featued_image

த(க)ண்ணீருக்கு நடுவில் | ஜெரா

auhtor

on
2019-04-17


By :
Jera Thampi

தண்ணீர்தான் பிரச்சினை : தண்ணீருக்கு நடுவில் இருக்கும் இரணைதீவு

மன்னாருக்கு வடக்காக இருக்கிறது இரணைதீவு. வடக்கு இரணைதீவு, கிழக்கு இரணைதீவு என இரண்டாக நிர்வாகிக்கப்படும் இத்தீவு கரையிலிருந்து 12 கிலோமீற்றர்கள் தொலைவில் கடலின் மத்தியில் இருக்கிறது. பளிங்கு மணலில், கால்புதைய நடக்கும் அழகிய அனுபவத்தைத் தரும் இச்சிறுத்தீவு இப்போது எப்படியிருக்கிறது?

1990 ஆம் ஆண்டு வரையிலிலுமே இங்கு மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். தீவையே பூர்விகமாக் கொண்ட குடும்பங்கள், பெருங்கடல், சிறுகடல் தொழிலை வாழ்வாதாரமாக் கொண்டு வாழ்வுநடத்திவந்திருக்கின்றனர். அத்துடன்  தென்னை,பனை உள்ளிட்ட பயிர்களின் வளங்களும் தீவை செழுமைப்படுத்தியிருக்கின்றது. அள்ளக் குறையாக கடல்வளம் இத்தீவைச் சூழக் கொட்டிக்கிடந்தமையால், வறுமையற்ற திருப்திகரமான வாழ்க்கையையே இத்தீவு மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். அதற்கு இன்றும் சுண்ணக்கல்மேடாகக் குவிந்துகிடக்கும் கட்டிடங்களின் எச்சங்களும், பயன்தரு மரங்களின் சோடைபற்றிய நிலைகளும் எடுத்தக்காட்டாகவிருக்கின்றன.  பாடசாலை, மருத்துவமனை, சுத்தமான குடிநீருக்கான அமைவிடம்,  ஆங்கிலேயர்கால தேவாலயம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான சேவை நிலையங்களும் இயங்கியிருக்கின்றன.

1992 ஆம் ஆண்டு தொடக்கம் தொடக்கம் நாட்டில் ஏற்பட்ட இனவன்முறைகள் காரணமாக, இத்தீவு அபாயத்தை எதிர்கொண்டது.                குமுதினிப் படுகொலை அச்சுறுத்தல்கள் இரணைதீவு வரை நீண்டது. இதனால் ஏற்பட்ட அச்சநிலைமைகள் காரணமாக அங்கு வாழ்ந்த மக்கள் தீவைவிட்டு இடம்பெயர்ந்தனர். அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்களில் 195 குடும்பங்கள் இரணைதீவுக்கு எதிராக இருக்கின்ற முழங்காவில், இரணைமாதா நகரில் குடியேறினர். ஆயினும் கடற்தொழில் நிமித்தம் இரணைதீவுக்கு சென்று தங்கிநிற்கும்  வழக்கத்தை மிகநீண்டகாலமாகவே கொண்டிருந்தனர்.

2009 ஆண்டு போர் முடிவுற்றதும் மீள்குடியேற்றத்தக்கென வந்த மக்கள் இரணைதீவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அதனால் இரணைமாதா நகரிலேயே தங்கியிருந்தனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இரணைதீவில் தம்மைக் குடியேற்றக்கோரி போராட்டம் ஒன்றைத் தொடங்கிய மக்களுக்கு அரசு உரிய பதிலை வழங்கவில்லை. போராடத்தொடங்கி ஒருவருடம் நிறைவடைந்தவுடன் கடந்த 2018 ஆம் ஆண்டின் முன்நடுப்பகுதியில் அனுமதியின்றியே திடீரென தீவுக்குள் நுழைந்து மீள்குடியேறினர். வீடுகளோ, பாடசாலையோ, அழிவடையாகத கட்டிடங்களோ இல்லாத நிலையில் தேவாலயத்திலும், மரங்களின் கீழும் மக்கள் நீண்ட நாட்களாகத் தங்கியிருந்தனர்.

பின்னர் சுயமாகவே தத்தம் காணிகளை துப்பரவுசெய்து குடிசைகளை அமைத்து இரணைதீவை நிரப்பினர் மக்கள்.

வெளியில் தலைகாட்டமுடியாத வெயில் காலநிலை நிலவும் இக்காலப்பகுதியில், கிடுகினால் அமைக்கப்பட்டுள்ள குடிசைக்குள் மணல்நிலத்தை வாரிக்கூட்டிக்கொண்டிருந்தார் 68 வயதைத் தாண்டிவிட்ட ரீட்டம்மா. அவரிடம் ”முதல் இந்தத் தீவு எப்பிடியம்மா இருந்தது?”

“அந்த நேரம் தென்னம்பிள்ளையள், வீடுவாசல், ஆடுமாடுகள் என்று வளமாக இருந்தது. இப்ப வந்து வெறும் நிலத்தில இருக்கிறம். நான் அட்டைக்குப் போறனான். ஒன்றிரண்டுதான் பிடிபடுது. சின்னச்சின்ன அட்டை. முந்தியெண்டால் கயிறுகொண்டுபோய் கட்டித்தான் இழுத்துவாறனாங்கள். பொம்பிளயளே இந்தக் கடலில் இறங்கி ஆம்பிளயளுக்கு நிகரா உழைப்பம். இரவில வந்து அட்டபிடிக்கிறாங்கள். லைற் போடுறாங்கள். அதனால அட்டையெல்லாம் அழிஞ்சிபோச்சுது” எனக்குறிப்பிடும் அவரிடமும் வளமானதொரு வீடு இருந்திருக்கிறது. அந்த வீடு அழிவடைந்துள்ளதால் அதன் அருகிலேயே குடிசையொன்றை அமைத்து வசித்துவருகின்றார்.

இரணைதீவில் சிறுகடையொன்றை நடத்திவரும் எலிசபெத் அம்மா பெருநம்பிக்கையோடுதான் மீள்குடியேறினார்.

”மீள்குடியேற்றம் செய்யப்படும் எல்லா மக்களுக்கும் செய்யப்படும் வசதிவாய்ப்புக்கள் எங்களுக்கும் கிடைக்கும் என்றதை நம்பித்தான் குடியேறினம். ஆனால் ஒன்றும் செய்யேல்ல. எங்களின்ர சுயமுயற்சியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறம். என்னைப் பாருங்கோ, நான் ஒரு சின்ன கடை வச்சிருக்கிறன். இங்கயிருக்கிற ஆக்களுக்கு சமைச்சிக்குடுப்பன். மீனுகள் வந்தால் கருவாடு போட்டு விற்பன். இங்க அனேகம் பெண்தலைமைத்துவ குடும்பங்கள்தான் இருக்கினம். அவையளும் கடற்றொழில்தான். அவைக்கு கடலின்தன்மைகள், காலநிலைகள் தெரியும். அதனால கடற்றொழில் செய்துகொண்டு சீவிக்கினம். தண்ணீர் அறவேயில்ல. எங்கட சொந்தங்கள் அங்கால இருந்து (இரணைமாதாநகர்) தொழிலுக்கு வாற படகில 20 லீற்றர் தண்ணீர் குடுத்துவிடுவினம். அதை வச்சித்தான் சமாளிக்கிறம். கறண்ட் மட்டும் தருகினம். அதுவும் ஒழுங்கில்ல. அவை விரும்பும்போது மட்டும்தான் தருவினம். இரவில் விளக்குவெளிச்சத்தில்தான் வாழுறம்” என்றார் 54 வயதான எலிசபெத்.

”இங்க குடிதண்ணீர்தான் தம்பி பெரிய பிரச்சினை. முதல் மழை தண்ணீரை சேமிக்கிற ஒரு தாங்கி இருந்தது. அதோட ஒரு இடத்தில நல்லதண்ணீர் கிடைச்சது இப்ப அதெல்லாம் இல்ல” என்று தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார் 45 வயதான கிறிஸ்டினா. அவர் தொடர்ந்தும் பேசுகையில், ”அரசாங்கத் தரப்பில இருந்து எங்கள யாரும் வந்து பார்க்கிறேல்ல. எங்கட குறைநிறையள் கேட்கிறதில்ல. கிராம சேவையாளர் ஒருக்கா வந்திருக்கிறார். அதுக்குப் பிறகு வாறதில்ல.  பிரதேச சபை ஒரு தண்ணீர் எடுக்கிறதுக்கு ஒரு லாண்ட்மாஸ்டர் தந்தது. அதையும் இரவில தீவுக்குள்ள படகில வாற இனந்தெரியாத ஆக்கள் கழற்றிக்கொண்டு போயிற்றாங்கள். பழுதாகிப்போய் கிடக்கு.

எங்கட சொத்துக்களாக மாடுகள் மட்டும்தான் இங்க மிச்சமிருந்தது. இங்க குடியேறி அதுகள தேடிபிடிச்சி வளர்ப்பம் என்றால் அதுக்கும் இப்ப பிரச்சினை. இரவில் தீவுக்குள்ள வாற இனந்தெரியாத ஆக்கள் மாடுகளுக்கு தண்ணீர் வைக்கினம். தண்ணீர் தாகத்தில இருக்கிற மாடுகள் அவையளுக்கு அணையுது. பிறகு அதைப்பிடிச்சி படகுகளில் ஏற்றிக் கடத்திக்கொண்டு போகினம். இதெல்லாம் களவாகத்தான் நடக்குது.

பாருங்கோ ஒரு பள்ளிக்கூடம் கூட இல்ல. ஒரு நல்ல பள்ளிக்கூடம் இயங்கினது. அது கிடக்கிற கிடைய எட்டிப்பாருங்கோ எனப் பாடசாலை அமைந்திருக்கும் திசையை நோக்கிக் கையை நீட்டுகிறார் கிறிஸ்டினா.

கட்டிடங்களும், கூரையும் இடிந்து கிடக்கும் பாடசாலைக்குள் சில இளைஞர்கள் நண்டு பதப்படுத்திக்கொண்டிருக்கிறனர். பாடசாலை நிரந்தரமாகவே கைவிடப்பட்டிருக்கிறது. இரணைதீவுக்குரிய பாடசாலை மாணவர்கள் கல்வியின் நிமித்தம் முழங்காவில், இரணைமாதாநகர் பகுதிகளிலேயே தங்கியிருக்கின்றனர். அந்தப் பிள்ளைகளின் குடும்பங்கள் இரணைதீவில் தம்மால் குடியேற முடியாது என்கின்றனர். ”அங்க குடியேறலாம். ஆனால் பிள்ளைகளுக்குப் படிப்பு வசதிக்கு எங்போறது” என்கிற கூட்டுக்கோசம், அவர்கள் மீள்குடியேறாமைக்கான காரணமாக இருக்கிறது.

கிறிஸ்டினா கதைத்துக்கொண்டிருக்கும்போதே உள்நுழைந்த கிறிஸ்டியான், எங்களுக்கு இந்த லாண்ட்மாஸ்டர திருத்திதந்தாலே போதும். குடிதண்ணீரை எடுத்துக்கொள்வம். நேவிக்காரர் கொஞ்ச நாள்  காம்ப்ல வச்சி குடிதண்ணீர் தந்தவங்கள். அதுவும் கயர் தண்ணீர்தான். அதையும் இப்ப நிற்பாட்டிப்போட்டாங்கள். தங்களுக்குத் தண்ணீர் இல்லையாம்” என்றார்.

”இங்க ஒரே களவு தம்பி. முதல் அப்பிடியில்ல. எத்தின நாள் என்றாலும் கடற்கரையிலும், வீட்டுக்கு வெளியிலும் வலைகள் கிடக்கும். இரவு கூட வீட்டுக்குள்ள இருந்து வலைகள அள்ளிக்கொண்டு போயிற்றாங்கள். காயப்போட்டிருந்த கருவாட்டைக்கூட அள்ளிக்கொண்டு போட்டாங்கள். சிலர் மேல சந்தேகம் இருக்கு. ஆனால் உறுதிப்படுத்தாமல் அவையள நாங்கள் குற்றஞ்சாட்டிப்போட்டு, இங்க இருக்க ஏலாது…”

”..இரவில் ஒழுங்கான கரண்ட் வசதியில்ல. யாருக்கும் பாம்புகடிச்சால் கூட சாகவேண்டியதுதான். ஆஸ்பத்திரி இடிஞ்சிபோய் கிடக்கும். அவசர படகுச்சேவைகள் எதுவும் இல்ல. எங்கட பூர்வீக நிலத்தைக் கைவிடக்கூடாதென்றுதான் போராடிப்போராடியே குடியேறினம். ஆனால் அதுக்குப் பழிவாங்கிற மாதிரி எங்கள தனிச்சிவிட்டுப்போட்டினம். அரச அதிகாரிகள் வாறது குறைவு. நிறுவனங்களின் உதவிகளும் பெரியளவில் இல்ல” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத இளைஞர் ஒருவர்.

இரணைதீவின் மூத்த மனிதனாக இருக்கிறார் 70 வயதைக் கடக்கும் அந்தோனிதாஸன். தீவின் முழுவரலாற்றையும், இடப்பெயர்வுகால வாழ்க்கையும் நினைவுவைத்திருக்கும் அவர், இப்போது அங்கு வாழ்வது சந்தோசமானது என்கிறார். ”எங்களுடைய நிலத்தில சந்தோசமாயிருக்கிறம். நாச்சுக்குடாவிலிருந்து தொழிலுக்கு வாறதென்றால் 15, 20 லீற்றர் மண்ணெண்ணெய் வேணும். ஆனால் இங்க வந்ததால் 5 லீற்றர் மண்ணெண்ணெயே போதுமானதாக இருக்கு.  கிட்டத்தட்ட 3000ரூபா லாபம் வரும். பழைய வீடுகள், காணிகளில இருக்கிறதும் ஒரு சந்தோசம் தானே. ஆனால் என்ன அடிப்படை வசதிவாய்ப்புகள் ஒன்றும் செய்யேல்ல. தொழிலுக்கு மட்டும் பரவாயில்லாமல் இருக்கு. அரச அதிகாரிகளைக் கேட்டால், நாங்களாகத்தானே வந்தனாங்கள். அதனால எல்லாம் தாமதமாகும் என்று சொல்லுகினம். அரசாங்கம் தற்காலிக வீடுகள் கூட தரயில்ல” என்றார்.

மீள்குடியேறி ஒரு வருடத்தை நெருங்கிகொண்டிருக்கும் இரணைதீவின் நிலை இப்படித்தான் இருக்கிறது. மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் தனித்துவிடப்பட்டுள்ளமையை உணர்கின்றனர்.

ஜெரா

Our Facebook Page

Archives