featued_image

சமூகத்தின் ஆற்றல்களுக்கு ஒளி |மீராபாரதி

auhtor

on
2018-03-02


By :
Oorukai

உள்ளுராட்சி சபைகளுக்கு இம் முறை பன்முக ஆற்றலுள்ள பல வகையான கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். பெரும்பான்மையான சபைகளில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை எடுக்கவில்லை.

இந் நிலைமையானது கூட்டிசைவான செயற்பாட்டை வேண்டி நிற்கின்றது. இவ்வாறான கூட்டுச் செயற்பாடுகளுக்கான சந்தர்ப்பம்தான் மக்கள் நலன் அடிப்படையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க சாதகமான சூழலாகும்.

ஆகவே மக்கள் நலன் தொடர்பான பல முன்மொழிவுகளை ஆர்வமுள்ளவர்கள் செய்யலாம். அக்கறையுள்ள கிராம, பிரதேச, நகர, மாநகர சபைகள் இது தொடர்பான செயற்பாடுகளை கவனத்தில் கொண்டு முன்னெடுக்கலாம் . அவ்வாறான ஒரு முன்மொழிவு தொடர்பான பதிவே இது. முன்மொழிகின்ற விடயம் நகரங்களில் இரவுச் சந்தை.

புலிகள் ஆதிக்கத்திலிருந்த காலங்களில் அவர்களது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசங்களில் அனைவருக்கும் ஏதோ ஒரு வேலை இருந்ததாக குறிப்பிடுவார்கள். அதாவது யாரும் வேலையற்று இருக்கவில்லை. அவரவர்களுக்கு என்ன தகுதியோ ஆற்றலோ அதற்கமைய அல்லது என்ன வேலைகள் செய்யாமல் இருக்கின்றதோ அதற்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.

ஆகவே அனைவருக்கும் உழைப்பு இருந்தது. பொதுவான வறுமை கஸ்டங்கள் இருந்தபோதும் ஒருவரும் சாப்பாட்டுக்கு கஸ்டப்படவில்லை எனக் கூறுவார்கள். இதற்கு அவர்களின் நிர்வாகத் திறமையையே மெச்சுவார்கள். போர்ச் சூழல் மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் பொருளாதார வசதியினங்களுக்கு மத்தியிலும் அவர்களால் அவ்வாறு செயற்பட்டிருக்க முடியுமானால் ஏன் இப்பொழுது செயற்பட முடியாது? இன்று வசதிகளும் வாய்ப்புகளும் மட்டுமல்ல அளவுக்கதிகமான நிதியும் கைவசம் உள்ளது.

அல்லது பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் உள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் அவ்வாறு செயற்பட முடியவில்லை எனின் அதற்கான காரணம் மக்கள் நலனில் அக்கறையின்மை செயற்பாட்டிற்கான ஊக்கமின்மை திட்டமின்மை தூரநோக்கின்மை என்பனவே காரணம் எனலாம்.

நாம் பயணித்த பல நாடுகளில் இரவுச் சந்தைகள் முக்கியமானவையாக காணப்பட்டன. மக்கள் ஒன்று கூடும் இடமாக இருப்பது. வகை வகையான உள்ளுர உணவுப் பண்டங்களை அறிமுகம் செய்வதும் விற்பதும். பராம்பரிய சத்துணவுகளை அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பது. கலைத்துவ ஆற்றல்களை வெளிப்படுத்த சந்தர்ப்பங்களில்லாதவர்களுக்கான ஒரு களமாக இருப்பது.

வேலையற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது. சிறுவர்களுக்கு கொண்டாடட்ட மனநிலையை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்குவது. முதியவர்களுக்கு ஒன்று கூடுவதற்கும் பல மனிதர்களை சந்தித்து உரையாடுவதற்குமான இடமாக இருப்பது. முப்பது வருட போர் வாழ்வின் பழக்க வழக்கங்களில் ஒன்றான ஆறு மணியுடன் வீட்டினுள் தஞ்சமடைவது இன்றும் தொடர்கின்றது. இந்த நிலைமையை மாற்ற வேண்டியது அவசியம். ஏனெனில் இவ்வாறான புதிய சூழல் பல மனிதர்களின் மன நோய்களையும் மாற்ற காரணமாகலாம். மேலும் எதிர்காலத்தில் வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு போரில் சிக்கப்படாமல் இருந்தால் இலங்கை உல்லாசப் பயணத்துறையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கலாம்.

அப்பொழுது இச் செயற்பாடு உல்லாசப் பயணிகளை ஈர்க்கலாம். இவ்வாறு பல தளங்களில் இரவுச் சந்தையானது பயனுள்ளதாக இருக்கும்.. இது வெறுமனே இரவுச் சந்தைகள் மட்டுமல்ல. இன்றைய ஈழத்து குறிப்பாக வடக்கு கிழக்கு சூழலில் இது மிக அவசியமான ஒன்றாகும். மக்களிடம் நம்பிக்கையை வளர்க்கும் செயற்பாடாகவும் உருவாக்கலாம்.

இரவுச் சந்தைகள் என்பது மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெறலாம். இவை கிராமங்களின் நகரங்களில் மையங்களில் நடைபெறலாம். உதாரணமாக பருத்தித்துறை இரு மாடி சந்தையைச் சுற்றியுள்ள வீதியில், சாவகச்சேரியில் பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள இடத்தில், யாழில் பஸ் நிலையம் சிறந்த இடம் ஆனால் அதற்கு ஏதுவாக அது மாற்றப்படும் வரை முத்தவெளியில் செய்யலாம், வவுனியாவில் புதிய பஸ் நிலையத்தினுள்ளே அதன் வேலிக்கரையோரமாக, இவ்வாறான வசதிகளற்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு. திருகோணமலை, கல்முனை, அக்கறைப்பற்று போன்ற நகரங்களில் மைதானங்களில் நடைபெறலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள ஒரு நகரம் மாதத்தில் ஒரு நாளை பொதுவாக சனிக்கிழமைகளைத் தெரிவு செய்து நடாத்தலாம். உதாரணமாக யாழ் மாவட்டத்தில் யாழில் மாதத்தின் முதல் சனி எனின் அடுத்த சனி பருத்தித்துறையில், அதற்கு அடுத்த சனி சாவகச்சேரியில், அடுத்த சனி வலிகாமம் பகுதியில் அல்லது தீவுகளில் என சூழற்சி முறையில் நடைபெறலாம்.

இதேபோல் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா போன்ற நகரங்களிலும் ஒரு நாள் நடைபெறலாம். இவ்வாறு கிழக்கு மாகாணத்திலும் மாவட்ட அடிப்படையில் நடைபெறலாம்.

இன்றைய நகர பிரதேச கட்டுமானத்தில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் குறைந்தது பத்துக்கு மேற்பட்ட கீழ் நிலை அரச உத்தியோகத்தர்கள் இருக்கின்றார்கள். உதாரணமாக அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர், சுகாதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், இப்படி ஒவ்வொரு பிரதேசத்திலும் இருபது பேரளவில் உத்தியோகத்தர்களாக இருக்கின்றார்கள்.

ஆனால் இவர்களுக்கான ஒழுங்கான வேலைத்திட்டங்கள் ஏதுவுமில்லை என்பதாகவே அறிய முடிகின்றது. ஒழுங்காக சம்பளம் மட்டும் கிடைக்கின்றது. இவர்கள் அனைவரையும் இணைத்து இவர்களுக்கான வேலை திட்டங்களில் ஒன்றாகவும் இதனை முன்னெடுக்கலாம்.

மேலும் வடக்கு கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ந்து வேலை கேட்டு போராடுகின்றார்கள். (இவ்வாறான நிலைமைக்கு இவர்களை மட்டும் குறை கூறுவது பயனற்றது. நமது கல்வி முறைமையை குறை கூறவேண்டும். இது இன்னுமொரு கட்டுரையில் உரையாடப்பட வேண்டிய விடயம்.) இவர்களின் அறிவையும் ஆற்றல்களையும் பயன்படுத்தலாம். மேலும் எத்தனையோ முன்னாள் போராளிகள் பல்வேறு ஆற்றல்கள் அனுபவங்கள் இருந்தும் வேலையற்று வறுமையில் இருக்கின்றார்கள். இந்த இரு குழுமத்தினரையும் இணைத்து ஒரு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்களை மேற்குறிப்பிட்ட அதிகார சபைகள் முன்வைக்கலாமே.

வேலையற்ற பட்டதாரிகளிடம் இரவுச் சந்தைகளை ஒழுங்கு செய்யும் வேலை திட்டங்களை வழங்கலாம். எவ்வாறு விற்பனையாளர்களைத் தெரிவு செய்வது? எவ்வாறான உணவுகளை ஊக்குவிப்பது? எந்த இடத்தில் எவ்வாறு ஒழுங்கு செய்வது? குப்பைகளை எப்படி அதன் தரத்திற்கு ஏற்ப பிரித்து அகற்றுவது? இதற்கான இணையத்தளத்தை உருவாக்கவும்

செயற்படுத்தவும் ஒரு குழுவை நியமிக்கலாம்.,இதேபோல் வேலையற்றிருக்கும் முன்னாள் போராளிகளை அவர்களது ஆற்றல்களுக்கு ஏற்ப ஒவ்வொரு வேலையை பொறுப்புக் கொடுக்கலாம். அவர்களே விற்பனையாளர்களாக தமது குடும்பங்களுடன் இணைந்து செயற்படலாம்.

இவ்வாறு ஒன்றினைத்து செயற்படுவோமானால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மட்டுமல்ல போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல விடுதலை வேண்டி கல்வியைத் துறந்து போராடிய போராளிகளின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான மக்கள் நலத் திட்டங்களை தூர நோக்குடன் சிந்தித்து திட்டமிட்டு ஊக்கத்துடன் செயற்பட எத்தனை நகர, பிரதேச சபைகள் தயார்?

 

 

 

 

கட்டுரையாளர் – எழுத்தாளர். வ.க.செ.மீராபாரதி

Our Facebook Page

Archives