ரசிகன்… | சமூகம் | ஜீ உமாஜீ

0
152

யாழ் நகரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது யாழின் அடையாளமான ரோசா பஸ்!

எனக்கருகே இருந்தவர் அடிக்கடி பதட்டமானார். “ஏழு மணிக்கு கொழும்புக்கு பஸ், அதுக்கிடையில கொண்டுபோய் விடுவியளோ?” என்று அடிக்கடி நடத்துனரைப் பார்த்துக் கேட்டார்.

தாமதமாக வந்துவிட்டதாகக் குறைபட்டுக் கொண்டார். ஓட்டுனருக்குப் பக்கத்திலிருந்த கடிகாரம் ஆறு நாற்பத்தைந்து காட்ட, மிக டென்ஷனாகிவிட்டார். அது பிழையான நேரம் என்று என் செல்பேசியைக் காட்டினேன். உடனே தனது செல்பேசியிலும் பார்த்து, உறுதிப்படுத்தி ஆசுவாசமானார்.

“நேரம் பிழையப்பா.. பதினஞ்சு நிமிஷம் முந்திப்போகுது. உதப்பாத்தெல்லே கோதாரி நான் பயந்துட்டன்” உடனே நடத்துனருக்குத் தெரிவித்தார். ‘ஆமாம் பிழைதான்’ படுகூலாக நிதானப் புன்னகைத்தார் நடத்துனர்.

இந்தக் கலவரத்துக்குள் ‘செங்குருவி செங்குருவி’, ‘பதினெட்டு வயது இளமொட்டு..’ பாடல்கள் முடிந்து, எஸ்பிபி அடுத்தபாடலுக்கு ஆலாபனை செய்துகொண்டிருந்தார். அதற்குமுதல் கேட்டதில்லை. ‘உழைப்பாளியும் நானே, தமிழரசனும் நானே’ என்றெல்லாம் வரிகள். கூடவே இன்னொரு குரலும் சேர்ந்து ஒலித்தது. கலவரத்தை ஏற்படுத்திய பக்கத்து சீற் அண்ணனேதான்.

எல்லாவரிகளும் அவருக்குத் தெரிந்திருந்தது. சற்றுமுன் கலவரத்திலீடுபட்டதாலோ என்னவோ மூச்சு வாங்கியபடியே சொல்லிக் கொண்டிருந்தார்.

‘ஒரு சோலைக்குயில் சோடிதன்னை’ பாட்டு ஆரம்பித்தது. ‘அட! இந்தப்பாட்டா? இதற்குமுன் நாம் சரியா முழுசாக் கேட்கவில்லையோ’ – நினைத்துக் கொண்டேன். அப்படியானால் பக்கத்திலிருப்பவர் தீவிர ரஜினி ரசிகராயிருக்க வேண்டும். அதுவும் உழைப்பாளி காலத்தவர். திரும்பிப் பார்த்தேன்.

அவ்வளவு வயதெல்லாம் ஆகியிருக்காது. ஆனால் கண்ணுக்குக் கீழ், கழுத்து, வயிறு என மானாவாரியாகத் தொப்பை வைத்திருந்தார். மூச்சிரைத்தபடிதான் வசனம் பேசினார். மிகவும் களைப்படைந்தவர் போலத் தோன்றினார்.

தலைவர் உற்சாகமாக ஓடியாடி நடிக்கும்போது ரசிகர்கள் களைப்படைந்து, முடியாத நிலைமையில் இருப்பது கொடுமையாக இருக்கிறது. நடிகர் போலவே ரசிகர்களும் இருக்கவேண்டுமென்றோ, அவர்களைவிட இளமையாக இருக்கவேண்டுமென்றோ அவசியமில்லை. இந்த இடத்தில் சிவாஜி ரசிகர்கள்பற்றிச் சொல்லவேண்டும்.

எனக்குத் தெரிந்து இன்றும் சில சிவாஜி ரசிகர்கள் இருக்கிறார்கள். வயது அறுபது கடந்தவர்கள். இப்போதும் உடுத்தும் உடையில் அவ்வளவு நேர்த்தி. தலை, தாடியில் கவனிப்பு. குளிர் கண்ணாடி என ஸ்டைல் மனிதர்களாகவே இருக்கிறார்கள். மிஸ்டர் பெர்ஃபெக்ட் மாதிரியான அணுகுமுறை. எம்ஜிஆர் ரசிகர்கள் உடுத்தும் ஆடை, தலைமுடி எல்லாம் அலட்சியமாகவே இருக்கும். எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகும் கொண்டாட்டமான மனிதர்கள்.

இந்த இரு தரப்புமே தங்களின் தலைவர்களை இளமையிலிருந்து அவர்களின் முதுமை வரை (எம்ஜிஆரை முழுமையாக அப்படிச்சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு) அப்படியே ஏற்றுக்கொண்டு ரசித்தவர்கள். தங்கள் சிறுபராயத்திலிருந்து இன்று தங்கள் முதுமைவரை. அவர்களின் தலைவர்கள் அவர்களைவிட வயதாக, அப்படியே திரையில் தெரிந்தார்கள். அவர்கள் தளர்ந்தபோது, இவர்களும் தளர்ந்து அப்படியே ஏற்றுக்கொண்டு ரசித்தார்கள்.

ஆனால் ரஜினி விஷயத்தில் தலைவர் உற்சாகமாக ட்ரிம்மாக இருக்கிறார். விரைவாக நடக்கிறார். ஆடுகிறார். இருபது வயது கதாநாயகியுடன் காதலுற்று, சண்டைபோட்டு நடிக்கிறார். ஆனால் ரசிகர்கள் பலரின் நிலைமை சொல்லும்படியாக இல்லை. கொடுமை என்னவெனில் இந்த ரசிகர்கள் வயதானவர்கள் அல்ல. சற்றே முதிர்ந்த இளைஞர்கள். அவர்கள் மனதளவில் களைப்படைந்து விட்டார்கள். அதற்கு ரஜனியும் முக்கிய காரணம். இருபது வருடங்களாக ‘வருவேன், வந்துட்டே இருக்கேன் வந்த்த்து….ட்டே..’ எனப் போக்குக் காட்டிக்கொண்டே அவர்களை ஒருவழி செய்துவிட்டார்.

கமல் ரசிகர்கள் பற்றியெல்லாம் தெரியவில்லை. தற்போது தம் தலைவரின் அதிரடி நடவடிக்கைகளைப் பார்த்து மிகவும் பெருமையாக உணர்வார்கள் எனத்தோன்றுகிறது. உண்மையில் யாழ்ப்பாணத்தில் இருதசாப்தகால ரஜினி, கமல் ரசிகர்கள் இருக்கிறார்களா? இருந்திருக்கிறார்களா? என்று குழம்பும் அளவுக்கு யுத்தகால சூழ்நிலை அமைந்துவிட்டது. பிறகு வந்தவர்களுக்கு இந்த நிலைமை.

நம் தலைவர் வயதாகியும் உற்சாகமாக தோன்றும்போது நாம் மூச்சு வாங்கிக்கொண்டு, இருந்தால் எழும்ப கஷ்டம் , எழுந்தால் உட்காரக் கஷ்டம் என்கிற உபாதைகளோடு ‘தலைவர் சூப்பரா ஆடுராரில்ல..’ இருமிக்கொண்டே பலவீனமாகக் கைதட்டுவதுதான் எவ்வளவு கொடுமையானது!

அஜித் ரசிகர்களுக்கு கடவுளேயென்று இந்தப் பிரச்சினையே வராது. ஆனால் விஜய் ரசிகர்கள் நிலை மிகுந்த கவலைக்கிடம். ஒவ்வொரு வருடமும் விஜய்க்கு ஒருவயது குறைகிறது. இன்னும் உற்சாகமாக ஆடுகிறார். எனக்குத்தெரிந்த தீவிர விஜய் ரசிகர்கள் பலர் இப்போதே ஜெயசங்கர் ரசிகர்கள் போல ஆகிவிட்டார்கள். ‘பூவே உனக்காக’ படம் வந்தபோது கல்யாண வயதிலிருந்துகொண்டு, ‘காதல்ங்கிறது ஒரு செடியில பூக்கிற..’ வசனம் பேசியவர்கள் இன்று தமது மகள்களின் காதலை எதிர்ப்பதில் பிசியாக இருக்கிறார்கள்!

பஸ் நின்றபோது அவசரமாக தனது பையை எடுத்துக்கொண்டு மூச்சிரைத்தபடியே இறங்கினார் அந்த ரசிகர். என்ன இருந்தாலும் காலம் ரஜினி ரசிகர்களைத்தான் அதிகம் சோதிப்பதாகத் தோன்றுகிறது.