featued_image

நிலப்போராட்டத்திற்கு வயது இரண்டு | ஜெரா

auhtor

on
2019-03-02


By :
Jera Thampi

கேப்பாப்புலவு, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வரும் நான்கு கிராமங்களை (பிலக்குடியிருப்பு, சூரிபுரம், சீனியாபுரம், கேப்பாப்புலவு) உள்ளடக்கிய பகுதியையே கேப்பாப்புலவு என்கின்றனர். கேப்பாப்புலவின் வடக்குப்  பக்கமாகக் கள்ளியடி வயல்வெளியும், கிழக்குப் பக்கமாக நந்திக்கடலும்;, தெற்குப் பக்கமாக விடுதலைப்புலிகள் உருவாக்கிய தேக்கந்தோப்பும் மேற்குப் பக்கமாக  நாவலடி அடர் வனமும்  அரண் செய்திருந்தன. ஆனால் இப்போது கேப்பாப்புலவின் நான்கு திசைகளும் இராணுவ முகாம்களால் அரண் செய்யப்பட்டிருக்கின்றது.
2009 ஆம் ஆண்டில் போர் நிறைவுக்கு வந்தவுடன் இக்கிராமம் முற்றிலுமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 2015 ஆம் ஆண்டு வரையில் கிராமத்துக்கு மத்தியில் செல்லும் பிரதான வீதி கூட இராணுவ பாவனைக்கு மட்டும் உரியதாக மாற்றப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கான வீதி, நாவலடி காட்டின் எல்லைப் பகுதியால் அமைக்கப்பட்டிருந்தது. அந்தளவுக்கு இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கேப்பாப்புலவு கிராமம் மாற்றப்பட்டிருந்தது. முப்படைகளும் நிலைகொண்டிருக்கும் இடமாக இருக்கின்றது.
கேப்பாப்புலவு மக்கள்
இங்கு வாழும் அனேகர் விவசாயிகள். மிகுதிப்பேர் மீன்பிடி, மந்தை வளர்ப்பு, கள்ளிறக்கும் தொழில், சிறுகைத்தொழில்கள் ஆகியவற்றைச் செய்துவந்திருக்கின்றனர்.
‘நாங்கள் விடிய முன்னமே வயலுக்கு போயிடும். மனுசி, பிள்ளையள் உங்கால நந்திக்கடலில மீன்பிடிக்கிற ஆக்களிட்ட தேங்காய், நெல்லு, காய் பிஞ்சுகள் குடுத்துப்போட்டு மீன் வாங்கி சமைச்சி சாப்பாடு கொண்டு வருவினம்’ என 2009க்கு முன்பான கேப்பாப்புலவு மக்களின் வாழ்க்கையை நினைவுபடுத்தும் அக்கிராமவாசியான விவேகானந்தனின் சொற்களில், தொன்ம சமூகமொன்றுக்கான அடையாளங்கள் இருக்கின்றன. இந்த செழுமையான வாழ்வு 2009 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வர கேப்பாப்புலவில் வாழ்ந்த அனைவருமே சிதறுண்டனர். கதிர்காமர் முகாம், மெனிக்பாம், ஷோன்போர் எனப் பிரிந்து, மீண்டும் 2011 ஆம் ஆண்டில் கேப்பாப்புலவுக்கு மீள்குடியேற்ற அழைக்கப்பட்டனர். தாம் வாழ்விருந்த ஊர் திரும்பும் சந்தோசத்தோடு வந்தவர்களுக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி. கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில்தான் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
காணி மீட்பு போராட்டங்கள்

கேப்பாப்புலவு மக்கள் மாதிரிக் கிராமத்தில் குடியேறிய நாள்தொட்டு தம் வாழ்வுரிமைக்காகப் போராடத் தொடங்கினர். அது 2017 ஆம் ஆண்டிலிருந்து மிகுந்த உத்வேகம் பெற்றது. முதலில் கேப்பாப்புலவின் ஒரு பகுதியான பிலக்குடியிருப்பு மக்கள் தம் ஊர் முன்றலில் கூடாரம் அமைத்துப் போராடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தனர். இதன் விளைவாக பிலக்குடியிருப்பை விட்டு இராணுவம் வெளியேறியது. அதற்குப் பின்னரும் விடுவிக்கப்படாத கேப்பாப்புலவின் மக்கள் போராடவே, கடந்த வருடம் கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதியின் இடதுபக்கமாக இருந்த இராணுவ நிலைகளைவிட்டு, நட்டஈட்டைப் பெற்றுக்கொண்டு இராணுவம் வெளியேறியது. பொதுமக்களிடம் காணிகள் கையளிக்கப்பட்டன. இப்போது வீதியின் வலதுபக்கமாக இருக்கும் பொதுமக்களுக்குரிய 171 ஏக்கர் காணியைப் பெறுவதற்கான போராட்டத்திலேயே அம்மக்கள் ஈடுபட்டிருக்கின்றனர். போராடத்தொடங்கி இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. 23 மாதங்களும், 16 (2019.02.06) நாட்களும் நகர்ந்திருக்கின்றன. பொதுமக்கள் கோரும் இந்த 171 ஏக்கர் காணிக்குள் நான்கு பெருந்தோட்டங்கள் (தலா 25 ஏக்கர்களின்படி நான்கு தனியார்களுக்குரியது) கேப்பாப்புலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பொது விளையாட்டு மைதானம்;, பொதுநோக்கு மண்டபம், கூட்டுறவுச் சங்கம், 56 குடும்பங்களுக்குரிய காணிகள் உள்ளடங்கியிருக்கின்றன. ஆகவே கேப்பாப்புலவு கிராமத்தை நிர்வகிக்கும் மொத்தக் கட்டமைப்புக்களும் இந்தப் பகுதிக்குள் தான் இருக்கின்றது இவ்வாறாக அபகரிக்கப்பட்டிருக்கும் கேப்பாப்புலவை தங்களிடம் மீளத் தரக்கோரியே தற்போது போராட்டம் இடம்பெறுகிறது. தங்களது பாதுகாப்பு, சுகாதாரம் என எதனையும் கவனத்தில் எடுக்காத மக்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்..

அரியகலா சிவப்பிரகாசம்

‘நாங்கள் 171 ஏக்கர் காணியையும் விடச்சொல்லிக் கேட்டுத்தான் போராடுறம். ஆனால் கச்சேரி 56 குடும்பங்குக்குரிய 59.5 ஏக்கர் காணிதான் விடுவிக்கப்பட இருக்கு என்று சொல்லுது. கச்சேரி பதிவுகளில் தவறுவிட்;டாலும் நாங்கள் எங்களிட்ட இருக்கிற ஆதரங்கள அடிப்படையாகக்கொண்டு தான் போராடிக்கொண்டு வாறம். இதில கடற்கரையாக 48 மீனவக் குடும்பங்கள் இருக்கினம். அதில 12 பேரிட்ட காணிக்குரிய உறுதி ஆதாரங்கள் இருக்கு. மிச்ச ஆக்கள் மத்திய வகுப்புக்காணியில் இருந்தாலும் 45, 50 வருசமாக எங்களோட வாழுகினம். கடற்றொழில் செய்யினம். அவையளயும் சேர்த்துத்தான் 104 குடும்பங்களுக்குரிய காணி வேணும் என்று போராடுறம். இன்றைக்கு இலங்கையின் 71 ஆவது சுதந்திரதினம். நாங்கள் தெருவில விடப்பட்டிருக்கிறம். எங்கட காணிகள அபகரிச்சிக்கொண்டு அவையள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கினம். போர்க்காலத்தல திருகோணமலை, யாழ்ப்பாணம், வன்னி யென்று எல்லா மக்களுக்குமே சாப்பாடுபோட்டது இந்த நந்திக்கடல்தான். அப்பிடி வளமிக்க நந்திக்கடல ஆக்கிரமிக்கும் நோக்கோடதான் அவயள் இந்த இடத்தை எங்களுக்கு தராமல் பிடிச்சிவச்சிருக்கினம். இந்தப் பகுதியில் நிறைய அரச காணிகள் இருக்கு. இராணுவம் இருக்கிறதென்றால் அந்தக் காணிகளில் போயிக்கட்டும். எங்கட காணிகள விட வேணும். இதைத்தான் நாங்கள் சொல்லுறம். நாங்கள் அரசுக்கோ, இராணுவத்துக்கோ, தேசியப் பாதுகாப்புக்கோ எதிரானவர்களில்ல. எங்கட காணிகள தந்தால் போதும். அதுவரைக்கும் போராடுவம்….’

‘… இந்த முகாம் வாழ்க்கையால் நாங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறம். முக்கியமாக எதிர்கால சந்ததிக்குரிய கல்வியே சீர்குலைஞ்சிற்று. எப்பிடியான செழிப்போட வாழ்ந்தனாங்கள். இன்றைக்கு எல்லாம் தலைகீழ். இங்க இருந்து வற்றாப்பளைக்குத்தான் பிள்ளைகள் படிக்கப்போயினம். போனவருசம் க.பொ.த சாதாரணதரத்தில் சித்தியடையாத மாணவர்களின் அனேகம்பேர் எங்கட கிராமத்தை சேர்ந்தவர்கள். இந்த வீழ்ச்சி, எங்கட கிராமம் கட்டமைப்பு குலைக்கப்பட்டதாலதான் நடந்தது’ — இப்படியாக ஏங்கும் அரியகலா சிவப்பிரகாசம் ஒரு ஆசிரியை. அவரின் ஏக்கத்திலும், கருத்திலும் பொதிந்திருக்கும் உண்மை, எதிரில் முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்குத் தெரியவாய்ப்பில்லை. நீதிமன்ற உத்தரவுக்கமைய, நாட்டின் அனைத்து சட்ட வரம்புகளுக்குட்பட்டு தங்கள் காணிகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் அந்த மக்களில் யாராவது ஒருவர் குனிந்தால் புகைப்படம், நிமிர்;ந்தால் புகைப்படம், படுத்தால் புகைப்படம் என நவீனரக கெமராக்கள் மூலம் இராணுவம் புகைப்படம், வீடியோ எடுத்துக்கொண்டேயிருக்கிறது. புதிதாக யாராவது போராடும் மக்களைச் சந்திக்கச் சென்றாலும் இதுதான் நிலை. இப்படியானதொரு அராஜக நாட்டில்தான் வாழ்கிறோமா என நினைக்கையில் வெறுப்பு மேலிடுகிறது

இந்திராணி

‘என்ர தென்னங்காணிய ஆமிபிடிச்சிவச்சிருக்கு. நாங்கள் விவசாயிகள். எங்களுக்கு வயசுபோன நேரத்தில சாப்பாடு போடும் என்றுதான் பயன்தரு மரங்கள நட்டு வளர்க்கிறனாங்கள். எங்கட பென்சன் அந்த மரங்கள்தான். ஆனால் அந்த மரங்களிலிருந்து ஒருசத வருமானத்தைக் கூட நாங்கள் எடுக்கேல்ல. எல்லாம் பகல்கொள்ளையா இராணுவம்தான் எடுக்குது. நான் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்த மரத்திலயிருந்து எனக்கொரு பயனும் கிடைக்காத மனநிலை எப்பிடியிருக்கும்…இது மட்டுமில்ல. நான் இங்க போராட வாறதால வேற வழிகளிலயும் பழிவாங்கப்படுறம். எங்கட மகன்மார் ட்ராக்டர்ல மணல் ஏற்றி விற்கிறவங்கள். உரிய முறைப்படி அரசாங்கத்திட்ட அனுமதி எடுத்துத்தான் அந்தத் தொழில் செய்யிறம். ஆனால் எங்கட ட்ரக்டரை மணலோட எங்க கண்டாலும் பொலிஸ்காரர் பிடிச்சி, ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடிச்சி வழக்குப்போடுறத ஒரு வேலையாகவே வச்சிருக்கிறாங்கள். இலங்கையிலயே சுடலை இல்லாத கிராமம் எங்கடதான். அதைக்கூட பிடிச்சி வச்சிக்கொண்டு விடுறாங்கள் இல்ல’ எனத் தன்பக்க கதையைச் சொல்கிறார் 63 வயதான இந்திராணி.

இராணுவம் என்ன சொல்கிறது?

கடந்த 31 குறித்த பிரச்சினை வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனிடத்துக்கு எடுத்துச்செல்ல பட்டிருக்கிறது. இதன்போது காணி உரிமையாளர்களான கேப்பாப்புலவு மக்களும் இராணுவமும் பிரசன்னமாகியிருந்திருக்கின்றனர். இங்கு கருத்துக்கூறிய இராணுவத்தினர், தாம் நிலைகொண்டிருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் காணிகள் இருப்பதற்கான அரச வரைபடங்கள் எவையும் ஒழுங்காக இல்லையெனவும், அங்கெர்ன்றும் இங்கொன்றுமாகவே மக்கள் குடியிருப்புக்கள் இருந்திருக்கின்றன என்றிருக்கின்றனர். ஆனால் பேச்சுவார்த்தையிடத்திலேயே மறுத்துவிட்ட காணி உரிமையாளர்கள், தங்களிடம் இதற்கான ஆதாரங்களும் காணி உறுதிப் பத்திரங்களும் உண்டு என்பதைத் தெரிவித்திருக்கின்றனர்.

நில அளவை சார்ந்தவரின் பதில்

இராணுவம் ஆளுநரிடத்தில் குறிப்பிட்டிருக்கும் பதில் பற்றி முல்லைத்தீவில் பணியாற்றும் காணி அலுவலர் ஒருவரிடம் வினவியபோது,
‘இந்தப் பகுதியில் 55 குடும்பங்கள் வாழ்ந்ததற்கான பதிவுகளே உண்டு. இராணுவம் சொல்வது பிழையான தகவல். கேப்பாப்புலவுக்கு முதல்முதல் காணி அனுமதிப்பத்திரம் 1951 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 1966 ஆம் ஆண்டு நில அளவை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னர் அங்கு வாழ்ந்தவர்களுக்குக் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. புதிதாகக் காடுவெட்டி காணிகளை அமைத்துக்கொண்டவர்களும், குடிப்பரம்பலை அதிகரித்திருக்கின்றனர். இதற்குள் உரிய காலப்பகுதியி;ல் நில அளவை செய்யாதது நிர்வாகவியலின் தவறே தவிர, பல தசாப்தங்களாக அப்பகுதியில் வாழும் மக்களின் தவறாகாது. நில அளவைக்குட்படாத பகுதிகளில் இருக்கும் மக்களின் காணிகள் அனைத்திலும் இராணுவத்துக்குச் சொந்தமானது என எடுத்துக்கொண்டால், முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமே இராணுவத்துக்குச் சொந்தமானதாகத்தான் இருக்க வேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமே நிலஅளவைக்குட்படுத்தப்படவில்லையல்லவா? வன்னியிலும் சரி, நாடு முழுவதிலும் சரி அனேக இடங்களில் அரசினால் அளந்து காணிகள் கொடுக்கப்படவில்லை. அவரவர் காடுகளை வெட்டி காணிகளை உருவாக்கியபின்னரே அரச திணைக்களத்தால் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன’. – எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தன் பக்க நியாயத்தைச் சொன்னார். இந்த நியாயங்களின் படியாவது கேப்பாப்புலவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

Our Facebook Page

Archives