featued_image

உடும்பன்குள படுகொலை சாட்சி | ஜெரா

auhtor

on
2018-02-26


By :
Jera Thampi

கிழக்கு மாகாணம் மிகவும் வனப்பு மிக்கது. மலைகளும், அருவிகளும் சூழ்ந்த வயல்வெளிகள் கிழக்கின் தனி அடையாளமாகக் கொள்ளத்தக்கன. அந்தப் பச்சைப்பசேல் வயல் வெளிகளும், தமிழரின் உதிரத்தால் கழுவப்பட்டவைதான். தமிழரின் உடல்களால் உரம்பெற்றவைதான். அதற்குப் பல சான்றுகள் உண்டு. அதில் ஒன்றுதான் உடும்பன்குளம் படுகொலை.

1986 ஆம் ஆண்டு, மாசி மாதம் 19 ஆம் நாள். அம்பாறை மாவட்டத்தில், தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் உடும்பன்குளம் கிராமம். அதாவது உடும்பன்குளம் வயல்வெளி. மாரியில் செழித்து, மாசியில் மண் வணங்கிக் கிடக்கும் நெற்கலசங்களை மக்கள் அறுவடைசெய்யும் சந்தோசமிக்க காலப்பகுதி அது.

உடும்பன்குள வயல்வெளி மிகவும் ரம்மியமானது. வயலுக்கு அருகிலேயே வாடி அமைத்துத் தங்கியிருந்து வயல்வேலைகளில் ஈடுபடுவதும், அக்காலப்பகுதியில் அங்கிருந்த மலையடிவார நிலங்களில் சேனைப்பயிர்ச்செய்கை, உபஉணவுப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடுபடுவதும் கிராமத்தவர்களின் பொருளாதார ஈட்டங்களாயிருந்தன. அப்படியான ஒரு நாளில்தான் உடும்பன்குள வயல்வெளி தமிழர்களின் இரத்தத்தால் கழுவப்பெற்றது. அதை நேரில் கண்ட சாட்சிகளைப் இப்போது தேடிப்பிடிப்பது மிக அரிது. ஆயினும் அங்கு வசிக்கும் சியாமளா (35) என்பவர் தனக்கு நினைவிருப்பவற்றை இப்படி பதிவு செய்கிறார்.

“ அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். நாங்கள் அப்போது அக்கரைப்பற்றில் வசித்தோம்.  எங்களுக்கு உடும்பன்குளத்தில் 15 ஏக்கர் வயல் இருந்து.  அதில் முழுதாக விவசாயம் செய்தோம். அது அறுவடைக்காலம் என்பதால் அதற்குத் தேவையான பொருட்களை ஒழுங்குபடுத்திய பின் எங்கள் அப்பாவின் இரண்டு உழவு இயந்திரங்களில் நாம் அனைவரும் உடும்பன்குளத்திற்குச் சென்று, மலைகளில் வாடிகள் அமைத்துத் தங்யிருந்தோம்.

எங்களோடு அம்மா, அப்பா, அப்பப்பா, அப்பம்மா, இரண்டு சித்தப்பாமார் மற்றும் வேறு சில உறவினர்களும் வந்தார்கள். ஆண்கள் அனைவரும் வயலில் அறுவடைக்குச் செல்வார்கள். பெண்கள் மலையில் உள்ள வாடியில் தங்கியிருந்து வயலில் வேலைசெய்வோருக்காக உணவு சமைப்பார்கள்.

அன்றும் அப்படித்தான், வழமையான வயல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன.  வெயில் உச்சத்தில் எரித்துக்கொண்டிருந்தது. மதியம் உணவு நேரம் அது.  ‘எல்லாரும் சாப்பிட்டிற்று வாங்கோ.  நான் சூடுகளுக்குக் காவல் நிக்கிறன்” என்றார்.. பசிக்களைப்பில் வேலைசெய்துகொண்டிருந்த எல்லோரும், மலைகளுக்கு சென்று விட்டார்கள்.

அக்காலப்பகுதியில் எனது சித்தப்பா கோபாலகிருஸ்ணன் (கண்ணா) க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிவிட்டு இருந்தபடியால் அந்த இடைவெளியில் அவரும் எங்களோடு உதவிக்கு வந்திருந்தார். அந்நேரம் அவர் மலையில் மறுபக்கத்தில் படுத்து நித்திரையாகியிருந்தார்.

அந்நேரத்தில், கிராமத்தை சுற்றிவளைத்த இராணுவம்,  வயலுக்குள் நுழைந்தது. வேலையில் மும்முரமாக இருந்த அப்பாவை இறுக்கிப் பிடித்து ‘டேய் எங்க எல்லாரும்”  என மிரட்ட,’எல்லோரும் மலையில் சாப்பிடினம்” எனச் சொல்லிவிட்டார்.  அவர் தன் வார்த்தையை முடிக்கும் முன்னரே, இராணுவத்தோடு வந்திருந்த –  அப்பாவை நன்கு தெரிந்த   முஸ்லிம் ஊர்காவல் படையாளி ஒருவர்  தான் வைத்திருந்த கூரிய கத்தியால் என் அப்பாவின் வயிற்றில் குத்திவிட்டார். அப்பா ‘கண்ணா ஓடுஇஇ கண்ணா ஓடு” என்று சித்தப்பாவின் பெயரைச் சொல்லி கதறினார். அந்த அலறல் சத்தம் கேட்டுத்தான் எல்லோரும் வயல் பக்கம் திரும்பிப் பார்த்தோம். அப்பா இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். வயலுக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த அருவிக்கரையில் அவரைத்  தூக்கிப் போட்டார்கள். அதன் பின்னர் மலையில் பயப்பீதியில் உறைந்திருந்த எம் அனைவரையும், துப்பாக்கி – வாள் முனையில் கைதுசெய்து வயலுக்குள்கொண்டு வந்தார்கள்இ  அதில் ஆண்களை கண்களையும் கைகளையும் கட்டி வயலில் அமரவைத்து சரமாரியாகத் தாக்கினார்கள். பெண்களை அவ்விடத்தை விட்டு  ஓடச் சொன்னார்கள். சற்றுத் தூரம் ஓடியதும் எம்மை நோக்கி இராணுவத்தினர் சுடத்தொடங்கினார்கள். அவ்வாறு  ஓடும் சுடப்பட்டதனால் தான் நான் காலில் படுகாயமடைந்தேன். அப்படியே ஓடி எம் ஊர் வந்து சேர்ந்தோம்.

இராணுவம் சுற்றி வளைத்துப் பிடித்து தாக்கிக்கொண்டிருந்தவர்களின் என் உறவு முறையான அண்ணா ஒருவரும் இருந்தார். அவர் வாய்பேசமுடியாதவர். அவரை இராணுவம் கண்களைக் கட்டிவிட்டு, ஓடச் சொல்லியிருக்கிறது. அவரோ தட்டுத்தடுமாறி ஓடி, மலையடிவாரத்தில் மறைந்திருந்து, வயலுக்குள் நடப்பதைப் பார்த்திருக்கிறார். அந்த வயல்வெளிக்குள் பிடிக்கப்பட்டிருந்த மிகுதியானவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவரே தப்பி வந்து ஊரவருக்கு சொன்னார்..

இராணுவம், சுற்றிவளைத்த அனைவரையும் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும், வாளால் வெட்டியும் கொன்றிருக்கிறது. எனது அப்பா அப்போது இறக்கவில்லை. வயலுக்கு அருகான அருவியில் குற்றுயிரும், குறையுயிருமாகக் கிடந்திருக்கிறார். அந்நேரம் காயமடைந்த – இறந்த அனைவரையுமே எங்களின் உழவு இயந்திரத்தில் குவித்து எரித்திருக்கின்றனர். பலர் உயிரிரும் தீயில் கருகி, துடிதுடித்து இறந்திருக்கின்றனர்.

வயலில் வேலைக்கு வந்திருந்தவர்கள் மட்டும் இந்தப் படுகொலையில் கொல்லப்படவில்லை. எங்கள் கிராமங்களில் வயல் அறுவடை முடிந்து, சூடடிக்கும் நாட்களில் வறியவர்களுக்கு கடகக் கணக்கில் நெல் தானம் செய்வது வழமை. அதற்காக அயல் ஊர்களில் இருந்து வறுமைப்பட்டவர்கள் வயல்வேலை நடக்கும் இடங்களுக்கு வருவார்கள். அவ்வாறு தான் அன்றைய தினம் உடும்பன்குள வயல்வெளிக்கும் தானம் பெறுவதற்காக அயல் கிராமத்தவர்கள் வந்திருந்தனர். அவர்களைக் கூட இராணுவம் விட்டுவைக்கவில்லை. அனைவரையுமே சுட்டுக்கொன்றதை அந்த அண்ணா பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.

எல்லாம் முடிந்து விட்டது. இப்போதும், அப்பாவையும் எங்கள் கிராமத்தவர்களையும் கூட்டாக எரித்த உழவு இயந்திரத்தின் பாகங்கள் எங்கள் வீட்டில் உண்டு. அதனை இப்படுகொலையின் நினைவுச் சின்னங்களாக வைத்திருக்கிறோம்.

நான் படுகாயமடைந்ததும், அக்கறைப்பற்று வைத்திய சாலையில்தான் சிகிச்சை பெற்றேன். அவ்வைத்தஜியசாலைகூட தற்பொழுது இலங்கை இராணுவத்தின் அதிரடிப்படை முகாகமாக மாற்றப்பட்டிருக்கிறது – என்கிறார் சியாமளா.

இந்தப் படுகொலையில் 132 தமிழர்கள் கொல்லட்டனர். இதனை லெப்ரினன் சந்திரபால என அழைக்கப்பட்ட அதிகாரியின் கீழ் இயங்கிய இராணுவத்தினரும், முஸ்லிம் ஊர்காவற்படையைச் சேர்ந்த 12 வரும் இணைந்து மேற்கொண்டதாக அக்காலப்பகுதியில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் ஒழுங்கான விசாரணைகளும் இடம்பெறவில்லை. குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை.

இந்தப் படுகொலை இடம்பெற்று இன்றோடு 32 வருடங்கள். இப்போதும் இந்த வயல்வெளிகளுக்குத் தமிழர்கள் திரும்பவில்லை. எனவே நன்கு திட்டமிட்ட ரீதியில் தமிழர்களை நிலம்பெயரச் செய்யும் நடவடிக்கையின் முதல்கட்டம்தான் இது. இவ்வாறு திட்டமிட்ட ரீதியில் தமிழரது பாரம்பரிய நிலங்களை அழித்துப் பறிக்கும் செயற்றிட்டங்கள் நீண்டகாலமாகவே இடம்பெற்று வந்துள்ளன. அதன் முதல் தொடக்கமாக மக்களைப் பீதிக்குள்ளாக்கி வெளியேற்றுவதற்காக,  வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் திட்டமிட்டே கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். சிங்களவர்கள் மட்டும் இந்தக் கொன்றொழிப்புக்களில் ஈடுபடவில்லை. இலங்கையின் இன்னொரு சிறுபான்மையினராகிய முஸ்லிம்களும் இணைந்தே தமிழர்களை இனப்படுகொலை புரிந்தார்கள். அதற்கு உடும்பன்குள படுகொலையும் மிக முக்கியமான சான்று. ஆனால் உலகமே இணைந்து அழித்துக்கொண்டிருக்கும் ஓரினத்துக்கு ஆதரவான நீதிப் போராட்டத்தில் இவையெதுவும் தகுந்த சாட்சியங்களாக் கொள்ளப்படமாட்டாது.

Our Facebook Page

Archives