featued_image

செக்ஸ் பற்றி என்ன தெரியும்?

auhtor

on
2018-04-18


By :
Oorukai

‘‘செக்ஸ் பற்றி என்ன தெரியும்?’’
என் 12 வயது தம்பி மகிழனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். நீண்ட நாட்களாகவே இது பற்றி அவனிடம் பேச வேண்டும் என நினைத்திருந்தேன். சரியான பருவத்தை அவன் எட்டும்போது பேசுவதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்பதால் பொறுமை காத்தேன். நாங்கள் இருவர் மட்டும் பேசிக்கொள்கிற சூழல் வாய்த்த போதுதான் இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டேன். என்னிடமிருந்து இப்படியொரு கேள்வியை எதிர்பார்த்திராதவன் சற்று தயங்கினான். தோழமையோடு அவனை அணுகி அவன் தயக்கத்தைக் களைத்தேன். அவன் தெரிந்து கொண்டிருந்தது என்னவென்றால் செக்ஸ் என்றால் போர்னோகிராஃபி. ஊரில் இருக்கும் பிரவுசிங் செண்டருக்கு இவன் கேம் விளையாடப் போவான். இவனது வயதையொத்த சக மாணவன் கேம் விளையாடுவதற்காக காசு வாங்கி வந்து போர்னோ படங்களைப் பார்ப்பானாம். எனது 12வது வயதில் திரைப்படக் காட்சிகளின் தாக்கத்தில், ஆணும் பெண்ணும் காலோடு கால் உரசுவதுதான் செக்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தலைமுறை இடைவெளி என்பது இதுதான்.

அப்படியே எங்கள் உரையாடல் நீண்டது… ஒளிவு மறைவின்றி ஒவ்வொன்றாக சொன்னான். ‘‘சரி… உன்னை யாராவது தப்பா தொட்டாங்கன்னா உனக்குத் தெரியுமா’’ என்று கேட்டேன். ‘‘தெரியும்ணா’’ என்றவன் அடுத்ததாக ஓர் அதிர்ச்சியைக் கொடுத்தான். ‘‘பஸ்ஸுல ஒரு ஆள் என்னைய தப்பாத் தொட்டான்’’ என்றான். ஒரு நிமிடம் படபடப்புக்கு ஆளாகிப் போனேன். ‘‘அப்புறம் நீ என்ன பண்ணுன’’ என்றேன். ‘‘கண்டக்டர்கிட்ட சொன்னேன்… அவர் வந்து அந்தாளை நீயெல்லாம் மனுசனாடான்னு திட்டுனாரு’’ என்றான். இந்த சம்பவம் நடந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இது பற்றி அவன் எங்கள் யாரிடமும் தெரிவிக்கவில்லை. ‘‘ஏண்டா வீட்டுல சொல்லல’’ என்றதற்கு ‘‘இதையெல்லாமாணா வீட்டுல சொல்லுவாங்க’’ என்றான். ‘‘சரி நீ வீட்டுல சொல்ல வேண்டாம். அண்ணன் எங்கிட்ட மட்டும் சொல்லு. எதுன்னாலும் சொல்லு’’ என்று சொல்லி விட்டு சரியான தொடுகை எது? தவறான தொடுகை எது? என்கிற விளக்கத்தையும் கொடுத்து விட்டு வந்தேன்.

பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளும் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளின் பிரச்னையளவுக்கு ஆண் குழந்தைகளின் பிரச்னைகள் வெளிப்படுவதில்லை. என் தம்பியிடம் இது குறித்துப் பேச வேண்டும் என நினைத்ததற்கான காரணம் நான் எதிர்கொண்ட அனுபவங்கள்தான். சிறுநீர் கழிக்கும்போது பிறப்புறுப்பை வெறித்துப் பார்க்கிறவர்கள் இல்லாத பேருந்து நிலையங்களே இங்கு கிடையாது. பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவன் எதேர்ச்சையான செயல் போல அத்துமீறித் தொட முயல்வதை நான் பல காலமாகவே எதிர்கொண்டு வருகிறேன். சென்னைக்கு வந்த புதிதில் பழவந்தாங்கலில் இருந்து ரயிலில் மாம்பலத்துக்குச் சென்ற போது கூட்ட நெரிசலில் மர்மமான ஒரு தீண்டலை உணர முடிந்தது. அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். ரயில் நின்றதும் ஒவ்வொருவராக இறங்க அவன் அகப்பட்டான். இறுக்கத்தை நான் தளர்த்தாமல் அவனை முறைத்துப் பார்த்தேன். அவன் கையை உதறி விட்டு வேகமாகக் கிளம்பி விட்டான். இன்னொரு சம்பவம், ஊருக்குப் போவதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். பண்டிகை நேரம் என்பதால் சேலம் பேருந்துகள் நிரம்பி வழிந்தன. அருகே நின்றிருந்த 35 வயது மதிக்கத்தக்கவன் “வேலூர் போய் போனால் கூட்டமாக இருக்காது” என்று சொன்னான். சரி என்று நானும் வேலூர் போய் சேலம் போகத் தீர்மானித்தேன். அவனும் நானும் ஒன்றாகவே கிளம்பினோம். பேருந்து ஏறியதிலிருந்து என்னை ஆட்படுத்தப் போராடிக் கொண்டே இருந்தான். நான் அவனைத் திட்டவில்லை, கூச்சல் போடவில்லை ஆனால் ஒரு போதும் அது மட்டும் நடக்காது என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டேன். இப்படி இன்னும் சில சம்பவங்கள் இருக்கின்றன.

பெண் பருவமெய்துவது இங்கு விழாவாகக் கொண்டாடப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் ஓர் ஆண் பருவமெய்துவது குறித்த எந்த விசாரணையும் இங்கில்லை. முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவேனும் பெண்களுக்கான விழிப்புணர்வு தாய் மற்றும் உறவினர்கள் மூலமாக ஏற்படுத்தப்படுகிறது. ஆணுக்கு அப்படியான எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதில்லை. பாலுறவு சார்ந்த வயதுக்கான கேள்விகளையும், குழப்பங்களையும் சரியான முறையில் தீர்த்து வைக்கும்படியான கல்வித்திட்டம் இங்கில்லை. பெற்றோர்களிடமும் அதற்கான புரிதல் இல்லை. பாலியல் வன்முறை என்றாலே அது பெண்கள் மீது நிகழ்த்தப்படுவது என்கிற பிம்பம் உருவாகியிருக்கிறது. அமீர்கான் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சத்யமேவ ஜெயதே’வில் ஒரு பகுதியைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். குழந்தையாக இருந்த போது குடும்ப நண்பர் ஒருவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான ஒரு இளைஞர் அந்த மோசமான அனுபவத்தைக் கூறிக் கொண்டிருந்தார். oral sex க்கு என்னை அவர் வற்புறுத்தினார் என்று அந்த இளைஞர் சொல்கையில் அரங்கமே நிசப்தத்தால் நிரம்பியிருந்தது. இது பற்றி அவர் பெற்றோரிடம் புகார் சொல்லியும் அவர்கள் அதை நம்பவில்லை என்பதை வேதனையோடு தெரிவித்தார். இங்கு இதுதான் பிரச்னை. ஒருவர் மீது நாம் நன்மதிப்பு கொண்டிருக்கிறோம் என்பதற்காக அவர் இப்படியெல்லாம் செய்யமாட்டார் என்கிற முடிவுக்குள் வரத் தேவையில்லை. மனித மனத்தில் ஒளிந்திருக்கும் மிருகத்தனம் எளியவர்கள் மீது மட்டுமே பாயும். தன்னை எதிர்க்கத் துணிவில்லாதவர்கள் மீதுதான் இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறது. 70 வயது மூதாட்டி மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறையே இதற்கு உதாரணம்.

உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஆசிரியர்கள் என இந்த சமூகத்தில் ஒரு குழந்தை யாரால் வேண்டுமானாலும் பாலியல் தொந்தரவுக்கு ஆட்படுத்தப்படும் அபாயகரமான சூழல் இங்கு நிலவுகிறது. நாம் நம் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியின்றி, மனச்சோர்வுடன் காணப்பட்டார்கள் என்றால் அதை என்னவென்று விசாரிக்க வேண்டும். பாலியல் வன்முறைக்கு அவர்கள் ஆளானது தெரிய வரும்போது victim blaming செய்யக்கூடாது, உதாரணமாக விளையாடச் சென்ற இடத்தில் அவர்கள் இந்த வன்முறைக்கு ஆளானார்கள் என்றால் “நீ ஏன் விளையாடச் சென்றாய்”? என்று கேட்கக் கூடாது. ஒரு குழந்தை ஓர் குற்றச்சாட்டை முன் வைக்கும்போது அதனை அலட்சியமாகக் கடந்து விடக் கூடாது. அதைக் காது கொடுத்துக் கேட்டு பிரச்னையின் தீவிரத்தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். நிறைய குழந்தைகளுக்கு தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம் என்பது கூடத் தெரியாது. ஆகவேதான் குட் டச், பேட் டச் குறித்த புரிதலை ஏற்படுத்தக் கூறுகிறாரகள். பாலியல் வன்முறைக்கு ஆளாகி அதை வெளியே சொல்ல பயந்து, தொடர்ச்சியாக துன்புறுத்தலை சந்திக்கும் குழந்தையின் மனநிலை வார்த்தைகளால் விவரிக்கவியலாத துயரங்களால் நிரம்பியது. செக்ஸ் கல்வி என்கிற வார்த்தையே இங்கு கொச்சையான வார்த்தையாக்கப்பட்டிருக்கிறது. பாலியல் வன்முறை என்றால் என்ன? அந்த வன்முறையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? என்பதோடு உடலியல் சார்ந்த புரிதலை ஏற்படுத்தும்படியான பாடத்திட்டத்தை வடிவமைப்பது இன்றைய காலத்தின் தேவை.

கட்டுரையாளர் : கி.ச.திலீபன்

Our Facebook Page

Archives