featued_image

அவையள் வரினம் | தமிழ்நிலா

auhtor

on
2019-04-08


By :
Sanjay Thamilnila

இண்டைக்குச் சமாதானம், பாதை திறந்து முகமாலை பாதையால இயக்கம் யாழ்ப்பாணத்துக்கு வரினமெண்டு பள்ளிக்கூடத்தில கதைக்கினம், பெரியவகுப்புக்கார் பெரிய அளவில மாலைகள் தோரணங்கள் எண்டு கனக்க வேலைகள் செய்து கொண்டிருந்தினம். அந்த நாளில இது எல்லாம் எங்களுக்கு புதுசு. இயக்கம் பற்றி நிறைய கேள்விப்பட்டாலும் பார்த்தது மிக குறைவு என்று தான் சொல்லவேணும். இயக்க பாட்டுப் பாட தெரியும் அல்லது விருப்பம் என்று சொல்லலாம், ஏன் எண்டா அப்ப புலிகளின் குரல் வேலைசெய்யும். வேற பேப்பரில செய்தி வரும் அவ்வளவுதான் அறிதல்களும் புரிதல்களும்.

2000 ஆம் ஆண்டு தென்மராட்சி அடிபாடுக்க நாங்கள் இடம் பெயர்ந்து வடமராட்சில இருந்தம், சிலர் வலிகாம பக்கம். இன்னும் கன பேர் ஆமிப் பயத்துல கிலாலிக்கால வன்னிக்கு போட்டினம், இப்படி வேற வேற இடத்தில காலம் கழிஞ்சுது, இரண்டு வருசத்தால திரும்பி ஊருக்குப் போகலாம் என்று சொல்லி ஆமி வீடுகளை விட்டு விலக, சனம் வீடுகளைப் பாக்க, திருத்தவென்று இஞ்சால வரத்தொடங்கின காலம். எங்கட பள்ளிக்கூடமும் மிச்ச சாமானுகளோட  நெல்லியடி மகாவித்தியாலத்தால சாவகச்சேரிக்கு மாற்றமாகி நடந்து கொண்டிருந்தது.

நெல்லியடி பள்ளிக்கூடத்தில மில்லரின் தூபிக்கு பக்கத்தில தான் எங்கட வகுப்பு. அந்த நேரங்களில் அவற்ற கதைகளை அங்க கதைப்பம். ஏழாமாண்டுக்கு இஞ்ச வந்துட்டம். ஆனால் அங்க இருந்து பஸ்ல தான் வரவேணும், கூடுதலா பள்ளிக்கூடத்துக்கு வந்து போறது வறணி றோடால, அந்த றூட் சீசன் ரிக்கட் தான் இருந்தது காரணம். பஸ் குறிப்பிட்ட நேரத்துக்குத் தான் வரும், காத்து நிக்கிறது குறைவு, பஸ் இல்லாடா தட்டிவான் தான். அவையளின்ர வீரதீரங்களை பற்றிய கதைகள் தான் பஸ்சுக்க சரி, வெளில சரி. எங்கயும் கேக்கலாம்.

தட்டிவான் காலத்தின் கடைசி பரம்பரை நாங்கள் என்று தான் சொல்லவேணும். பெரும்பாலான விசயங்கள் எங்கடகாலத்தோட சரி. தொண்ணூறுகளில பிறந்தவைக்கு அது வரம். பிறகு பாக்கலாம் அதைப்பற்றி. தட்டிவான்ர பின் தட்டில இருந்திருக்கிறம், மேல ஏறி இருந்திருக்கிறம். சில நாளில காசு குடுக்காம கூட போயிருக்கிறம். வயல்வெளிகள், வானங்கள் ரசிக்கவும், மாற்றவைக்கு இடைஞ்சல் இல்லாமல் அரட்டைகள் அடிக்கவும் நாங்கள் கண்டு பிடிச்சது தான் மேல்தட்டு. சித்திரை வெய்யிலையும் தூக்கி போட்டும். அப்படி ஒரு பயணம் இனி வராது.

அண்டைக்கும் அப்படி தான் பள்ளிக்கூடம் வெள்ளன முடிஞ்சு நாங்கள் சங்கத்தானையில இருந்து கொடிகாமத்துக்கு தட்டிவான்ல தொங்கி ஏறி போட்டம். அங்கால போகிறதுக்கு பஸ் இல்ல எல்லாம் இந்த வரவேற்கிற வேலையா சனங்களை ஏத்தி இறக்கிக்கொண்டு திரிஞ்சுது. நல்ல பாட்டுகள், தோரணங்கள் அப்படி இப்படி என்று வரவேற்பு சொல்லிவேலையில்ல. வாறது எங்கட ஆக்கள் தானே. அங்க இங்க என்று ஆமிமாரும் நிக்கினம். பயத்துக்குள்ளேயும் சனம் அப்படி வரவேற்பு. எனக்கு சின்னனில அங்கயற்கண்ணி ஊர்வலம் சரசாலை ரோட்டுல அப்பாவோட பார்த்ததா ஞாபகம். அதைவிடப் பெரிசா தெரியாது. ஆனால் இந்த சனக்கூட்டம் எல்லாத்தையும் தூக்கிப்போட்டது.

இந்த யுத்த காலத்தில் கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் 325km நீளப் பாதை, A9 என்றும் சொல்லுவினம், 2002 இல் சமாதான ஒப்பந்தத்தின் படி பல ஆண்டுகளின் பின் 08.04.2002 இல் பாதை திறக்கப்பட்டது. பின்னர் 2006 இல் மூடப்பட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த பாதை திறப்பு தான் இப்படி திருவிழாக் கோலம் ஏற்படக் காரணம். பார்க்கிறதுக்கு ஆசை இருந்தது ஆனால் ஏத்திக்கொண்டு வீட்டை போக அப்பா நெல்லியடியில நிப்பார், அப்ப நாங்கள் கரவெட்டி கரணவாய்ல இருந்தம். பிந்திப்போன பேச்சோ அடியோ கட்டாயம் விழும் என்று தெரியும். ஒன்பதாம் ஆண்டு வரை அடிவேண்டினது வேற கதை. சரி இருக்கட்டும். ஆக எதற்கும் ரிங்ஸ் குடிப்பம், குடிச்சிட்டு வீட்டை போவம் என்று போய், சரி நாங்களும் நிண்டு அவையள பாப்பம் என்று நினைக்கிற அளவுக்கு அந்த சூழல் என்னை மாற்றி இருந்தது.

என்னோட பெடியள் இரண்டு பேரையும் இழுத்துக்கொண்டு நடந்து முகமாலைக்கு போவம் இது தான் எங்கட பிளான், நடந்தம். உசன் வர போகவே களைத்துவிட்டது. ஆசைப்பிள்ளைல வந்துடினம். ஆங்கால போக ஏலாது அவ்வளவு சனம், வான்ல வரீனம். சனமும் கம்ப காரரும் முகமாலையை மூடி நிக்குதாம் இது தான் கதை. நேரம் கழிச்சு சனத்தை விலத்தி ஒருமாரி பார்த்தா, எங்களை மாரி ஆக்கள் தான் ஆனாலும் பார்த்தா அவையள்ள உடன ஒரு மரியாதை தானா வரும். வந்திச்சு, அடுத்தவை அவையளை பற்றி சொல்ல கேட்டது. அந்த கதைகள் தான் அவையள பற்றி பிரமாண்டமாய் பொதிகைலபோற சக்திமான் மாதிரி எங்களுக்குள் வைத்தது. மேளம் கொட்ட தோள்களில சுமந்து ஊர்வலமாய் வந்து என்ன ஒரு வரவேற்பு, சிவப்பு மஞ்சள் கொடி, பாட்டு என்று மொத்த தெருவே அதிர்ந்தது, இன்னும் இருக்கலாம். அப்பாவின் நினைப்பு வர நாங்களும் கைய குடுத்துட்டு, பஸ்ஸில ஏறி வீட்ட வந்துட்டம். அண்டு பின்னேரம் ஊரில இதைப்பற்றி தான். ஏன் எண்டா அங்க இருந்து இங்க வந்து வரவேற்றது நான் தான். அடுத்த நாள் வகுப்பு புள்ளாவும் இதுதான் கதை, ஆளுக்கு ஒருகதை. காலம் கடந்தாகிற்று இந்த நினைவுகளை விட வேறு ஒன்றும் மிச்சமாகவோ எச்சமாகவோ இல்லை. வருவதற்கோ.. வரவேற்பதற்கோ….

-தமிழ்நிலா –

Our Facebook Page

Archives