இன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு

0
409

எறிகணைகள் வீழ்ந்து வெடித்த இடங்களில் காயப்படும் மக்களை நான் நிழற்படம் எடுக்கும் போது, “ நீங்கள் இரத்தம் கக்கி சாவிங்களடா” என்று மக்கள் கண்டபடி பேசுவார்கள். அவர்களும் பாவம். வயிற்றுப்பசி, மரண பயம், உறவுகளை இழந்துகொண்டிருக்கும் துயரம், தங்களை பாதுகாத்தக்கொள்ள முடியாத பரிதாப நிலை என அவர்களும் எவ்வளவு கஸ்ரங்களைத்தான் அனுபவிப்பது. எனவே அவர்களின் நிலையுணர்ந்து அந்தக் கோபப் பேச்சுக்களை பொருட்படுத்தாமல் பணிசெய்துகொண்டிருந்த நாட்களவை.

மோகன் அண்ணையை இரண்டு நாட்களாகக் காணவில்லை. (எம்முடன் வேலை செய்தவர்) வேலைக்கும் வரவில்லை. நானும் அன்ரனியும் அவரைத் தேடி வீட்டிற்கு போனோம். அவர் அங்கு இல்லையென்றும், கடற்கரைப் பக்கமாகப்  போய்விட்டார் என்றும் அவரது மனைவி சொன்னார். வழமையாக நான் மோகன் அண்ணையின் வீட்டுக்குப்போனால், அவரது குழந்தையை தூக்கிக் கொஞ்சுவேன். அன்றும் அதே எண்ணத்தில்,  “மகள் எங்கை அக்கா? கூப்பிடுங்கோ”  என்றேன்.

“முந்தநாள் என்ர பிள்ளையை பறிகொடுத்திட்டனே” என்று பெரிதாக அழத்தொடங்கிவிட்டார்.

அவரை ஆறுதல்படுத்திவிட்டு, மோகன் அண்ணையைத் தேடிக் கடற்கரைக்கு போனோம். அங்கே மகளைப் புதைத்த இடத்தில் மோகன் அண்ணை அழுதுகொண்டிருந்தார். அந்த சமயத்தில் எங்களால் ஆறுதல் எதனையும் சொல்லமுடியவில்லை. நாங்களும் அவ்விடத்திலேயே அமர்ந்து விட்டோம்.
பின்னர் மோகன் அண்ணையைக் கூட்டிக்கொண்டு ஈழநாதம் பத்திரிகையின் அச்சு இயந்திரங்கள் வைத்திருந்த பகுதிக்கு வந்தோம்.

மோகன் அண்ணை மிகவும் முக்கியமானவராக இருந்தார். கணனி மற்றும் அச்சு இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதில் சிறப்புச்தேர்ச்சி கொண்டவர். அவர் இல்லாமல் பத்திரிகையை வெளியிடமுடியாது என்று எங்களுக்கு தெரியும். அவரே தன் மனதை தேற்றிக்கொண்டு மூன்றாவது நாள் பணியினை மீண்டும் தொடர ஆரம்பித்துவிட்டார்.

இதுதான் அவர் வலிசுமந்து வலிமைபெற்ற வாழ்க்கை.

நான், ஜெகன்,  மோகன் அண்ணை,  சுகந்தன் அண்ணை,  அன்ரனி, தர்சன் ஆகிய ஆறு பேரும் இரவிரவாகக் கதைத்துக்கொண்டிருப்போம். சண்டை தொடங்க முதல் இப்படி நாங்கள் கதைப்பதில்லை. ஏனென்றால் தர்சன் கணனிப்பிரிவு, சுகந்தன் அண்ணை இயந்திரப்பிரிவு, நான் செய்திப் பிரிவு, மோகன் அண்ணை இயந்திரம் மற்றும் முகாமைத்துவப்பிரிவு, ஜெகன் தொடர்பாடல் பிரிவு என வேறுபட்ட பணிகளில் இருந்தபடியால் நாங்கள் தொடர்ச்சியாகக் கதைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அன்ரனியும் நானும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அவரின் வீட்டிற்கும் செல்வேன்.

ஏப்ரல் 25 அன்று காலை மோகன் அண்ணையும் சுகந்தன் அண்ணையும் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அச்சு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நான் சென்றவுடன், “ எங்க சுரேன் இன்றைக்குப் போறிங்கள்” என்று சங்கீதன் அண்ணை  கேட்டார். நான் “வலைஞர்மடம்” என்று சொன்னவுடன், “சரி இவயளோட நீங்களும் போங்கோ” என்று சொன்னார். நான், சுகந்தன் அண்ணை, மோகன் அண்ணை ஆகியோர் வலைஞர்மடத்திற்குப் பயணமானோம்.

அன்றைய தினம் சுகந்தன் அண்ணைக்கு காய்ச்சலும் காய்ந்தது. அந்நோயோடுதான் எங்களோடு வந்தார்.

போர் உக்கிரமாக நடைபெறும் ஒரு இடத்திற்கு செய்தி சேகரிக்க செல்பவர், அன்றைய களநிலைமைகளை ஓரளவுக்காவது கேட்டறிந்திருக்க வேண்டும். அன்று நான் யாரோடும் கதைக்கவில்லை. காலை நேரம் என்றபடியால் எனக்கும் யாருடனும் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆமி முன்னேறி அந்த இடத்திற்கு வந்திருந்தது முன்னரே தெரிந்திருந்தால் அவ்விடத்திற்கு நாங்கள் போயிருக்கமாட்டோம். ஒரு செய்தியாளனாக அன்றைக்கு நான் தோற்றுப்போய்விட்டேன் என்ற நெருடல் இன்றைக்கும் இருக்கிறது.

25.04.2009 காலை 9.30 மணியிருக்கும். சுகந்தன் அண்ணையின் தலை சிதறுவதை என் இரண்டு  கண்ணாலும் பார்க்கும்போது “வதனி அக்கா மூன்று பிள்ளைகளோட இனி என்ன செய்யப்போறா” என்ற எண்ணம் மின்னியது.  அப்படியே கடற்கரையில் படுத்துவிட்டேன். “சுகந்தனை விட்டிட்டு சுரேனை தூக்கி வந்திட்டாங்கள் என்று வதனி அக்கா இப்பவும் நினைப்பா…! என்று நினைக்கிறன். அன்றைக்கு நான் தப்பித்து வந்திருக்கலாம். இராணுவம் எங்களுக்கு மிக அருக்கில் நிற்கிறது எனத் தெரிந்தும் அவரை நான்  தூக்கிவரப்போனேன். எனக்கு நெஞ்சில் வெடி விழுந்தது. அதற்குப் பின்னர் என்னால் மூன்று மீற்றர் தூரத்தில் இருக்கின்ற சுகந்தன் அண்ணையைத் தொடக்கூடமுடியவில்லை.

நான் கீழே விழுந்தவுடன் நெஞ்சிலிருந்து அதிகளவு இரத்தம் வெளியேறியது. கடற்கரை மணல் ஒருகைப்பிடியளவு எடுத்து  நெஞ்சை அடைத்தேன். அதன் பிறகு மூக்காலும் வாயாலும் இரத்தம் பீறிடத்தொடங்கியது. அப்படியே மயங்கிவிட்டேன்.  அது அரைமயக்க நிலை.  சற்றுநேரத்தில் “சுரேன் ஏலுமென்றால் ஓடிவா.. ஆமி உங்கால தான் சுடுறான்” என மோகன் அண்ணை அபாயக்குரல் எழுப்புவது கேட்கிறது. அரைமயக்கம்.  எதுவுமே தெரியவில்லை. குரல் வந்த திசையை நோக்கி ஓடினேன். (மோகன் அண்ணை சொல்லித்தான் ஓடிய சம்பவம் தெரியும்)

ஓடிக்கொண்டிருக்கிறேன். வெடிச்சத்தங்கள் கேட்கின்றன. நான் சாகப்போவதைப் போலிருந்தது. “சுரேன் கொஸ்பிட்லுக்கு போவம்” என்று மோகன் அண்ணை சொல்லிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் நான் “கறுப்பு கொம்பியூட்டர், கறுப்பு கொம்பியூட்டர்” என்று முனகினேனாம்.

அந்தக்கறுப்புக்கொம்பியூட்டரில் அப்படி என்ன தான் இருந்தது?
அந்தக்கறுப்புக்கொம்பியூட்டரில் தான் அதிக நிழற்படங்கள் சேமிக்கப்பட்டிருந்தன. இதுவரையில் பத்திரிகையில்கூட வெளிவந்திராத பல நிழற்படங்கள் அதிலிருந்தன. விடுதலைப்புலிகளின் முக்கியமான தளபதிகள், அரசியல் பிரமுகர்கள், அரச தரப்பு பிரமுகர்களின் நிழற்படங்கள் உள்ளடங்கலாக சமாதான காலப்பகுதில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள், விளையாட்டுக்கள், வீரச்சாவு நிகழ்வுகள், நாளாந்தம் செய்தியாளர்களினால் எடுக்கப்பட்ட நிழற்படங்கள், இறுதி காலத்தில் இடம்பெற்ற விமானத்தாக்குதல்,  எறிகணைத் தாக்குதல் ஆகியவற்றின் நிழற்படங்கள் என பல்லாயிரக்கணக்கான நிழற்படங்களை அதில் சேமித்துவைத்திருந்தேன். செந்தோழன் அண்ணையும், அன்புமணி அண்ணையும் தந்த நிழற்படங்கள் பலவற்றையும் அதனுள்ளேதான் சேமித்து வைத்திருந்தேன். அவர்கள் இல்லாவிட்டாலும் எப்படியாவது கடைசிவரைக்கும் கொண்டுவந்தேன். ஆனால் கைநழுவிப்போய்விட்டது. என் உயிரைவிட பெறுமதியான அந்த ஆவணங்களை தொலைத்துவிட்டேன் என்ற கவலை இப்போதும் உண்டு.

ஓடமுடியாது நான் விழுந்ததும், மோகன் அண்ணை என்னை இழுத்துக்கொண்டு போயிருக்கிறார். குறிப்பிட்ட தூரம் சென்ற பின்னரே வாகனம் ஒன்றில் என்னை ஏற்றி முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றிருக்கின்றனர். இவ்வளவு சம்பவங்களும் 20 நிமிடத்தில் இடம்பெற்று முடிந்ததாக மோகன் அண்ணை சொன்னார்.

நெஞ்சுப் பகுதியில் பெரிய காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட உள்ளகக் குருதிப்பெருக்கினால் என்னால் சுவாசிக்கமுடியாமல் போய்விட்டது. “இன்னும் கொஞ்சநேரத்தில் நான் சாகபோறன்” என்று அருகில் நின்றவர்கள் கதைத்துக்கொண்டிருந்தார்களாம்.

உள்ளககுருதிப்பெருக்கு என்றால் என்ன?
எங்கள் உடலின் குருதிக்குழாய்கள் பாதிப்படைந்து உடற்குழிக்குள் ஏற்படும் குருதிப்பெருக்கை உள்ளக குருதிப்பெருக்கு (Internal bleeding) என்று அழைக்கின்றனர். நெஞ்சறையில் காயமேற்படும் போது நுரையீரல் / சுவாசப்பைக்கும் நெஞ்சறைச்சுவருக்கும் இடையேயுள்ள புடைக்குழியினுள் குருதிப்பெருக்கு ஏற்படும். அவ்வாறு ஏற்படும்போது நுரையீரல் சுருங்கிவிடுவதால் சுவாசிக்கச் சிரமம் உருவாகி, உயிரிழப்பு ஏற்படும். இதற்காக ஐ.சி. ரியூப் ஒன்றை விலா எழும்புக்கு இடையினால் உட்செலுத்தி நெஞ்சறையில் உள்ள இரத்தத்தை வெறியேற்றும்போது நுரையீரல் சரியாக இயங்கும்.

இந்த முறையிலான சிகிச்சையே முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் எனக்கு வழங்கப்பட்டு உயிர்பிழைக்கச் செய்யப்பட்டேன்.

அப்போதெல்லாம் காயமடைந்தவர்களுக்கு இரத்ததானம் செய்பவர்கள் மிக அரிதாகவே இருந்தனர். காயமடைந்தவர்களின் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர் வழங்கினாலேயொழிய இரத்தம் வழங்க அப்போதைய சூழலில் யாரும் முன்வரமாட்டார்கள். சாப்பாடு இல்லாமல் சளைத்துப்போயிருந்த மக்கள் எப்படி இரத்தத்தை வழங்குவார்கள். இருந்தாலும் ஒரளவு ஆரோக்கியமானநிலையில் இருந்தவர்கள் தாமாகமுன்வந்து இரத்தம் வழங்கும் நிலையும் காணப்பட்டது.

எனக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கு நான்கு மாற்றுக்குருதி பைக்கற்றுக்கள் வரை ஏற்றப்பட்டிருந்தது. எனக்குப் பலர் குருதிக்கொடையளித்திருந்தாலும்,  சிலருடைய குருதி எனக்கு பொருத்தமில்லாததனால் ஏனைய காயமடைந்தவர்களுக்கு அக்குருதி ஏற்றப்பட்டது.
சண்டை ஒன்றில் தன் இரண்டு கண்களையும் இழந்திருந்த மோகனா அக்காதான் எனக்கு மிகுதி குருதி தருவதற்கு முன்வந்திருந்தார். மோகனா அக்கா பற்றி ஊடகவியலாளர் மதி விரிவாக எழுதுவார். மதியும் வைத்தியர் ஒருவருமே முள்ளிவாய்க்காலில் பிறிதொரு இடத்தில் வசித்த மோகனா அக்காவிடம் குருதி எடுத்திருந்தனர்.

இத்தனை பேரின் உழைப்பும் மிககுறுகிய நேரத்தில் எனக்கு கிடைத்தபடியால்தான் நான் இன்று உயிரோடு இருக்கின்றேன். என் உயிரைக் காப்பாற்றத் துடித்தவர்கள் அனைவரும் ஏற்கனவே போர்க்காலங்களில் வலிகளைச் சுமந்தவர்களே. ஒரு பத்திரிகையாளனான என் உயிரை மீட்டதற்காக அவர்களுக்கு என்ன நன்றிக்கடன் செய்யப்போகிறேனோ தெரியவில்லை.

29.04.2009 அன்று மாலை நான்கு மணியளவில் வைத்தியசாலையில் நான் படுத்திருந்த கட்டிலின் பின்புறத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் பலர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினேன்.