featued_image

ஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு

auhtor

on
2018-04-20


By :
Oorukai

“மாத்தளனில் ஆமியாம்.”

“ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்”

“நிறைய சனம் செத்தும் போச்சாம்”
சனம் நிறைய உள்ளே போயிட்டுதாம்,” – என்று எம்செவிகளுக்கு கிடைத்த அந்தச் செய்தியோடுதான் 2009 ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது.

முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் (சக பத்திரிகையாளர்) ஓடிப்போனோம். காயப்பட்டவர்களைக் கடலால் இறக்கி, அங்கிருந்து வாகனங்களில் கொண்டு வந்திருந்தார்கள். காயமடைந்தவர்களை படகிலிருந்து இறக்கி வாகனங்களில் ஏற்றும் வேலையில் களைத்தே போயிருந்தேன். முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இடம்போதாமையால் முன்பக்க காணியில் உள்ள மரங்களுக்கு கீழே தரப்பாள் விரிக்கப்பட்டு அதில் காயமடைந்தவர்களை கிடத்தினோம். அன்று காலையில் எம்மால் எந்த விபரங்களையும் எடுக்கக்கூடிய நிலை இருக்கவில்லை. எங்களாலும் அது முடியவில்லை. நாலாபக்கமிருந்து எறிகணைகளும், ரவைகளும் மக்களை துளைத்துக்கொண்டிருக்கையில், பத்திரிகையாளர்களாக இருந்தும் எங்களின் முதல்பணியாக காயப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு – மருத்துவமனை மாதிரி இருந்த இடங்களுக்கு கொண்டுசெல்வதாகவே இருந்தது. இந்த வேலைக்குள்ளேயே ஊடகப் பணியையும் செய்துகொண்டோம்.

அன்றைய தினம் மாலை எம்மால் முடிந்தவரையில் காயமடைந்தவர்களின் விபரங்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்களைச் சேகரித்தோம். ஆனாலும் முழுமையாக விபரங்களைப் பத்திரிகையில் வெளியிடமுடியவில்லை.

சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் சுரேன் கார்த்திகேசு
காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் சுரேன் கார்த்திகேசு

முல்லைத்தீவு நகரப்பகுதிக்கு அருகருகே அமைந்துள்ள முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, புதுமாத்தளன் ஆகிய கடற்கரைக்கிராமங்களில் வைத்தே அதிகளவு தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்டார்கள்.  அதுவும் இன்றைய நாளில் , (ஏப்பிரல் 20. 2009) ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் இராணுவத்தின் எறிகணை வீச்சிலும், துப்பாக்கிச் சூட்டிலும் பலியாகியிருந்தனர். எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீண்டும் சுட்டும், பதுங்குகுழிகளில் இருந்த மக்கள் மீது கைக்குண்டுகளை வீசியும் படுகொலை செய்திருந்தனர்.  என் வாழ்நாளில் நான் சந்தித்த முதலாவது பெரிய மனித அவலம் என்றால் இதைத்தான் குறிப்பிடுவேன்.

இன்றைய நாள் கடுங்குளிராக இருந்தது. ஆயினும் இரத்தம் கொதிக்கும் அந்தப் பேரவல நினைவுகளை மறக்க முடியவில்லை. கண்ணுக்கு முன்னால் கூட்டுப்படுகொலையானவர்களை எப்படி மறப்பது? அந்த நினைவுகளோடுதான் இன்றும் நான் வேலைக்குப்போனேன். ஏதாவது எழுதினால் ஒரு ஆறுதல் கிடைக்கும் என யோசித்தபடியே கனிணிக்கு முன்னால் அமர்கையில் மருத்துவர் வரதராஜா துரைராஜா நினைவில் வந்தார்.

இறுதிப் போர்வேளையில் மக்களோடு நின்று மருத்துவப் பணியாற்றியவர் மருத்துவர் வைத்தியர் வரதராஜா துரைராஜா. போர்க்காலத்தில் முல்லைதீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளராகப் பணியாற்றிய இவர், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.

இராணுவம் புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு மிகக்கிட்டிய தூரத்தில் நிற்கும்போது, மருத்துவர் வரதராஜா துரைராஜா அவர்களும்,  இன்னொரு மருத்துவப்பணியாளரும் வலைஞர்மடம் பகுதியில் இருந்து கடற்கரை வழியாக புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் முக்கியமான மருந்துப் பொருட்களையும் மீட்டு வந்திருந்தனர்.

அவருக்கு அழைப்பெடுத்தேன்.  என் மனநிலையில்தான் அவரும் இருக்கிறார் என்பதை முதல்கட்ட உரையாடலிலேயே உணர்த்தினார். அன்றைய நாளில் நிகழ்ந்த பல சம்பவங்களை அடுக்கினார்.

மருத்துவபணியாளர்களின் அர்ப்பணிப்பான பணிகளையும் அவர்கள் தங்கள் குடும்பங்களை பற்றிக்கூட நினைக்காமல் காயமடைந்துவரும் மக்களுக்கு சிகிச்சை அளித்த அத்தனை பேரும் மதிப்புக்குரியவர்கள் என்றும், அவர்கள் அனைவரின் பெயர்களையும் நினைவு வைத்தச் சொன்னார்.  அதைப் பற்றி வேறொரு பதிவில் குறிப்பிடுகின்றேன்.

அன்றைக்கு புதுமாத்தளனில் என்ன நடந்தது டொக்டர்? எனவும் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன்.

மருத்துவர் வரதராஜா துரைராஜா

 “அப்ப நாங்கள் வலைஞர்மடத்தில் தங்கியிருந்தனாங்கள். அன்றைக்கு காலம எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. புதுமாத்தளனுக்கு ஆமி வந்திட்டான் என்றும், காயப்பட்டும் நடக்கக்கூடிய நிலையிலயிருந்த காயக்கார நோயாளர்கள், அவையளப் பராமரிச்சி வந்த மருத்துவ பணியாளர்கள் எல்லாரும் சேர்ந்து ஆமிக்குள்ள போயிட்டினமாம் என்பதுதான் அந்தத் தகவல். நான் அங்கை ஒருக்கால் போய் பார்த்திற்று வருவம் என்று வெளிக்கிட்டன். என்னை ஒருத்தரும் விடயில்லை. எப்பிடியாவது போய்பார்க்கோணும் என்ற முடிவோட, காலம 9.30 மணிக்கு நானும் இன்னொரு மருத்துவ பணியாளரும் கடற்கரை வழியா புதுமாத்தளன் நோக்கிப் போனம்.  புதுமாத்தளன் ஆஸ்பத்திரிக்கு பக்கத்தில் உள்ள ஒழுங்கைக்குள்ளால எங்கட வாகனம் போனதைக் கண்ட இராணுவம், எங்கள நோக்கி சராமரியாக சுடத்தொடங்கீற்றாங்கள். நாங்கள் வாகனத்தை விட்டு இறங்கி அருகில் உள்ள பனைமரங்களுக்குள் ஒளிச்சி ஒளிச்சி ஆஸ்பத்திரிக்குள்ள ஓடிற்றம்….”

வரைபடத்தில் தாக்குதல் இடம்பெற்ற மருத்துவமனை

ஆஸ்பத்திரிக்குள்ள எட்டிப்பார்த்தால்,  கனபேர் செத்துக்கிடக்கினம். செத்த ஆக்களுக்குள்ள முனகல் சத்தமும் கேட்குது. யார் உயிரோட இருக்கினம், யார் செத்துப்போச்சினம் என்று கண்டுபிடிக்கவே சிரமமாயிருந்தது.  மறுபக்கம் சண்டையும் நடந்துகொண்டிருக்கு. வெடிச்சத்தங்கள் எங்களுக்கு மிகக் கிட்ட கேட்குது. ஆஸ்பத்திரி யன்னலால் எட்டிப்பார்த்தன்,  நூறு மீற்றர் தூரத்துக்குள்ள ஆமி நிக்கிறான். அந்த இடத்தில இருந்து காயமடைஞ்ச ஆக்களுக்கு சரியாக சிகிச்சை செய்ய முடியேல்ல. அதில இருந்து எங்களோட வர விரும்பின ஆக்களையும், அந்த ஆஸ்பத்திரியில் இருந்த முக்கியமான மருந்துசாமான்கனையும் அங்க நின்ற இன்னொரு வாகனத்தில் ஏத்தனம். வெளியால வாகனத்தை எடுத்தால் ஆமி சுவான். ஆனாலும் நடக்கிறது நடக்கட்டும் என்று சொல்லிக்கொண்டே, மின்னல் வேகத்தில், . வாகனத்தை ஆஸ்பத்திரிக்கு முன்புறமாக செலுத்தி அருகில் உள்ள ஒழுங்கையால கடற்கரைக்குப் போய், அங்கயிருந்து முள்ளிவாய்க்கால் போனம். அன்றைய நாளில் எவ்வளவு சனம் செத்தது எண்டு என்னால சொல்லமுடியாமல் இருக்கு. கண்கெட்டின இடமெல்லாம் செத்த ஆக்களும், காயப்பட்ட ஆக்களும்தான் கிடந்தவை. அவ்வளவு பேரவலத்துக்குள்ளயும் சிலர காப்பாற்றின திருப்தி மனதுக்கு ஒரு ஆறுதலாயிருக்கு..“

எனச் சொல்லி முடிக்கையில், இருவரின் உரையாடலுக்கும் நடுவில் அமைதி ஏற்பட்டது. அந்த அமைதிப்பொழுது நிறைவடைய மீண்டும் பேசினோம். அவற்றை இன்னொரு பகுதியில் எழுதுகின்றேன்.

சுரேன் கார்த்திகேசு

Our Facebook Page

Archives