featued_image

இரும்புத்துண்டுகளுடன் வாழும் மனிதர்கள் | ஜெரா

auhtor

on
2019-03-06


By :
Jera Thampi

நமது உடல் பூ போன்றது என்பர். அல்லது பூ போலக் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பர். அதற்கிணங்கவே, நமது உடலும் பூ போன்றதுதான் என்பதை சிறு தலைவலி வந்தாலே நாம் உணர்ந்துகொள்வோம். அதிலும், காலில் சிறு முள் குத்தி, அந்த முள்துண்டு இரண்டொரு நாளைக்கு வெளியில் எடுக்கமுடியாது போய்விட்டால் துடித்தே போய்விடுவோம். இரவில் உறங்கமுடியா தளவுக்கு ஒரு வலியிருக்கும். காய்ச்சல் வந்ததுபோலவும், வராததைப்போலவும் ஓர் உணர்வு கொதித்துக்கொண்டேயிருக்கும். சாதாரண முள் குத்தியதற்கே இந்தநிலையெனில், உடலில் வெடிபொருட்களுடன் வாழ்பவர்களைப் பற்றி என்றாவது நினைத்துப்பார்த்திருக்கிறோமா?

இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து ஒரு தசாப்தமாகிறது. இன்னொரு விதத்தில் அத்தகைய போர் எச்சங்களைத் தம் உடலோடு காவித்திரியும் மனிதர்கள் வாழத்தொடங்கியும் ஒரு தசாப்தம் எட்டப்பட்டிருக்கிறது. சிறியோர் முதல் பெரியோர் வரை எவ்வித பால் வேறுபாடுமற்று இத்தகையவர்கள் வடக்கு கிழக்கு முழுவதும் வாழ்கின்றனர். தம் உடம்பில் கனமான, விஷத்தன்மைமிக்க ஒன்றோ அதற்கு மேற்பட்டோ கூடிய இரும்புத்துண்டை காவியபடிதான் இவர்களின் வாழ்க்கை நகர்கிறது. அந்த வாழ்க்கை எப்படியானது?

மாங்குளத்திலிருந்திலிருந்து முல்லைத்தீவு செல்லும் வழியில் இருக்கிறது தச்சடம்பன் எனும் கிராமம். அந்தக் கிராமத்தில் முழுமையாக நிறைவுபெறாத, கதவுகளற்ற வீட்டுத்திட்ட வீட்டில் வாழ்கிறார் யோகராசா நகுலேஷ்வரி (45 வயது). உரையாடத்தொடங்கு முன்பே, ஸ்கான் அறிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றார். அந்த அறிக்கைகளைப் பார்த்தால், அவரின் தொடையின் கீழ்ப் பகுதியில் முழுமையானதொரு ரவைத்துண்டு எலும்புக்கு மிக அண்மையில் குத்திக்கொண்டு நிற்பது தெரிகிறது. அது மிகச் சாதாரண வலியாக இருக்காது. ஆனால் அதனையும் தாங்கிக்கொண்டு நம்முடன் உரையாட ஆரம்பிக்கிறார். அவரின் கணவரான யோகராசா மிக அருகிலேயே அமர்ந்திருக்கிறார்.

எப்படி அம்மா இது நடந்தது?

‘திகதி நினைவில்ல…ஆண்டு….’ என்று இழுத்தவாறே கணவனைப் பார்க்க, ‘கடைசி சண்டை நேரத்திலதான் நடந்தது. 2008க் கடைசி என்று நினைக்கிறன்’ என்கிறார் அவர்.

‘நாங்கள் இங்கயிருந்து இடம்பெயர்ந்து வலையன்மடத்துக்கு இடம்பெயர்ந்து போன்னாங்கள். பின்னேரமாகிற்றுது அங்க போய்ச்சேர. சாமானுகள் எல்லாம் இறக்கிவைக்க இருட்டாகிற்று. ஒரே ஷெல்லடி, ரவுண்ஸ் அடியா இருந்தது. பின்ன, அந்த ட்ரக்டர் சில்லுகளுக்கு பக்கத்திலயும், ட்ரக்டர் பெட்டிகளுக்கு கீழயும் படுத்து நித்திரையாப் போனம். இரவு 12 மணியிருக்கும். நல்ல நித்திரையாப் போனன். வெடிச்சத்தமா இருந்தது. ட்ரக்டர் சில்லுக்கு பட்டமாதிரி இருந்தது. எனக்கு உடனும் ஒன்றும் தெரியாது. கொஞ்ச நேரம்போக கால் விறுவிறுத்தது. என்ன விறுவிறுக்குது என்று தடவிப்பார்த்தன் கொளகொளவென்று ஒரே ரத்தம். நல்லா உள்ளுக்குப் போயிற்று ரவுண்ஸ்’.

இவ்விடத்தில், ‘மருந்துகள் ஏதும் கட்டேல்லயா?’ என்ற கேள்வி இயல்பானதுதானே.

‘…அந்த நேரத்தில தெரியும்தானே ஒழுங்கான மருந்துகள் இல்ல. ஸ்கான் பண்ணி பார்க்கிற வசிதியள் இல்ல. ரவுன்ஸ், ஷெல்துண்டுகள் வெளியால தெரிஞ்சா எடுத்துப்போடுவினம். இது உள்ளுக்குப் போனபடியால் எடுக்க முடியேல்ல. மாத்தளன் ஆஸ்பத்திரியில் மருந்து கட்டியாச்சுது’

சண்டையெல்லாம் முடிஞ்ச பிறகு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் காட்டேல்லயா?

‘காட்டினம். யாழ்ப்பாணம் போனது, வவுனியா போனது. 2010 ஆம் ஆண்டு வவுனியால ஸ்கான் பண்ணிப்பார்த்துத்தான் இந்த ரிப்போர்ட் தந்தது. பீ.கே. ரவுண்ஸ் இருக்கு எண்டு சொல்லிச்சினம். உள்ளுக்கு இருக்கிற ரவுண்ஸ் துண்டை வெளியில் ஒப்பிரேசன் செய்து வெளியில் எடு;க்கலாம் என்றும், அது இங்க செய்ய ஏலாது கொழும்புக்குத்தான் போகவேணும் என்றும் சொல்லிச்சினம். அதுக்கு பிறகொரு நாளைக்கு வரச்சொல்லி அனுப்பிவிட்டவை’

பிறகேன் போகேல்ல?

ம்…போகேல்ல..என வார்த்தையை இழுத்தார் நகுலேஸ்வரி. கணவரைப் பார்த்தார். கணவர் வேறு எங்கேயோ பார்த்தார்.

‘ஏன் என்ன பிரச்சினை என்று அழுத்தமாகவும், தயவாகவும் ஒரு கேள்வியைக் கேட்க, ‘நிறைய செலவாகும் தம்பி. அவ்வளவுக்கு எங்களிட்ட காசில்ல. அரசாங்க ஆஸ்பத்திரி எண்டாலும், போக்குவரத்து, தங்கிநிற்கிற செலவு, அதுக்குப் பிறகு உடனும் வேலைக்கு ஏதும் போக ஏலாது. எனக்கு நாலு பொம்பிளப் பிள்ளையள். வீட்டிலயும் கஸ்ரம். அவருக்கும் கால் ஏலாது. கனநேரம் நின்று வேலை செய்ய சிரமப்படுவார். கூலி வேலைக்குத்தான் போறவர். இங்கயிருந்து பிள்ளையள் பள்ளிக்கூடம் மாங்குளத்துக்குதான் போகவேணும். காலம 4 மணிக்கு நான் எழும்பி சமைச்சால்தான் அதுகள பள்ளிக்கூடம் அனுப்பலாம். அதோட ஒப்பிரேசன் எல்லாம் சக்ஸஸா முடியாமல் எனக்கு ஏதும் கால்கை இழுத்திற்று எண்டால் என்ர குடும்பத்த யார் கொண்டுபோறது? நான் பகலில் படுக்கையில் விழாம இருக்கிறபடியால் குடும்பம் நகருது. பகலிலும் படுக்கையில் விழுந்திட்டால் யார் என்ர குடும்பத்த பார்க்கிறது. மூன்றும் பொம்பிளப் பிள்ளையள். ஒரு சயிக்கிள வச்சித்தான் மாறிமாறி பள்ளிக்கூடம் போவினம். அதுவும் இன்றைக்கு காத்துப்போய்க் கிடக்கு. இதெல்லாம் சமாளிச்சி நான்தான் கொண்டுபோகவேணும்.’ நகுலேஸ்வரியுடன்; உரையாடிக்கொண்டிருக்கும்போது, ஓர் இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர்களுடன் உரையாடுவதை ஆழமாகக் கவனிக்கத்தொடங்கினார். இப்போதெல்லாம் கெமராவுடன் வன்னியின் எந்தத் தெருவில் இறங்கி நடந்தாலும் நம்மைப் பின் தொடர்வதற்குச் சிலர் இருப்பர். அப்படியானவராக இருப்பாரோ என்ற சந்தேகம் மேலிட்டபோதிலும், அதனைக் கணக்கிலெடுக்காமல் நகுலேஸ்வரியிடம் உரையாடலைத் தொடர்ந்தேன்.

‘ உங்கட கணவருக்கு என்ன நடந்தது?’ கேள்வி முடியுமுன்பே ‘அவரும் காலில் காயப்பட்டவர்கள்’ எனப் பதில் வந்தது. உழைத்து, நடந்து களைப்பான கால்களின் நுனிப்பகுதியை ஏவுகணைத்துண்டொன்று அறுத்திருப்பதை யோகேஸ்வரன் காட்டுகின்றார்.

ரவுண்ஸ் உள்ள இருக்கிறபடியால் வலி ஏதும் இருக்குமா அம்மா? எனக் கேட்க, ‘வலியோ, இரவில் துடிச்சிப்போவன்தம்பி. இவையள் யோசிப்பினம் என்றதுக்காக வெளியில் காட்டிக்கொள்றதில்ல. தூரத்துக்கு நடக்க ஏலாது. ஏதும் கஸ்ரமான வேலை செய்ய ஏலாது. நான் வலியில்லாமல் நித்திரகொண்டு பத்துவருசம் ஆகுது. இரவில் சரியா குத்தி உளையும். இங்கயிருக்கிற ஆயர்வேத ஆஸ்பத்திரியில ஒரு களிமருந்து வாங்கி வச்சிருக்கிறன். அதைப் பூசினால் கொஞ்சத்துக்கு வலி இருக்காது. இப்ப ரவுண்ஸ் முதல் இருந்த இடத்தவிட கொஞ்சம் கீழ இறங்கினமாதிரி இருக்கு. தடவிப் பார்க்க தெரியுது.

இப்பிடி ரவுண்ஸோட வாழுறது ஆபத்தென்று விளங்குதோ அம்மா? ஓம் தம்பி. ஆபத்துத்தான். என்ன செய்யிற. எனக்கு ஏதுமென்றால் என்ர குடும்பம்? யாரும் ஒரு உதவியில்ல. அரசாங்கமும் இப்பிடி உடம்பில் வெடிபொருட்களோட வாழுற ஆக்களுக்கு ஒன்றும் தாறதில்ல.. என நகுலேஸ்வரி சொல்லிக்கொண்டிருக்கவே,

ஏன் எங்களிட்ட ஏதும் கேட்கமாட்டியளோ…நாங்களும் காயப்பட்டனாங்கள்தான் என மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடியே பெரிதாகக் குரலெழுப்பினார் நான் ஏற்கனவே சந்தேகித்த இளைஞர்.

‘நாங்களும் சண்டையில் காயப்பட்டனாங்கள்தான். ஒருக்கா இயக்கத்தில் இருக்கும்போது காயப்பட்டனான். அது துடையில. கிட்ட கையக் கொண்டுவாங்கோவன் காட்டுறன் எனக் அவரின் அருகில் கூப்பிட்டார். கையைவைத்துத் தடவிப் பார்க்கையில் துடையின் கீழ்ப் பகுதியில் ஒரு ரவைத்துண்டு அங்குமிங்கும் அசைவது கைகளுக்குள் பிடிபடுகிறது. இதில மட்டுமில்ல. தோள்பட்டையிலும் காயம். அது இயக்கத்தில இருந்து வந்த பிறகு, நித்திர கொள்ளேக்க காயப்பட்டது. தோளால இறங்கி உள்ளபோட்டுது ஷெல் துண்டு. அது எடுக்க கஸ்ரம் எண்டு சொல்லிற்றினம். நானும் எடுக்காமல் விட்டிட்டன். இரவில் நித்திர கொள்ள ஏலாது, பாரம் ஏதும் தூக்க ஏலாது. சுரியாக கஸ்ரப்படுகிறன். ஆஸ்பத்திரியில் கொண்டு போய் வெட்டிச் செய்யலாம்தான். ஒருக்கா போனன். அவங்கள் செய்வம் என்று தொடங்க எனக்குப் பயம்பிடிச்சிற்று. கையொன்று இழுத்தமாதிரி இருந்தது. பிறகு செய்வம் என்று விட்டிற்று வந்திற்றன். இனி போக பயமாக் கிடக்கு. கலியாணம் கட்டிற்றன். எனக்கு ஏதும் நடந்திட்டால் என்ர குடும்பத்த யார் பார்க்கிறது. ஏதோ நடப்பதை பார்த்துக்கொள்வம். இருக்கிறவரைக்கும் வாழ்ந்திற்றுப் போவம் என்று இருக்கிறன்;..’ என இலகுவாகப் பதிலளித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பறக்கிறார் அந்த இளைஞர்.

இப்படியாக உடலில் இரும்புத்துண்டுகளுடன் வாழ்வாதல் என்பது, இறுதிப்போரில் அகப்பட்டுத் திரும்பியவர்களுக்கு இலகுவானதாக மாறியிருக்கிறது. அதன் வலியை தசாப்தம் கடக்கும் உறக்கமற்ற இரவுகளை அவர்கள் வாழப்பழகிக்கொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கின் ஒவ்வொரு கிராமத்திலும் பெருமளவிலானவர்கள் இவ்வாறு வெடிபொருட்களை உடலில் தாங்கி உயிர்வாழ்கின்றனர். தன் குடிகளின் உடற்சுகாதாரத்தில் அக்கறையுள்ள அரசு எனில், முதலில் அபாயகரமான வாழ்க்கை வாழும் இந்த மக்களைக் காப்பாற்றத் திட்டங்களை வகுக்க வேண்டும். உரிய முறைப்படியான மருத்துவபொறிமுறையும், ஏதாவதொரு வகையான கொடுப்பனவும் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.

Our Facebook Page

Archives