சாந்திபுரவாகியது மாலனூர் | ஜெரா

0
139

“தமிழர் நிலத்தில் இல்மனைற் – தைத்தோனியம் ஆகிய கனிமவளங்கள் நிறைந்த பகுதி எது?” என அடிக்கடி கேட்கப்படும் பொதுஅறிவுக் கேள்விக்குப் ”புல்மோட்டை” என அசத்தலாகப் பதிலெழுதியிருந்தமையை பலரும் நினைவுவைத்திருப்பர்.

கனிம வளங்கள் மட்டுமல்ல, வடக்கு கிழக்கு ஆகிய தமிழர் மரபுவழித் தேசத்தின் இணைப்பு நிலமாகவும் இந்தப் புல்மோட்டை விளங்குகின்றது. கடற்கரையாக விரியும் B60 என்கிற புல்மோட்டை வீதியின் வடக்கு அந்தம் தென்னமரவாடி, மணலாறு வாயிலாக முல்லைத்தீவையும், தென் அந்தம் திருகோணமலையையும் இணைக்கிறது. இரு நகரங்களுக்கு இயற்கையாக அமைந்த ஆழமற்ற கடல்வழிப்பாதையும் உண்டு. தரை, கடல் ஆகிய இருவழிப் பாதையுகளும் குவியும் பிரதான இடத்தில் புல்மோட்டை அமையப்பெற்றிருக்கிறது. இன்னும் அதிகமாக தெளிவுபடுத்தவேண்டுமாயின், திருகோணமலை மாவட்டத்தில் வரும் குச்சவெளி பிரதேசசெயலாளர் பிரிவில் அமைந்திருக்கிறது புல்மோட்டை எனப்படும் சிறுநகரம்.

மீன்பிடி, கருவாடு உற்பத்தி, நெற்பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, வியாபாரம், கனிமவள தொழிற்சாலை போன்ற தொழில்களில் ஈடுபடும் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக இங்கு வாழ்ந்துவருகின்றனர்.

அதிகளவில் தமிழர் நிலமாக இந்த சிறுநகரம் அடையாளப்படுத்தப்படினும், இப்போது விரைவாக சிங்களமயப்பட்டுக்கொண்டிருக்கிறது.

புல்மோட்டை நகரத்தைக் இணைத்து ஓடும் B60 சாலையில், முல்லைத்தீவுக்குத் திரும்பும் சந்திதொடக்கம் நகரை நிறைவுறுத்தும் கடலுக்கு அரணாக அமைந்துள்ள அரிசிமலைவரைக்குமான 5 கிலோமீற்றர் தூரத்துக்குள் 10 பௌத்த விகாரைகளும், ஒரு சிங்கள குடியேற்றமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவும் அடங்கியிருக்கும் நிலப்பரப்பளவு வெறும் 30 சதுர கிலோமீற்றர்கள்தான்…!

புல்மோட்டை – முல்லைத்தீவு சந்தியிலிருந்து புல்மோட்டை நகரின் பக்கமாக 800 மீற்றர்கள் பயணித்தால் வருகிறது மாலானூர் என்கிற கிராமம். இதனைப் பன்னிரண்டாம் கட்டையென்று உள்ளூர் மக்கள் அடையாளப்படுத்துகின்றனர். அவ்விடம் வீதியின் அருகாக இருப்பினும், 5 ஏக்கர்களுக்கு அப்பால் பெரியளவு வயல்நிலங்கள் உள்ளன. அவை தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சொந்தனமானவை. இப்போதும் விதைப்பிலீடுபடுகின்றனர். வயல் நிலத்துக்கு அருகான 5 ஏக்கர் பரப்புடைய 1 கிலோமீற்றர் வரையான பகுதிக்குள் புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சோளனும், பிளேன்ரீயும், வெதுப்பக உற்பத்திகளும் விற்கும் கடைகளும் முளைத்திருக்கின்றன.

அதிலொரு கடையில் அமர்ந்து வெயிலிலும், அடுப்பு வெக்கையிலும் வெந்த சோளத்தைக் கடித்தபடியும், அதற்கு சுவைசேர்க்க சூடான பிளேன் ரீயை உறிஞ்சியபடியும், ”எங்கயிருந்து வந்து குடியேறியிருக்கிறியள்” என அரைச் சிங்களத்தில் கேட்டால், ”காலி புத்தே” எனப் பதில்சொல்கிறார் அந்தக் கடைக்கார அம்மணி. ”இந்த இடத்துக்கு என்ன பேர்?”. ”சாந்திபுர”. ”எத்தின குடும்பங்கள் வரையில் இருக்கிறீங்கள்” என மூன்றாவது கேள்வியைக் கேட்டால் ”திஷ் பஹா” (35 வரும்) எனப் பதில் தந்துவிட்டு தன்வேலையைக் கவனிக்கிறார். யார் வீடு கட்டித்தாறது எனக் கேட்டால், அரசாங்கம் என்கிறார் அவர்.

இதையேதான் கட்டுரையாளர் சந்தித்த குறித்த பகுதிக்கான பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் குறிப்பிட்டார்.

”பிக்குமார் அடாத்தாக அந்த இடங்களப் பிடிச்சி புத்தவிகாரைகள், தியான மண்டபங்கள் முதல் கட்டினாங்கள். நாங்கள் எதிர்ப்பு வெளியிட்டம். அங்கயிருக்கிற வயல்காணிகளுக்கும் பிரச்சினை வந்திருக்கு. இப்ப சிங்கள மக்கள குடியேற்றிக் கொண்டிருக்கிறார்கள். குச்சவெளி பிரதேச செயலகம் இந்தக் காணிகளை குடுத்திருப்பதாக ஒரு பகுதியினரும், பதவிசிறிபுர பிரதேச செயலகம்தான் இந்தக் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இன்னொரு பகுதியினரும் சொல்லிக்கொண்டிருக்கிறாங்க” என்கிறார் அவர்.

எனவே இந்த சிங்கள குடியேற்றத்தை யார் செய்கிறார்கள் என்ற கேள்வியை கட்டுரையாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி குச்சவெளி பிரதேச செயலத்திடமும், பதவிசிறிபுர பிரதேச கேட்டிருந்தார்.

அதற்கு உடனடியாகவே பதில் வழங்கிய பதவிசிறிபுர பிரதேச செயலகம், ”குறித்த செயற்றிட்டம் இவ்வலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படாத செயற்றிட்டம் என்பதனைத் தயவுடன் அறியத்தருகிறேன்” என்றது.

 

சற்றுத்தாமதமாகப் பதில் வழங்கிய குச்சவெளி பிரதேச செயலகம் உண்மையைச் சொன்னது. அச்செயலகம் வழங்கிய பதிலின்படி,

”இல்லை. குறித்த நபர்களால் அத்துமீறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டே குடியேறினர்.

குறித்த நபர்கள் அத்தமீறி ஆட்சி செய்தனர். அதன் பிரகாரம் வெளியேற்றல் கட்டளைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

காணி பயன்பாட்டுக்குழுவின் அனுமதியின்றி தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் சபையால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசம் எமது பிரிவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் நிர்வாக நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது”. – எனப் பதிலிட்டிருந்தனர்.

எனவே இந்தக் குடியேற்றங்களை தேசிய வீடமைப்பு அதிகார சபையே மேற்கொண்டு வருகின்றது. குறித்த அதிகார சபை மேற்கொள்ளும் அடாத்தான காணி பிடிப்புக்களுக்கும், குடியேற்றங்களுக்கும் அரசின் பொறுப்புச்சொல்லவேண்டிய நிர்வாக திணைக்களங்களிடம் அனுமதி பெறத்தேவையில்லை. காணி தொடர்பான சட்டங்கள் அதிகார சபைகளுக்கும் தனியாக இருக்கின்றன. அவை தாம் விரும்பியபடி குடியேற்றங்களைசெய்யலாம் என்கிற முடிவை இந்தக் குடியேற்றம் நமக்கு கோடிட்டு காட்டுகின்றது.

இங்கு சிங்களவர்களை குடியேற்றம் செய்ய முன்னர், இப்பகுதியில் இருந்த இரசாயனக் கூட்டுத்தாபனத்துக்குரிய தங்குமிட கட்டிடத்தொகுதிக் காணியை அரசிடமிருந்து பெற்று அவ்விடத்தில் பௌத்த துறவிகளும், பௌத்த மக்களும் தியானமிருக்க மண்டபம் ஒன்று பௌத்த துறவிகளால் அமைக்கப்பட்டது.

குறித்த பகுதியில் இராணுவத்தைத்தவிர பௌத்த மதம் சார்ந்த மக்களோ, துறவிகளின் பீடங்களோ அப்போது இருக்கவில்லை. சாதாரண தங்குமிட வடிவில் அமைக்கப்பட்ட அக்கட்டிடத்தில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பௌத்தர்கள், அரசியல்வாதிகள், தங்கிசெல்லப்பயன்படுத்துகின்றனர்.

இப்போது அவ்விடத்தில் தெருவோராமாக பிரம்மாண்டமானதொரு புத்தர் சிலையை நிறுவி அதனை வழிபடவென சிங்களவர்களை அழைத்துவந்து குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். காணி வழங்குவது தொடக்கம், வீடுகள் அமைத்துக்கொடுப்பது வரையிலும் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவே செய்துகொடுத்திருக்கிறார். அவர் அங்கிருக்கும் துறவிகளுக்குப் போதியளவு ஆதரவினை வழங்கியிருக்கினார் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

தற்போது நாடு முழுவதும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செயற்படுத்தலின் கீழ் வீட்டுத்திட்டங்களை திறந்துவைத்துக்கொண்டுவருபவர் யாரெனில் சஜித் பிரமேதாஸ. அவர்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்கிற கோசங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன.

மாலனூர் “சாந்திபுர” வாக மாறிவிட்டது. நிரந்தர வீடுகள் விரைவாக அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.