

தந்தை செல்வாவும் தமிழர்களின் அடையாளத்துக்காகவும் அவர்களின் குரலுக்காகவும் போராடினால். தனது மக்களின் உரிமைகளை பற்றி பேசினார்.

இந்த தலைவர்கள் செய்தது பிழை என்று சொல்லவில்லை. எல்லா இனங்களினதும் அடையாளங்களை அங்கீகரித்துவிட்டுத்தான் பொதுப்பிரச்சினையை பற்றி பேசலாம். பேசவேண்டும்.

ஆனால், எமது இனங்கள் அடையாளங்களுக்கான போராட்டங்களுடனேயே நின்றுவிட்டனவே தவிர, எல்லா இனங்களையும் உள்ளடக்கி பொதுப்பிரச்சினைக்கும் தீர்வு காணுகின்ற கட்டத்துக்கு நகரவில்லை.

சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ‘சுதுநெலும’ என்ற அமைப்பு தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் இது தொடர்பான ஆரோக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிரச்சினை புலிகளுடன் மட்டும்தானே தவிர, தமிழ் மக்களுடன் அல்ல என்றும் இனங்களுக்கு இடையிலான பிணக்குகள் எக்காலத்திலும் வரக்கூடாது என்றும் அந்த அமைப்பு தென்னிலங்கை மக்கள் மத்தியில் பல வேலைகளை செய்தது. சந்திரிக்காவின் காலத்திற்கு பிறகு அந்த முயற்சி கைவிடப்பட்டுவிட்டது.

ஆக, இனங்களின் அடையாளங்களை இனம் காணவேண்டும், பின்னர் அதனை அங்கீகரிக்கவேண்டும். அந்த ஏற்றுக்கொள்ளும் தன்மையின் அடிப்படையில் அடுத்த கட்டத்துக்கு நகரவேண்டும்.

ஆனால், நாங்கள் இன்னமும் ஒடுக்குமுறையை பற்றியே தொடர்ந்தும் பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர, தேசிய பிரச்சினையை பற்றி பேசுவதற்கு முன்னேறவில்லை.

கேள்வி – இரண்டு சிறுபான்மை இனங்களையும் சிங்கள அரசியல் மேலாதிக்கமானது தொடர்ந்து அடக்கிவருகின்றபோது நீங்கள் கூறுவதைப்போல ஒடுக்குமுறைகளை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பதுதானே யதார்த்தம்? அடிக்கும் வரைக்கும் அந்த மக்கள் கத்திக்கொண்டுதானே இருப்பார்கள்? பிறகெப்படி மேற்கொண்டு நகர்வது?

பதில் – இங்கு ஒரு விடயத்தை ஆழமாக புரிந்துகொள்ளவேண்டும். அடக்கப்பட்ட சமூகத்திலிருந்து சக்திவாய்ந்த தலைவர்கள் உருவாகி, தங்கள் மக்களுக்காக குரல் கொடுக்கும்போது அந்த சமூகத்துக்கு எல்லாம் கிடைத்துவிடுகிறது என்றுதான் தென்னிலங்கை சிங்கள சமூகம் பார்;க்கிறது.

உதாரணத்துக்கு அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்த காலம் முதல் முஸ்லிம் மக்களுக்கு ஏகப்பட்ட அபிவிருத்திகள், வசதிகள் என்று வாரி வாரி கொடுக்கப்படுகிறது. இவர்கள் அடக்குமுறை, அடக்குமுறை என்று கத்தி கத்திக்கொண்டு எல்லா வசதிகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பெரும்பான்மை சமூகமாக இருந்துகொண்டு எல்லா காலத்திலும் இப்படியே மற்ற இனங்களுக்கு வாரி வழங்கிவிட்டு, கஸ்டப்பட்டுக்கொண்டுதான் இருப்பதா என்பதுதான் சிங்கள மக்களின் ஆதங்கம். தங்களுக்காக யார் கதைப்பது என்ற அந்த ஆதங்கத்தின் விளைவாகத்தான் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து புதிய குழுக்கள் உருவாகிவருகின்றன.

உரிமைகள் இல்லாத சமூகத்துக்கு அபிவிருத்தியை கொடுத்து கொடுத்து திருப்திப்படுத்திக்கெர்ணடிருக்கும் அரசாங்கம், தங்களுக்கு உரிமை இருப்பதாக சொல்லிவிட்டு எந்த அபிவிருத்தியைiயும் செய்வதாக இல்லை என்பதுதான சிங்கள மக்களின் ஆதங்கமாக உள்ளது.

அந்த வகையில் அவர்களது பக்கத்தில் முற்றாக பிழை இருப்பதாகவும் கூறிவிடமுடியாது. இங்கு யாரும் பிழையானவர்களும் இல்லை. அதேவேளை,யாரும் சரியானவர்களும் இல்லை.

இதனை யாரும் பேசுகிறார்கள் இல்லை. இந்த விடயத்தை வெளிப்படையாக பேசவேண்டும். அதற்கு ஒரே வழி பாடசாலையிலிருந்து நாட்டின் மீதான உண்மையான கரிசனையும் பிற இனங்களுடனான புரிந்துணர்வும் வளர்க்கப்படவேண்டும். பிரிவினைகள் போக்கப்படவேண்டும். நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்ற எண்ணம் ஆரம்பத்திலிருந்து உருவாகவேண்டும்.

சிங்கள மாணவர்களுக்கு சிங்கள பாடசாலை, முஸ்லிம் மாணவர்களுக்கு முஸ்லிம் பாடசாலை, தமிழ் மாணவர்கள்கு தமிழ் பாடசாலை என்று எல்லாவற்றையும் பிரித்து பிரித்து வைத்துவிட்டு – கல்வியையும் தனித்தனியாக போதனை செய்துவிட்டு –

அந்த மாணவர்கள் படித்து முடித்து பாடசாலையிலிருந்து வெளியேறி பல்கலைக்கழகத்துக்கு வரும்போது ‘நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள்’– என்று சொன்னால் அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?

இலங்கையில் எல்லா பிரச்சினைகளையும் பார்த்தால் – ஒரு காயம்: அதற்கொரு பிளாஸ்டர் – இன்னொரு காயமா அதற்கொரு பிளாஸ்டர் என்றுதான் போகிறதே தவிர, இந்த காயங்களின் மூல காரணத்தை யாரும் பேசுகிறார்களுமில்லை. பேசினால் யாரும் கேட்கவும் தயாரில்லை.

நீங்கள் ஒன்றை அவதானித்திருந்தால் புரியம்,நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள். எங்களுக்கு ஒரு குணமிருக்கிறது. ஒரு தீவுக்குள் நாங்கள் எல்லோரும் தனித்தனி தீவுகளாகவே வாழ விரும்புகிறோம். எங்களுக்குள் சேர்ந்து செயற்படக்கூடிய தன்மையை ஒருவரும் உருவாக்கவில்லை.

ஆனால், இந்த விடயத்தில் முக்கியமாக அஸ்ரப்பை குறிப்பிட்டேயாகவேண்டும். அவர் முதன் முதலாக முஸ்லிம் காங்கிரஸ் என்று தொடங்கும்போது பல முஸ்லிம்களே – கொழும்பில் – அந்த சிந்தனையை விரும்பவில்லை. ஆனால், அந்த கட்சியை ஆரம்பித்து நடத்தி அப்படியே தனித்து கொண்டுபோகக்கூடாது என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பாக மாற்றி எல்லோரையும் அதனுள் கொண்டுவரவேண்டும் என்று எண்ணியது நினைத்து பார்க்கமுடியாத ஒன்று. அவரது அந்த சிந்தனைக்கு நிச்சயம் நான் தலை வணங்குவேன்.

‘நான் ஒரு முஸ்லிம்’ – என்ற தனி அடையாளத்துடன் போராடி அந்த அடையாளத்தை வென்றெடுத்து வெற்றியின் உச்சக்கட்டத்தில் நின்றுகொண்டிருக்கும்போது,’இனி நாங்கள் மற்றவர்களுடனும் இணைந்து பயணிக்கவேண்டும்’ என்று ஒருவர் முடிவெடுப்பதற்கு நினைத்து பார்க்கமுடியாத ஆளுமை பண்பு வேண்டும். அதனை அஸ்ரப் செய்தார்.

ஆனால், துரதிஸ்டவசமாக அவரது கனவு தொடர்ந்து நிறைவேறாமல் போய்விட்டது.அந்த அளவுக்கு எங்களை இப்போது வழி நடத்தி செல்வதற்கு ஏதோ ஒன்று தடுத்துக்கொண்டிருக்கிறது.

கேள்வி – வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் தமிழ், முஸ்லிம் உறவு நிலை தொடர்பான உங்கள் பார்வையும் எதிர்கால ஆருடமும் என்ன என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

பதில் – போருக்கு முன்னர் வடக்கு, கிழக்கு என்பது நாட்டின் தனியான அலகாக இருந்தது. ஆனால், போர் முடிந்த பின்னர் இனி எல்லோரும் இணைந்து வாழ்வோம் என்று மகிந்த சொன்னார். ஆனால், அவ்வாறு இணைந்து வாழ்வதற்கான வேலைகள் ஒன்றும் அங்கு நடைபெறவில்லை.

வடக்கில் வீதியும் சில அபிவிருத்திளையும் செய்துகொடுத்துவிட்டால் மாத்திரம் யாரும் இலங்கையர்களாக மாறிவிடமாட்டார்கள். தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக அந்த நாட்டில் நடத்தப்பட்டார்கள் என்பது மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றிப்போயுள்ளது. அதிலிருந்து அவர்களை மீட்டு எடுப்பதற்கு ஆழமாக இறங்கி வேலை செய்யவேண்டும்.

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது பலோத்காரமாக நடைபெற்ற ஒன்று. அது பிரிந்திருக்கவேண்டும் என்பதற்கும் ஆதரவான குரல்கள் இருந்தன என்பதை மறுக்கமுடியாது. கிழக்கில் முஸ்லிம்களுக்கு பிரச்சினை இருந்ததை போல தமிழ் மக்களுக்கும் பிரச்சினை இருந்தது.

எங்களில் ஒரு குணம் உள்ளது. நான் யாருக்கும் அடிமை இல்லை என்ற உள்ளுணர்வு. இலங்கையில் எல்லோருக்கும் அந்த குணமுள்ளது. எந்த பிரச்சினையை பேச தொடங்கும்போதும் ‘நான் யாருக்கும் அடிமையாகிவிடுவேனோ’– என்ற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது.

தமிழ் மக்கள் கூட தங்களுக்குள் ஒரு உறவை கட்டியெழுப்பவில்லை. அந்த சமூகத்திற்குள் அகவயமாக இருக்கிற பிரச்சினைக்கே தீர்வு கிடைக்கவில்லை. தமிழ் அரசியல் தலைவர்கள் மத்தியில் தற்போது நடைபெறுகின்ற பிரச்சினையை எடுத்து பார்த்தாலே தெரியும்.

முஸ்லிம் மக்கள் மத்தியிலும் அதே பிரச்சினை இருக்கிறது. உதாரணத்துக்கு அஸ்ரப் அன்று கிழக்கு முஸ்லிம்களுக்காக எத்தனையோ விடயங்களில் போராடினார். ஆனால், இப்போது கிழக்கு என்றாலே எத்தனை உள்ளது என்று தெரியாத அளவுக்கு அங்கு நிலமை உள்ளது.

கேள்வி – உங்களை பொறுத்தவரை வடக்கு – கிழக்கு சேர்ந்திருக்கவேண்டும் என்று கருதுகிறீர்களா?

பதில் – வடக்கு – கிழக்கு சேர்ந்திருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவ்வாறு சேர்ந்திருப்பதால் அங்குள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் சிறுபான்மையாகவிடுவார்கள். ஏற்கனவே, இலங்கையில் இரண்டாவது சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்கள், வடக்கு – கிழக்கு இணைப்பு வந்துவிட்டால், இன்னொரு சிறுபான்மைக்குள் சிறுபான்மை குழுமமாகிவிடுவார்கள்.

ஆக, சம அந்தஸ்து கோரிக்கை என்பது இந்த நாட்டின் தொடர் பிரச்சினையாக இருந்துகொண்டே இருக்கும்.

கேள்வி – தமிழர் என்ற சிறுபான்மையினத்தை போர் மூலம் வெற்றி கண்ட பின்னர் சிங்கள ஆட்சி அதிகாரம் தற்போது அடுத்த சிறுபான்மையின மக்களான முஸ்லிம்களை நோக்கி தனது அடக்குமுறை பார்வையை திருப்பியிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: அப்படி நான் நினைக்கவில்லை. தமிழர்களை அடக்கிவிட்டதாக சிங்கள மேலாதிக்கம் நினைப்பதற்குக்கூட இவர்களுக்கு ஒரு தன்மை உள்ளதா என்றுகூட தெரியாது.

வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேசுவதை பார்க்கும்போது தமிழர்களை சிங்களவர்கள் அடக்கிவைத்திருப்பது போலவா தெரிகிறது. இல்லையே!

இங்கு பாருங்கள், எங்களுக்கு இருக்கிறதே ஒரு சிறிய நாடு. இங்கு ஒவ்வொருவரும் தங்களை தாங்கள் ஆழவேண்டும் என்று தொடங்கினால், கடைசியில் மத்தியில் யார் ஆட்சி நடத்துவது? எல்லோரையும் சமமாக நடத்துகின்ற நிலை வருமானால், இந்த தனித்துவ கோரிக்கைகள் வர இயலாது.

எல்லோரும் இந்த நாட்டில் அடக்கப்படுவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக பெரும்பான்மையின மக்களே எழும்பி தாங்களும் அடக்கப்படுவதாக கூறுகின்ற வரையில் நிலமை போயுள்ளது. பெரும்பன்மையின சிங்கள மக்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாலும் அச்சமடைகிறார்கள். ஆக, நாங்கள் எங்கே பிழை விடுகிறோம் என்பதை கண்டறியவேண்டும்.

கேள்வி – அப்படியென்றால், அதிகாரப்பகிர்வு மற்றும் தங்களை தாங்களே ஆளும் ஜனநாயக உரிமை போன்ற விடயங்கள் இலங்கையில் செல்லுபடியாகாது என்று கூறுகிறீர்களா?

பதில் – சிங்கள மக்களும் இந்த நாட்டின் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில், அவர்களை பொறுத்தவரை, இவ்வளவு சுதந்திரம் கொடுத்த காரணத்தினால் இந்த யுத்தம் நடந்தது என்ற மனக்கிலேசம் அவர்களுக்குள் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆகவே, இனியாவது அதிகாரங்களை கையளிப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறார்களோ என்று உணர்கிறேன்.

நாங்கள் எதையோ கொடுக்க, அவர்கள் எதையோ எடுத்து கடைசியில் அனுராதபுரத்துக்கு அப்பாலும் வந்து நாட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. ஒரு விதமான மனப்பிராந்தி ஒன்று இலங்கையர்கள் அனைவருக்கும் இருக்கிறது. அதற்கு மருந்து என்ன என்றுதான் யாருக்கும் தெரியாது.

ஒன்றும் தருகிறார்கள் இல்லை என்று தமிழருக்கு கவலை, கூடக்கொடுத்து தொலைக்கிறார்களோ என்று சிங்கள் மக்களுக்கு கவலை, இடையில் எங்களுக்கு ஒன்றுமே இல்லை என்று முஸ்லிம்களுக்கு கவலை. இப்படி மொத்த நாடுமே கவலையிலும் பீதியிலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

கேள்வி – இந்த பிரச்சினை முழுவதையும் விடுதலைப்புலிகள் பார்த்த விதம் குறித்த உங்களது கருத்து என்ன? சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அமைதிப்பேச்சுக்களிலும்கூட அரச தரப்பு குழுவில் கலந்துகொண்டவர் என்ற அடிப்படையில் உங்களது பார்வை என்ன?

பதில் – எந்த பிரச்சினைக்கும் அதனை தீர்க்கும் தருணம் ஒன்று கனிந்து வருவதுண்டு. என்னைப்பொறுத்தவரை அந்த தருணத்தை பிரபாகரன் தவறவிட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். எனது கருத்து பிழைய இருக்கலாம்.

கேள்வி – எந்த தருணம் – எந்த புள்ளி – என்று சொல்கிறீர்கள்?

பதில் – சமஸ்டி என்ற பெயரை பேச்சுக்கும் எடுக்கமுடியாது என்று இருக்கும்போது நோர்வைக்கெல்லாம் போய் பேசி, சமஸ்டி கட்டமைப்பின் அடிப்படையிலான தீர்வொன்று வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது எல்லாம் குழம்பிவிட்டது. பிரபாகரனுக்கும் இந்த சிங்கள அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை. இவர்கள் கடைசிவரை ஒன்றையும் தரமாட்டார்கள். தாங்கள்தான் எடுக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்று நினைக்கிறேன். விடுதலைப்புலிகள் சிங்கள அரசை துளியளவும் நம்பவே இல்லை.

கேள்வி – அது அந்த பேச்சு மேசையிலும் நடைபெறவில்லையா?

பதில் – எங்கு நடந்து? சும்மா ஏதோ பேசிக்கொண்டார்கள். அவ்வளவுதான். இதில் குறிப்பாக அன்டன் பாலசிங்கம் அவர்களின் முயற்சியை நான் கட்டாயம் சொல்லவேண்டும். எப்படியாவது பேச்சு மேசையில் ஒரு தீர்வை எட்டவேண்டும் என்பதில் அவர் அயராது பாடுபட்டார். முப்பது வருடம் இந்த யுத்தத்தில் மக்கள் பட்டபாடு போதும் என்று மிகுந்த களைப்படைந்தவராக காணப்பட்டார்.பரிந்து சென்றாவது ஒரு முடிவை எட்டவேண்டும் என்று பாடுபட்டார்.

அவர்களுடைய பக்கமும் நியாயம் இருக்கிறது. அவர்கள் மீது சில தடைகள் போடப்பட்டன. எவ்வளவோ கஸ்டங்களை அனுபவித்தும் எதுவும் அடையமுடியாமல் போய்விட்டது.

ஆனால், கடைசியில் எதுவுமே நடக்கவில்லை. பேச்சுமேசை வெறும் குற்றச்சாட்டுக்களை மாறி மாறி முன்வைக்கும் இடங்களாக மாத்திரமே நடந்து முடிந்தது.

இப்போது அதைவிட, நல்ல நிலையில் இருப்பதாக கருதுகிறேன். நாடாளுமன்றில் சுமந்திரன், சம்பந்தன் ஆகியோர் இருக்கிறார்கள். விக்னேஸ்வரன் அவர்களும் மக்களின் பிரச்சினையை அறிந்தவராக இருக்கிறார். சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் அவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளேயே ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டாதாக தெரியவில்லை. எல்லோரும் பிரிந்துபோய் நிற்கிறார்கள்.

விக்னேஸ்வரனின் பேச்சுக்கள் மிகுந்த களைப்படைந்தவையாக காணப்படுகின்றன. அவர் இன்னொரு துருவத்தில் நின்று பேசுகிறார். இனி, அவர் என்ன சொல்கிறார் என்பதைவிட அவருடைய பெயரை சொன்னாலே தெற்கில் கொதித்துக்கொண்டு எழும்புகிறார்கள்.

ஆனால், எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. இலங்கைக்கு ஒரு தீர்வு வரும் என்று நம்பிக்கை உள்ளது.

கேள்வி – அது எவ்வாறான தீர்வு?

பதில் – எல்லோரையும் சம பிரஜைகள் என்று கருதுகின்ற….

கேள்வி – அப்படியென்றால் என்ன, அந்த தீர்வுக்கு என்ன பெயர் எதுவாக இருக்குமென்று நீங்கள் கருதுகிறீர்கள்? சமஸ்டியா, இப்போதுள்ளது போலத்தானா?

பதில் – சமஸ்டி என்பதை பற்றி கதைக்கவே முடியாத நிலை காணப்படுகிறது. அது முடிந்துபோன கதை. ஆனால், எங்களை நாங்களே ஆழவேண்டும் என்பது மனிதர்களின் அடிப்படை உணர்வு. அந்த அடிப்படையை வைத்து சமஸ்டி என்ற பெயர் இல்லாமல் ஒரு தீர்வு அமையவேண்டும். அதேவேளை, மத்தியில் உள்ள அரசு சில அடிப்படைகளை புரிந்துகொண்ட அரசாக அமையவேண்டும்.

அதாவது, இனத்துக்கு இனம் ஒடுக்கப்பட்டு அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இழந்து முப்பது வருடாக போரிட்டவர்கள் தற்போது ஒன்றாக வாழத்தலைப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களை தாங்கள் ஆட்சி செய்வதைத்தான் விரும்புவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இனப்பெருமை இருக்கிறது. இன அடையாளம் இருக்கிறது, கலாச்சாரம் பண்பாடு இருக்கிறது.

என்ற உண்மையை யதார்த்தத்தை உணர்ந்த மத்திய அரசாக அமையவேண்டும். இந்த கருத்துருவாக்கத்தை இதய சுத்தியுடன் அணுகவும் மதிப்பளிக்கவும் அவர்களுக்கு நேர்மைத்தன்மை வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் முக்கியமாக, பாடசாலை கல்வியில் இந்த பரஸ்பர மரியாதையை கற்பிக்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். அது மிக மிக மிக முக்கியம்.

பதில் – மிக்க நன்றி பேரியல்.

பேரியல் அஸ்ரப் மெல்பேர்னிலிருந்து எதிரொலிக்கு வழங்கிய செவ்வி
செவ்வி கண்டவர் : ப.தெய்வீகன்

Our Facebook Page

Archives