featued_image

மரத்தை நாட்டினோம் சரி…நீரூற்றினோமா? | த.லிங்கம்

auhtor

on
2018-04-26


By :
Oorukai

மரபார்ந்த  கிராமிய வழிபாட்டுத் தளங்களில் இடம்பெறும் வேள்வியைத் தடைசெய்தனர். ஏன் என்று கேட்டதற்கு காலமற்றத்திற்கேற்ப நாகரிகமயப்படுத்துகின்றோம் என்றார்கள்.

சைவ ஆலயங்களில் இரவு நேரத்தில் ஒலியெழுப்புவதற்குத் தடையென்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு அதிக ஒலியினால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்றார்கள்.

இப்போது சைவ ஆலயங்களில் வழங்கப்படும் அன்னதானத்திற்கும் தடையென்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு அங்கு அசுத்தமாக உணவு சமைக்கப்படுகிறது என்றார்கள்.

அவநாகரிகமயப்பட்ட சமூகத்தை நாகரிகமயப்படுத்துவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, தனிமனித சுகாதாரத்தைப் பேணுவது என அனைத்துமே நல்ல விடயங்கள்தான். ஆனால் இவை மட்டும்தான் குறித்த பிரச்சினைகளுக்கு முழுமுதல் காரணிகளாக இருக்கின்றனவா?

நாகரிமயப்படுத்தலில், சாதிய ஒடுக்குமுறைகளைக் கைவிட்டோமா? பிரதேச சபை வரைக்கும் சாதிவாக்குகள் பிரித்துப் பரிசோதிக்கப்பட்ட களமாகக் கடந்த தேர்தலை அவதானித்தோம் அல்லவா? இன்றும் பெண்கள் விடயத்தில் சைவ சமயம் கொண்டிருக்கும் சம்பிரதாயங்கள் குறித்து எப்போதாவது கேள்வியெழுப்பினோமா? எனவே சமூகத்தின் மைய சிந்தனையில் நாகரிகமயப்படுத்தலை மேற்கொள்ள விரும்பாத நாம், விளிம்பில் இருக்கும் ஒரு சாராரின் நம்பிக்கைகள் மீது கைவைத்தோம். நாகரிகப்படுத்திக்கொண்டோம்.

அடுத்த விடயம்தான் இன்னும் நகைச்சுவையானது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது. யாழ்ப்பாணத்தின் மிக முக்கிய அடையாளங்களுல் ஒன்று ஆரியகுளம். இராணுவம் சிவில்மயத்துக்குள் கொண்டுவரப்படும் வரைக்கும் அக்குளம் இரவில் குப்பைகொட்டும் இடமாகத்தான் இருந்தது. சேறும், சகதியும் அவ்வழியால் மூக்கைப்பொத்திக்கொண்டு பயணிக்கும் நிலையைத்தான் உருவாக்கிவைத்திருந்தது. இராணுவம் இறங்கி துப்பரவு செய்து அழகாக்கும் வரை நாம் அழகுகெட்ட சுற்றுச்சூழலை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தோம்.

இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். மழை வெகுவாக அற்றுப்போகிறது. நிலத்தடி நீர் வற்றிப்போகிறது. எல்லாவற்றையும் கவனித்து எதிர்கால நோக்கில் ஒவ்வொரு மாவீரர் தினத்திற்கும் மரநடுகை திட்டத்தை மேற்கொள்வோம். அதன்படி வடக்கின் பல பாகங்களிலும் மரங்கள் நடுகைசெய்யப்பட்டன. நடுகை செய்யப்பட்டதோடு சரி. அது முளைத்திருக்கிறதா? நோய்வாய்ப்ட்டிருக்கிறதா என்றெல்லாம் எந்த அரசியல்வாதியோ, அதிகாரியோ கவனிப்பதில்லை. உதாரணத்திற்கு செம்மணி பாலத்தடியில் நடப்பட்டிருக்கும் மரங்களைப் பாருங்கள். அவற்றில் எத்தனை மரங்கள் முளைத்திருக்கின்றன. எத்தனை இறந்துவிட்டன. இறந்த மரங்களுக்கு பதிலீடாக மீள்மரநடுகையும் இடம்பெறவில்லை.

வடக்கு, கிழக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் மரங்களை நட்டுத் தன்னைத் தமிழ் சிவில்மயப்படுத்த பாடுபடுமளவுக்குக்கூட நாம் அக்கறையற்று இருப்பது ஏன்?

மனிதக் காதுகளுக்கு தீங்கைத் தரும் எத்தனை வகை ஒலிகளைக் கேட்டும் கேளாதமாதிரி கடக்கிறோம். மதிய வேளையில் யாழ்.பேருந்து நிலையப்பக்கம் நிம்மதியாக யாரால் போய்வர முடியுமா? இரைச்சலின் நகரமாகவல்லவா அந்த விளம்பர ஒளிபெருக்கிகள் நகரத்தை மாற்றிக்கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்துக்குள் பயணிக்கும் பாண் ரக சிற்றூர்தி சேவைகளில் ஒளிபரப்பப்படும் பாடல் சத்தங்கள் எத்தனைக் காதுகளைச் செவிடாக்கியிருக்கும் என்று யாரிடமும் கணக்கில்லை. பாண், ஐஸ் கிறீம் வியாபாரிகள் எழுப்பும் கீகீசத்தங்களில் இருந்து காதுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க யாரும் இல்லை.  நடுச்சாமம் 12 மணிக்கும் வெறும் இரும்புக்கல்லை தடதடவெனத் தட்டி கொத்துரொட்டி போட்டு, அயல்வீட்டக்காரரையெல்லாம் செவிடாக்கும் உணவுக் கடைக்காரர்களை எந்த அதிகாரிகளும் கண்கொள்வதுகூட இல்லை.

இவ்வளவு ஏன்..? காக்கைதீவில் கொட்டப்படும் யாழ்ப்பாணத்துக் கழிவுகளை அகற்ற, களத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தவிர வேறு என்ன நடவடிக்கை எடுத்தோம்?

தனிமனித உடற்சுகாதாரம் என்ற விடயத்திற்கு வருவோம், இன்றைய நிலையில் மதியம் ஒரு மணிக்கு யாழ்ப்பாணத்து உணவகங்களுக்கு சென்று என்ன சாப்படு இருக்கிறது எனக்கேட்டால், உடனடியாகவேசிக்கன் றைஸ், சிக்கன் கொத்து, டெவல், பிரியாணிஎனத்தான் பதில் வரும். மின்னல் வேகத்தில் பாஸ்புட் எனப்படும் அதிவிரைவு உணவுக்கு அடிமைகளாவிட்டோம். நமது பண்பாட்டில் உணவுப் பழக்கவழக்கத்திற்கு இருந்த முக்கியத்துவத்தை இப்போதைய தலைமுறை அறியாமலேயே போய்விட்டது. விரைவு உணவுக் கடைகளில் வழங்கப்படும் உணவுகள் கூட உடலுக்கு சுகாதாரத்தை ஏற்படுத்துவனவாக இல்லை. உணவில் கலப்பதால் மனித உடலுக்கு தீங்கான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் எனக் கண்டறியப்பட்டு தடைசெய்யப்பட்ட அஜினமோட்டோ சர்வசாதாரணமாக புழக்கத்தில் இருக்கிறது. உணவுக்கு சுவையூட்டியாகப் பயன்படுத்துகின்றனர். இப்போது மரக்கறி உணவுகளுக்குக் கூட அஜினமோட்டோ பயன்படுத்தும் துயர நிலை உருவாகிவிட்டது. இதைக்கூட நாம் கண்டுகொள்வதில்லை.

விவசாய நிலங்கள் அனேகமானவை மாசடைந்துவிட்டன. தேவையற்ற உரப்பாவனையும், நச்சுமருந்துகளும் நம் விவசாய நிலங்களில் இருந்த உயிர்ப்பைக் கொன்றுவிட்டன. ஆனால் அதிலிருந்து கூட அதிக விளைச்சலை எதிர்பார்க்கும் விவசாயிகள் நாளாந்தம் சந்தையில் அறிமுகமாக நச்சுப்பொருட்களை, உர வகைகளை அள்ளுகொள்ளையாக நிலத்தில் இட்டுப் பயிர்வளர்க்கின்றனர். விளைந்த பயிர்களை சந்தைப்படுத்துகின்றனர்.அவ்வாறு விளைந்த நஞ்சு கலந்த உணவைத்தான் நாம் அனைவரும்  அன்றாடம் உண்கின்றோம்.

இவை அனைத்தினதும் கூட்டுவிளைவு நம் சனத்தொகையை குறைத்திருக்கிறது. அதாவது பிறப்பு வீதத்தைக் குறைத்திருக்கிறது. அது நாட்டின் இனப்பரம்பலைப் பாதிப்படையச் செய்திருக்கிறது. நாட்டைவிட்டுப் புலம்பெயர்ந்தவர் போக எஞ்சிய தமிழர்களின் தொகை சிறுகச்சிறுக, நம் அரசியல் உரிமை, சுயநிர்ணயம் என அனைத்துக் கஜானாக்களும் காலியாகின்றன. இவை பற்றியெல்லாம் நம் அரசியல்வாதிகளுக்கும் அக்கறையில்லை. அரசியல்வாதிகளுக்கும் அக்கறையில்லை. யாரோ ஒருதரப்பு திறைமறைவில் தீட்டும் திட்டங்களுக்கு வேலைசெய்துகொடுத்தவிட்டு திருப்திப்பட்டுக்கொள்வதோடு காலத்தை முடித்தக்கொள்கிறோம்.

.லிங்கம்

Our Facebook Page

Archives