இரணைமடுவை சுற்றிய கதைகள் | பாகம் ஒன்று | ஜெரா

0
414

இற்றைக்கு 120,000 வருடங்களுக்கு முன்பிருந்துதான் இரணைமடுக்குளத்தின் கதை தொடங்குகின்றது. இலங்கையின் தொல்லியலாளரான சிராண் தெரணியகல இரணைமடுவை அண்டிய பகுதிகளில் இடைக்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் எச்சங்கள் இருப்பதாக அறிவித்தார். இடைக்கற்கால மக்கள் பயன்படுத்திய சற்று பட்டைதீட்டி, ஆயுதமாக்கப்பட்ட கற்கள், எலும்புக்கூடுகள் போன்வற்றை அவர் கண்டுபிடித்தார்.

இரணைமடுவில் மீட்கப்பட்ட கல்லாயுதங்கள்

அத்துடன் அவரின் ஆய்வுப்படி இலங்கையின் ஆரம்பகால மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் முக்கியமானதொரு படுக்கையாக இரணைமடுவை அடையாளப்படுத்தினார். இரணைமடுவைச் சூழ இருக்கின்ற நில அமைப்பும், அடர்த்தியற்ற, தட்டையான காடும் இடைக்கற்கால மக்கள் வாழ்வதற்கான புறச்சூழலை ஏற்படுத்தியிருந்தது. கற்கால மக்கள் கல்லாலான ஆயுதங்களை அப்படியே பயன்படுத்தினர். அடர்த்தியான காடுகளில் விலங்குகளோடு விலங்குகளாகப் போரிட்டு வாழ்ந்தனர். ஆனால் இடைக்கற்கால மக்கள் அதிலிருந்து முன்னேற்றம் கண்டு, இயற்கையாகக் கிடைக்கும் வன்தன்மையற்ற கற்களை கூராக்கி, ஆயுதமாக்கி விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்திக் கொண்டனர். அத்துடன் அடர் காடுகள் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இருந்தமையினால், அடர்த்தியற்ற, காட்டுப்பகுதியை நோக்கி நகர்ந்தனர்.

இந்தவகையான அடர்த்தியற்ற காடுகளில் வாழும் விலங்குகள் வேட்டையாடுவதற்கு இலகுவாகவும் இருக்கும். இந்தவகைக் காடுகளை அண்டி ஓடும் ஆறுகளும், இயற்கையாக நீர் சேரும் இடங்களும் விலங்கு வேட்டையாடலை மேலும் இலகுவாக்கியது. நீரருந்த வரும் விலங்குகளை, அந்தப் பகுதியிலேயே கிடைக்கும் கல்லைக் கொண்டு இலகுவாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் வேட்டையாட முடியும். இரணைமடு இதற்கு மிகப் பொருத்தமான இடம். எனவே இடைக்கற்கால யுகம் ஒன்று இரணைமடுப் படுக்கையில் தோன்றியது. இதுவும் நமக்குள்ள அறிவின்படியே எழுதப்படுகின்றது. இவ்வாறான கருதுகோளை உறுதிப்படுத்தக்கூடிய ஆய்வுகள் சிராணுக்குப் பிறகு இரணைமடுப் பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. இடைக்கற்கால மனிதனோடு

இரணைமடுவில் மனிதத் தொடர்ச்சி அற்றுப் போனதா, அல்லது இரணைமடுவிலிருந்து முன்னேறி பூநகரி உள்ளிட்ட கரையோரங்களுக்கு சென்றனரா? அல்லது இப்போது போல பெருவெள்ளம் ஏற்பட்டு அனைவருமே மாண்டுபோயினரா என்பதை நிரூபிக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

இத்துடன் முடிந்து போன இரணைமடு கதையின் மீதிப் பகுதியை தமிழ் விக்கிபீடியா இப்படி பதிவேற்றியிருக்கின்றது.

ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா-பிரித்தானிய அதிகாரியான சேர் ஹென்றி பாட் 1885 இல் அப்போதைய பிரித்தானிய அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார். 1866 இல் பிரித்தானிய நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் என்பவர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன பிரித்தானியப் பொறியிலாளர் று. பிரவுன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரவுன் அப்போதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.

இரணைமடு கட்டுமானத்தை மேற்கொள்ள பெரும் மனிதவலு வேண்டும் என்பதற்காக ஒரு குடியிருப்பை நிறுவும் முயற்சியில் முதலில் பிரவுன் ஈடுபட்டார். இவர் தற்போதுள்ள கிளிநொச்சி நகரிலுள்ளரைஆறு குளம் என்ற தேக்கத்தை உருவாக்கி அதன் கீழ் மக்கள் குடியிருப்பை உருவாக்கினார். இந்தரைஆறு குடியிருப்பு குஞ்சுப்பரந்தன் மக்களைக் கொண்டே இரணைமடு கட்டுமானம் ஈழத்தமிழரின் முழுமையான வியர்வையால் கட்டப்படத் தொடங்கியது 1902 இல் ஆகும்.

1920 இல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடி, ஆழம் 22 அடி. 1954ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம் ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. 3 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975ல் நடைபெற்றது. 1977ல் முழுமையடைந்த அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும்.

1977 இல் முடிவடைந்த இந்தப்பணிக்குப்பின் இரணைமடு முழுப் புனரமைப்புக்கு இதுவரை உட்படுத்தப்பட்டவில்லை. 1977ல் தான் இப்போதுள்ள வான் கதவுகள் கொண்ட தோற்றத்தை இரணைமடு பெற்றது. 227 சதுரமைல்கள் நீரேந்து பரப்புக்கொண்ட இரணைமடு கனகராயன் ஆறு, கரமாரி ஆறு என இரு ஆறுகளின் மூலம் நீரைப் பெறுகின்றது. 9 கிலோ மீற்றர் நீளம் கொண்டது. இதன் அணை 2 கிலோ மீற்றர் நீளமுடையது. இதன்மூலம் 20 882 ஏக்கர் நிலப்பரப்பு பயன்பெற்றுள்ளது.

மொத்தம் 32.5 மைல்கள் நீள வாய்க்கால்கள் மூலம் இரணைமடு கிளிநொச்சியை வளப்படுத்துகின்றது. இரணைமடு மூலமே கிளிநொச்சியில் பெருமளவில் குடியேற்றங்கள் நடந்தன”.

வரலாற்றுக் காலங்களுக்குப் பின்னர் வடக்கை தமிழர்கள் தமது தாயக நிலமாக பிரித்துக் கோரும் காலம்வரையில்தான் இரணைமடுக்குளம் பிரமாண்டமான அமைப்பைப் பெற்றிருக்கின்றது. வன்னியில் பெருங்குளங்களை அமைத்த ஆங்கிலேயர் இரணைமடுவை மேலும் பாரிய நீர்ப்பாசன வலயமொன்றுக்குள் கொண்டுவந்திருக்கின்றர். ஆகவே அதற்கு முதலே இரணைமடுவை அண்டிய பகுதிகள் பெரும் விவசாய நிலமாக

இருந்திருக்க வாய்ப்புண்டு. தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், இடையிடையே விவசாயக்குடிகள் இருந்திருக்கும். இயற்கை, போர், பஞ்சம் போன்ற காரணங்களினால் விவசாயத்தை விட்டு வேறு தொழிகளுக்கு மக்கள் மாறியதால் இரணைமடு 1977க்குப் பின்னரே எழுச்சி பெற்ற நீர்ப்பாசன திட்டம் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.

இந்தக் காலத்தின் (1977) பின்னர்தான் மீண்டுமொரு எழுச்சியை இரணைமடு சந்தித்தது. யாழ்ப்பாண குடியேற்றமும், மலையக மக்களின் வருகையும் தொடர்ச்சியாக நடந்தன. பூர்வீக குடிகள் இவர்களோடு இணைந்து விவசாயப் பணிகளை முன்னெடுத்தனர். வருடாவருடம் பொய்க்காது பெய்யும் மாரியும் இரணைமடுக்குளத்தையும் அதனோடு அண்டிய குடிகளையும் செந்தளிப்போடு வைத்திருந்தது.

1997இல் இடம்பெற்ற கிளிநொச்சி இடப்பெயர்வு வரைக்கும் இந்த எழுச்சி இருந்தது. இத்தோடு இரணைமடு இன்னொரு பரிமாணத்தைப் பெற்றது. குறித்த ஆண்டில் கிளிநொச்சி நகரோடு அண்டிய பகுதிகள் இராணுவத்தினர் வசமாகியது. இதனால் வடக்கின் இக்கரையான முல்லைத்தீவையும் அக்கரையான மன்னாரையும் இணைத்து பள்ளமடு ஊடான தெற்குப் பாதையை துண்டாடப்பட்டது. எனவே ஏதாவது ஒரு

வழியில் புலிகள் வசமிருந்த மல்லாவி, முழங்காவில், மடு, பள்ளமடுவுக்கான தொடர்பை பேணவேண்டிய தேவை அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டது. உணவு விநியோகம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கும், மக்கள் பயணத்துக்கும் ஓரளவு பாதுகாப்பான பாதையாக அப்போது தெரிவுசெய்யப்பட்டதே இரணைமடு அணைப் பகுதியாகும். பரந்தன்- முல்லைத்தீவை இணைக்கும் ஏ9 பாதையில் இருக்கும் புளியம்பொக்கணை சந்தியூடாகத் தொடங்கும் இந்தப் புதிய பாதை ( ஆங்கிலேயர் ஏ9 சாலையை அமைக்க முன்னர் ஆனையிறவு வரையில் இருந்த பழைய நெடுஞ்சாலை இது) வட்டக்கச்சி ஊடாக திருவையாறு உள்நுழைந்து இரணைமடு அணையுடன் அனைந்து சாந்தபுரம் கடந்து முறிகண்டி சந்தியில் ஏறும். கறிப்பட்ட முறிப்பு, மாங்குளம் என ஒரு பக்கமும், கிளிநொச்சி, ஆனையிறவு என மறுபக்கமும் இராணுவத்தினர் இந்த இரணைமடுப் பாதையைக் காவல்செய்தனர். எறிகணை வீச்சுக்களும் இடம்பெற்றன. புலிகள் கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் வரை இரணைமடு இவ்வாறானதொரு இணைப்புக் கேந்திர முக்கியத்துவதைப் பிடித்திருந்தது.

2000 ஆம் ஆண்டுகளில் வீசிய சமாதான வசந்தம் இரணைமடுவுக்கு இன்னொரு கௌரவமான அடையாளத்தைக் கொடுத்தது. குளத்தை அண்டிய தட்டையான காடுகளைப் புலிகள் தமது பாதுகாப்புக்கு உகந்த இடமாக மாற்றிக் கொண்டார்கள். புலிகளின் முதல் விமான நிலையம்கூட

இரணைமடு அலைகரையிலேயே உருவானது. புலிகள் தவிர்ந்தவர்கள் உள்நுழைய முடியாத உயர் பாதுகாப்பு வலயமாகவும் இரணைமடுக்குளத்தின் அலைகரைப் பகுதி முக்கியத்துவம் பெற்றது.

சமாதான காலம் விவசாயம் தவிர்ந்த வேறு தொழில்களையும், வர்ணமயமான வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தி விட்டதால் விவசாய அளவில் அதற்கிருந்த கவனிப்புக் குறைந்து வந்தது. இந்தக் கட்டத்தில்தான் வடக்குக் கிழக்குப் பகுதிகளை அபிவிருத்தி செய்யவென சிராண் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பன்னாட்டு, இலங்கை உள்ளிட்ட அரசுகளின் உதவியுடன் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளைப் பன்னாட்டு அபிவிருத்தி வலைப்பின்னலில் சிக்க வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின்போது இரணைமடுக்குளமும் இலக்காகியது. ஆசியாவை முதன்மைப்படுத்தும் நிதி நிறுவனம் இரணைமடு குள நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்வதற்கான திட்டத்தில் புலிகளை ஏற்கச் செய்தது. உடன்படிக்கையின்படி மேலதிக நீரை யாழ்ப்பாணத்துக்கு வழங்குவது என முடிவுசெய்யப்பட்டது. சர்வதேச நிர்ப்பந்தத்துக்குப் பணிந்து புலிகள் இதற்கு உடன்பட்டாலும், “சமாதானம் குழம்பினால் இதெல்லாம் அவ்வளவுதான், ஏன் தாற காசை வேண்டாம் எண்டு விடுவான்” என்கிற நோக்கில் அணுகியிருக்கலாம்.

புலிகள் எதிர்பார்த்தது போலவே சமாதானம் குழம்பியது. போர் மூண்டது. கிளிநொச்சியும், இரணைமடுக்குளமும் விடுபட்டது. அனைத்தும் கால மின்னலில் கனவுப் பொழுதுல் சரிந்துவிழுந்தது.

அந்த சரிவுக் காலத்தில்தான் இப்படியொரு கதையும் உலாவியது. அதாவது கிளிநொச்சியை புலிகள் விட்டுப் பின்வாங்கியது திட்டத்தோடுதானாம். (அப்போது மழை பெய்து இரணைமடுக்குளம் உடைப்பெடுக்கத்தயாரான நிலையில் இருந்தது) கரும்புலிகள் அணியொன்றை அனுப்பி இரணைமடுக்குளக் கட்டை உடைத்துவிட்டால், இராணுவம் அள்ளுண்டு கடலில் சங்கமமாகப்போகின்றது, என்றமாதிரியான கதைகள் உலாவின. அதேபோல கரும்புலிகள் அணி அனுப்பட்ட இடத்தில் அவர்கள் கட்சி மாறிவிட்டதாகவும், இறுதிப் போரில் சரணடைந்த போராளிகளைக் காட்டிக் கொடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டதாகவும், இரணைமடுவைச் சுற்றிய கதைகள் நீண்டகாலம் உலாவின.

2010 ஆம் ஆண்டில் குளம் 28 அடி நீரை சேகரித்திருந்தது. குளத்தின் அலைகரையில் இருக்கும் இராணுவ நிலைகளுக்குள் நீர் புகுந்ததால் குளக் கதவுகள் திறந்து நீர் வெளியேற்றப்பட்டதாக அந்தக் காலத்துப் பத்திரிகைகள் எழுதின. புலிகள் குளத்தை உடைக்கத் தயாரான மாதிரி இதுவும் ஊக அடிப்படையில் உலவிய கதைதான். ஆனால் குளம் திறந்துவிடப்பட்டது. அதற்குப் பின்னர் வன்னியெங்கும் பெரு வறட்சி வீசியது. இரணைமடுக்குளம் வறண்டே போனது. பறவைகள் அருந்துமுளவுக்குத் தண்ணீரையே அப்போது குளம் கொண்டிருந்தது. வயல்கள் எரிந்தன. விவசாயிகளின் வயிறுகளும் சேர்ந்து எரிந்தன. இரணைமடுக்குளத்தை நம்பி விவசாயிகள் வங்கிகளிடம் வாங்கிய கடன் பலரை விட்டு விரட்டியது. இப்படியேயான நிலை நீடிக்கையில் கடந்த வருட மழைக்காலம் ஓரளவு நீரைக் குளத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது. ஆனாலும் வறட்சி நீடித்தது. வடக்கு முழுவதும் என்றுமில்லாத வறட்சி. இந்த வறட்சிக்காலத்தில்தான் இன்னொரு புதுப்பூதம் இரணைமடுவை மையப்படுத்தி எழுந்தது.

ஆசிய அபிவிருத்தி வங்கி களத்தில் இறங்கியது. மீண்டும் கோப்புகள் தூசு தட்டப்பட்டன. புலிகளுடன் கைச்சாத்திடப்பட்டு கைவிடப்பட்ட இரணைமடுத்திட்டத்தை மறுபடியும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரும்

முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புலிகள் அற்ற அதிகார வெளிக்குள் இழுபறிகளும் தொடங்கின. ஒரு தரப்பு யாழ்ப்பாணத்துக்கு தண்ணீர் கொண்டு வரவே வேண்டும் எனப் போராட, மற்றைய தரப்பு அதனை நிராகரித்துப் போராடியது. இதற்குப் பின்னால் பெரும் அரசியல் சதி இருப்பதாகவும், தமிழர்களிடையே மேலும் பிளவுகளை உண்டாக்க இரணைமடு கையிலெடுக்கப்படட்டிருப்பதாகவும் அறைகளுக்குள் வாதாட்டங்கள் தொடர்ந்தன. இரணைமடுக் குளம் வறுமையாகிக் கொண்டிருந்தது. இல்லாத நீரை கொண்டுவருவதற்கான போராட்டம் முடிவின்றித் தொடர்ந்தது.

அனைத்தையும் அவாதானித்த இரணைமடுக்குளத்து விவசாயிகள் அறைப் போராட்டங்களின் ஆபத்தை உணர்ந்து, களத்துக்கு வந்தனர். குளத்து நீர் விவசாயிகளுக்குப் போதாது. எனவே இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரினர். நேரடியாகவே சம்பந்தப்பட்ட தரப்புக்களை சந்தித்துக் கலந்துரையாடினர். சில ஊடகவியலாளர்களும் விவசாயிகளுக்குத் துணையாயிருந்தனர். உலகளவில் நீர் கொள்ளைக்கும், விவசாய சுரண்டலுக்கும் எதிராகப் போராடுபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைக் கொடுத்த இரணைமடு விவசாயிகள், இறுதியில் வென்றார்கள். அறைப்போராட்டங்கள் தோற்றன. ஆசிய அபிவிருத்தி வங்கி விவசாயிகளின் கதைகளுக்கு மதிப்புக்கொடுத்து விலகியது. விலகிய அறிவிப்பு வந்த ஒரு சில வாரங்களில் 5 வருடங்களுக்கு ஒருமுறை என்றாகிப் போன மழை அடர் எடுத்தது. தொடர் மழையினால் இரணைமடு தேவி நிரம்பினாள். 30 அடிகளைத் தாண்டி நீர் வழிந்தது. தெய்வமாக வணங்கி, தேங்காய் உடைத்து, மேலதிக நீரைக் கடலுக்கு அனுப்பித் தம் வயல்களுக்குத் திரும்பிவிட்டனர் இரணைமடு விவசாயிகள்.

வடக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்களும், உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஊர் மக்களும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு நீர் மடை திறப்பை செய்தனர்.
இரணைமடு குளத்தை சூழ ஆக்கிரமித்திருந்த இராணுவமும், புத்தரும் இந்த நிகழ்வை கண்களை அகலவிரித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. லேசாக மழை பெய்ய, இராணுவம் அவ்விடத்தில் நடத்திய சிற்றுண்டிச் சாலை உணவும், பிளேன்ரியும் பரபரப்பாக விற்பனையாகிக்கொண்டிருந்தது.

(தொடரும்)