featued_image

உள்ளுராட்சி மன்றங்களும், நிலவரங்களும் | தமிழ்

auhtor

on
2019-06-06


By :
Thamil

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்று, சபைகள் கூடி ஒரு வருடங்களை கடந்து நிற்கும் நேரம் இது. பல போட்டிகள், பழிவாங்கல்கள், கட்சித்தாவல்கள் என பலவற்றைக்கடந்து பலர்வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அந்த வெற்றி என்பது அன்றோடு முடிந்ததாகவே இருக்கின்றது.

ஒரு ஐனநாயகத்தின் உயிர்நாடியாக உள்ளூராட்சி மன்றங்களே விளங்குகின்றன. பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபட்ட தேவைகளுடன் வாழும் மக்களின் பிரச்சனைகளை மத்திய அரசினால் தீர்த்து வைக்க இயலாத போது இவ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன. உள்ளூர் விடயங்களை ஒழுங்குபடுத்தி நிர்வகிக்கின்ற சுயாதீனமான ஆனால் இறைமையற்ற ஐனநாயக ரீதியான சிறிய நிறுவனங்களையே உள்ளூராட்சி மன்றம் என்ற பதம் குறிக்கின்றது.

இது ஒரு நாட்டின் அதிகாரப் படிமுறையிலே மூன்றாவதாக இடம்பெறுகின்றது. அரசாங்கங்கள் உள்ளூராட்சி மன்றங்களைத் தோற்றுவித்து அவற்றினை ஒழுங்கமைத்து சாதாரண மக்களைத் தமது ஆட்சியின் பங்காளர்களாக மாற்றி மக்களுடைய நிர்வாக, அரசியல், பொருளாதார, சமூகத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கு முயற்சிக்கின்றன. “பிறைஸ்” என்ற அறிஞர் வரலாற்று ரீதியாக தேசிய அரசுக்கு முன்னோடியாக உள்ளூராட்சி அரசாங்க முறையின் வடிவங்களே இருந்துள்ளன என்று கருதுகின்றார். மக்கள் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கான ஆரம்ப புள்ளியாக இவ் உள்ளூராட்சிமன்றங்கள் விளங்குகின்றன. உள்ளூராட்சி மன்றங்களினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களே பின்னர் அரசியலில் பெரும் பதவியை வகித்துள்ளனர். இதற்கு ஒரு உதாரணமாக இலங்கை அரசியலில் உயர் பதவி வகித்த ரணசிங்க பிரேமதாஸவைக் குறிப்படலாம்.

வரலாற்றுக் காலம் தொட்டுப் பழமை வாய்ந்த உள்ளூராட்சி மன்றங்களானவை கி.மு 4ம் நுற்றாண்டிலிருந்து வெவ்வேறு வடிவங்களில் இலங்கையில் செயற்பட்டு வந்துள்ளன. தற்கால உள்ளூராட்சி மன்றங்களின் ஆரம்ப அமைப்பானது 19ம் நுற்றாண்டின் இறுதி அரைப் பகுதியில் பிரித்தானியரால் அறிமுகஞ் செய்யப்பட்டது. பின்னர் 1920ல் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமே ஐனநாயக முறையிலமைந்த உள்ளூராட்சி மன்ற முறை ஏற்பட ஏதுவானது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பல சட்டங்ளை அடிப்படையாகக் கொண்டு மாநகர சபைகள், நகர சபைகள், பட்டிணசபைகள், பிரதேச சபைகள், கிராம சபைகள், கிராமோதய சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. பின் சில சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு சில உள்ளூராட்சி மன்றங்களை இல்லாமல் செய்து சில மன்றங்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டன.

1980ல் மாவட்ட அபிவிருத்தி சபைகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பட்டிண சபைகள், கிராம சபைகள், ஒழிக்கப்பட்டு கிராமோதய சபைகள், பிரதேச சபைகள் செயற்பாட்டிற்கு வந்தன. இன்று இவ் மன்றங்களில் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியனவே செயற்பாட்டில் உள்ளன. உள்ளூராட்சி மன்றங்களில் பிதானமானதாகவும் பலமான அதிகாரங்களைக் கொண்டதாக மாநகர சபை விளங்குகின்றது. மாநகர சபைக்கு அடுத்தபடியான அதிகாரங்களைக் கொண்டதாக நகர சபை விளங்குகின்றது. அதிகாரம் பொறுப்பு என்பவற்றில் கிழ் மட்டத்தில் இருக்கும் உள்ளூராட்சி மன்றமாக பிரதேச சபை விளங்குகின்றது.
இவ் மூன்று உள்ளூராட்சி மன்றங்களும் தமது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. இவ் மன்றங்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமான வகையில் முன்னெடுப்பதில் பல இடர்பாடுகளை எதிர்கொள்கின்றன.

அரசியல் ரீதியான தலையீடுகள் உள்ளூராட்சிமன்றங்கள் மீது காணப்படுகின்றன. அரசியல் தலைவர்களதும் அரசியல்வாதிகளதும் தலையீடுகளினால் உள்ளூராட்சி மன்றங்கள் தனது பணிகளை சுதந்திரமான முறையில் முன்னெடுக்க முடியாது போகின்றது. அவர்களது தவறான போக்குக்கு இசையாத உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுவதனால் திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட உறுப்பினர்களை இழக்க வேண்டி இருப்பதுடன் பல முன்னேற்றகரமான திட்டங்களும் கைவிடப்படும் நிலை உருவாகின்றது.

இதன் மறுதலையாக, அரசியல்வாதிகள் அல்லது உறுப்பினர்கள் அரசாங்க ஊழியர்களை தங்களுடைய தேவைகளுக்கு இணங்க செய்யவும், தாங்கள் செய்யும் ஊழல் , அதிகார மீறல்களைக் கண்டுகொள்ளாதுவிடவும் நிர்பந்திக்கிறார்கள். உடன்படாதவர்களை பழிவாங்கவும் தவறுவதில்லை. விசாரணைகளோ இடமாற்றங்களோ சம்பவிக்கின்றன. இதனால் நேர்மையான ஊழியர்களும் தவறுகளை செய்யத்தொடங்குகிறார்கள். அல்லது கண்டும் காணாது விட்டுவிடுகிறார்கள்.

இவற்றை விடவும் மக்களுக்குச் சேவை செய்வதை நோக்காகக் கொண்டு வரும் உள்ளூராட்சி மன்ற ஊழியர்கள் பிரதேச முன்னேற்றம், மக்கள் நலன் என்பவற்றை மறந்து அலட்சியமானவர்களாகக் காணப்படுகின்றனர். தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு பொது மக்களிடம் இலஞ்சம் பெற முயல்கின்றனர். பெரும்பாலும் பலர் நேரமுகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அவர்களுக்காக மக்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. வரியிறுப்பாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கப்படுவதில்லை. வழங்கப்படும் பதில்களும் அலட்சியமாகவேயுள்ளது. இவ்வாறு ஒரு சிலர் செயற்படுகின்றமை முழு சபையின் மீதும் மக்களுக்கு வெறுப்பும் நம்பிக்கையீனமும் ஏற்படக் காரணமாகின்றது.

பாரபட்சமான வள ஒதுக்கீடுகளினால் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. நிதிப் பங்கீடு, வளப் பங்கீடு மூலம் குறித்த பிரதேசத்தில் அபிவிருத்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் போது இன, மத, மொழி, பிரதேச ரீதியான பாரபட்சம் காணப்படுகின்றது. பெரும்பான்மை இனத்தவர்களுக்கு அதிக பட்சமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுவதனால் சிறுபான்மை இனத்தவர்கள் தாம் புறக்கணிக்கப்படுவதாக எண்ணி தமது முழு நம்பிக்கையினையும், பங்களிப்பினையும் உள்ளூராட்சி மன்றங்கள் மீது வழங்க தயங்குகின்ற அதேவேளை, சிறுபான்மையிடமும் அதே பிரதேச அல்லது வட்டார ரீதியான பாரபட்சம் காணப்படுகின்றது. அவை கட்சி அடிப்படையிலும் பல தாக்கங்களை உண்டுபண்ணத் தவறவில்லை.

உள்ளூராட்சி மன்றங்கள் மாறுபாடான கொள்கைகளைக் கொண்டு காணப்படுகின்றன. மத்திய அரசு ஒரு கட்சியாகவும் உள்ளூராட்சி மன்றங்கள் வேறு ஒரு கட்சியாகவும் இருக்கும்போது கொள்கை ரீதியில் வேறுபட நேரிடுகின்றது. கொள்கைகளை முன் வைக்கும் வேளையில் ஒரு தரப்பின் கொள்கைகளை மறு தரப்பினர் நிராகாரிக்கும் போது பயன் மிக்க சமூக நல கொள்கைகள், திட்டங்கள் வீணடிக்கப்படும் நிலை உருவாகின்றது.

சிறப்பானதும் திறமையானதுமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதி வாய்ப்புக்கள் இல்லாமை பாரிய பிரச்சினையாக உள்ளது. உள்ளூராட்சி மன்றத்தினது நிதியும், அரசாங்கம் வழங்கும் நிதியும் இதன் செயற்பாடுகளை திருப்தியானதாக முன்னெடுப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் சமூக நலத் திட்டங்கள், சுக நலத் திட்டங்களை காலத்தின் தேவைக்கேற்ப முன்னெடுக்க முடியாது இருப்பதுடன் சில திட்டங்களை ஆரம்பித்தாலும் அவற்றைக் கைவிடும் நிலை ஏற்படுகின்றது.

பற்றாக் குறையான ஆளணியினர் காணப்படுகின்றமையினால் பல இடர்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. ஏனைய அரச உத்தியோகத்தர்களது ஊதியத்தை விட இவர்களது ஊதியமானது மிகக் குறைவாகக் இருப்பதனால் போதிய ஆளணியினரின் உள்வாங்குகை என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. இதனால் மக்கள் நலத் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க இயலாது போகின்றது. இந் நிலை உள்ளூராட்சி மன்றங்கள் மீதான மக்களின் குறை சுமத்தல்களுக்கு வழி ஏற்படுத்துகின்றது.

சிறந்த திட்டமிடல் முகாமைத்துவ அம்சங்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பின்பற்றப்படுவது குறைவாகக் காணப்படுகின்றது. தூரநோக்கும் முற்போக்குமற்ற வகையில் திட்டமிடப்படாத முகாமைத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் மக்கள் தேவைகள் உரிய காலத்தில் பூர்த்தி செய்ய முடியாது போவதுடன் மக்கள் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட சமூக நலத் திட்டங்களைக் கூட கைவிடும் நிலை ஏற்படுகின்றது. இது உள்ளூராட்சி மன்றங்கள் மீதான மக்களின் அவ நம்பிக்கைக்குக் வழி ஏற்படுத்துகின்றது.

பலவீனமான நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டவையாக உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன. அதிகாரப் படிநிலை அமைப்புக்கள் சாரியாகப் பின்பற்றாமை, கோப்புக்களின் சீர்குலைவுகள், ஒழுங்கீனமான ஆவணப்படுத்தல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள், போதிய பயிற்சி அனுபவங்களைக் கொண்டிராத ஆளணியினர், மேற்பார்வையற்ற நிர்வாகச் செயற்பாடுகள் போன்றவற்றினால் உள்ளூராட்சிமன்ற நிர்வாகக் கட்டமைப்பானது பலவீனமானதாகக் காணப்படுகின்றது. மேலும் பல ஊள்ளூரட்சிகளின் நிர்வாகமானது வினைத்திறனற்ற தவிசாளர்களை கொண்டு இயங்குவதாலும், உறுப்பினர்கள் தம் அதிகார வரம்பை அறியாது சபையின் நிர்வாக விடையங்களில் தலையிடுவதாலும் இவ் நிர்வாக விடையங்கள் மேலும் பலவீனமடைகின்றது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்டதாக உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்றன. மத்திய அரசின் சட்டவாக்கங்களிலிருந்து பெறப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாகவே இவை காணப்படுகின்றன. இவற்றின் அதிகாரங்களை அதிகரிக்கவும், குறைக்கவும், மாற்றம் செய்யவும் மத்திய அரசாங்கம் அதிகாரம் கொண்டுள்ளது. மத்திய அரசாங்கம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்ததாக இருப்பதுடன் இதன் கட்டுப்பாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டும் காணப்படுவதனால் சில சமூககங்கள் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான பல்வேறுபட்ட பிரச்சினைகளை உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்கி வருவதனால் தமது செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது பல சபைகள் திண்டாடுகின்றன.

உள்ளூராட்சி சபைகள் அபிவிருத்திக்குரியனவே, அவற்றில் அரசியல் செய்யமுடியாது. அரசியல் வெய்யவும் கூடாது. வெறும் தீர்மானங்கள் இயற்றும் சபையாக இருக்காது இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் தமது பணிகளைளத் திறம் பட மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு பாரபட்சமற்ற வகையில் செயற்படுதல் என்பது கேள்வியாகத்தான் இன்னமும் உள்ளது ஆனாலும், முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக அரசியல் வாதிகள் செயற்பட்டாலோ, அல்லது நன்கு திட்டமிட்ட முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்தாலோ , அவற்றுடன் நீடித்துநிலைக்கக்கூடிய அபிவிருத்திகளை முன்னெடுத்தோ இந்த உள்ளூராட்சி மன்றங்களை வெற்றிப்பாதைகளைின்ஊடாக இறுதிவரை கொண்டுசென்று சேர்க்கமுடியும். இல்லையேல் பல சபைகள் பயனற்று இன்னும் சில வருடங்களிலோ அல்லது மாதங்களிலோ கலைக்கப்பட்டுவிடும்.

Our Facebook Page

Archives