featued_image

ஊடகர் சத்தியமூர்த்தி அவர்களின் கட்டுரை ”மகிந்த சிந்தனை”

auhtor

on
2019-02-12


By :
Oorukai

(இக்கட்டுரை ஊடகர் பு.சத்தியமூர்த்தி அவர்களால், 21.10.2005 அன்று வெளியான வெள்ளிநாதம் வாரப்பத்திரிகைக்காக எழுதப்பட்டது. காலத்தேவை கருதி மீள்பிரசுரமாகின்றது)

”யுத்த  நிறுத்த ஒப்பந்தம் பலனற்றது. அதனை சிலர் முன்னெடுக்க முனைகின்றனர். இதன் மூலம் நிலையான சமாதானம் ஏற்படாது”.

” எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இடமளிக்காத விதத்தில் யுத்தறிறுத்த உடன்படிக்கை புதிதாகத் தயாரிக்கப்படும்”.

”யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டு பரிகாரங்கள் காணப்படும். இதன்போது பிராந்தியத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்”.

இவை ”மகிந்தவின் சிந்தனைகள்” மகிந்த தேரரால் தேவநம்பிய தீசனுக்கு வழங்கப்பட்ட உன்னதமான ஆலோசனைக்கு அமைய நாட்டை வழிநடத்தப்போதாக அறிவித்துள்ள மகிந்தவின் சிந்தனைகள்.

கடந்த 18 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரின்) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. இந்த விஞ்ஞாபனத்துக்கு இடப்பட்டிருக்கும் மகுடமே ”மகிந்த சிந்தனைகள்”

மகிந்த எங்கே நிற்கின்றார்? எங்கே செல்ல முனைகின்றார்? நாட்டை எங்கே கொண்டு செல்லப்போகின்றார்? இந்தக் கேள்விகளுக்கு ”மகிந்த சிந்தனை” தெளிவாக விடையளிக்கிறது. இந்தச் சிந்நதனைகள் நிச்சயமாக ஒரு பின்திரும்பல் ஆகும். சகல விடயங்களிலும் மகிந்த பின்திரும்பியிருக்கின்றார். அரசியற் தீர்வு, பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி உட்பட அனைத்து விடயங்களிலுமே மகிந்த தனது சிந்தனைகள் பின்னோக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

அவரின் வார்த்தைகளும் சிந்தனையும் சிவப்பு மற்றும் காவி வர்ணங்களின் கலவையாக வெளிவந்துள்ளன. எனவே அங்கு எதிர்காலம் பற்றிய அக்கறையும் தெளிவும் காணமுடியவில்லை.

”யுத்த நிறுத்த ஒப்பந்தம் பலனற்றது” என்ற இந்த நான்கு வார்த்தைகளிலேயே இலங்கைத்தீவின் தற்போதயை ஸ்திரநிலை தகர்ந்து போய்விட்டது. நாடு பதற்றத்துள் கொண்டுவரப்பட்டுவிட்டது. புதிதாக மற்றுமொரு யுத்த நிறுத்த உடன்படிக்கை தயாரிக்கப்படுமென மகிந்த சிந்திருக்கிறார். ஆனால் இதனுடைய செயல் எந்தளவுக்கு சாத்தியமானது?

யுத்த நிறுத்த உடன்படிக்கை என்பது மகிந்தவின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உருவாகுவதல்ல. தற்போதைய புரிந்துணர்வு உடன்படிக்கையை ஆக்கிமுடிக்க நடையாய் நடந்து, பறந்து உழைத்த நேர்வேத் தரப்பின் அனுபவங்கள் இதற்கு சான்றும் விடையும் அளிக்கக்கூடியன. ஒரு ஒப்பந்தத்தின் சகல தரப்பும் அதன் சரத்துக்களில் திருப்தியடையும்போதுதான் அவற்றை ஏற்றுக்கொள்ளும்போதுதான் ஒப்பந்தம் உருவாகமுடியும். அதைவிடுத்து ஒரு தரப்பு தான் நினைத்ததையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதிவிடுவதன் மூலம் புதியதொரு ஒப்பந்தம் வந்துவிடாது. மாறாக ஏற்கனவே இருக்கின்ற ஒப்பந்தத்தை வலுவிலக்கச் செய்வதற்கே வழிவகுக்கும்.

உண்மையில் தற்போதுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை மகிந்தவின் கூடாரத்தின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது. மறுவளமாக இன்றைய இலங்கைத்தீவின் அற்ப சொற்ப நம்பிக்கையாக எஞ்சியிருப்பதுவும் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை மட்டுமே. கடந்த  மூன்றரை வருட சமாதான முயற்சிகளின் கைக்கெட்டிய பெறுபேறு இந்த MOU மட்டுமே. இதுவே இன்னமும் பல கதவுகளை மூடப்படாமல் பாதுகாக்கிறது என்பது ரகசியமானதல்ல.

இந்த MOU மகிந்தவின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது. மறுவளமாகப் புதியதொரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தச் சண்டித்தனக் கண்ணோட்டத்தில் உருவாக்குவோம் எனக் கூறுவது எந்தவிதத்திலும் சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை. அப்படியாயின் இலங்கைத்தீவின் கதி என்ன?

யுத்தத்தைத் தாண்டி எட்டப்பட்டுள்ள அரசியல் தீர்வு எப்படியானது என்ற விடயம் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்துவிடக்கூடியது. ஒற்றையாட்சிக்குள், பிராந்திய ஒருமைப்பட்டுக்குள் காணப்படக்கூடியதாக மகிந்தவின் தீர்வு இருக்குமாம். இது இல்லாத ஊருக்குக் காட்டப்படும் வழிகூடப் பரவாயில்லை என்பதாக அமைந்துவிட்டது.

அதிகாரப் பரவலாக்கல் மூலம் தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு குறைந்தபட்ச இணக்கத்தையாவது எட்டமுடியும் என்பதுவும்.

இப்போது இவை அனைத்தையும் கொட்டிவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வைக் காணச் சிந்திக்கிறார் மகிந்த.

இந்த அரிய முயற்சிக்கு அவர் யாரை துணைக்கு அழைக்க இருக்கிறார். ஏனெனில் ஒரு காரியத்தின் செயல் நிறைவேற்றத்தில் துணை என்பதும் மிக முக்கியமான காரணியாகும்.  ”பிராந்திய சக்திகளின்” உதவி ஒத்துழைப்பு இதற்காக பெறப்பட உள்ளதாம். பிராந்திய ஒருமைப்பாடு, அரைகுறைச் சமஷ்டி என்பவற்றுக்குள் சிக்கி தவித்து கரையேறமுடியாமல் நிற்கும் இந்தப் பிராந்திய சக்திகள் தாமே நோய்க்கு மருந்தாகவன்றி இலங்கைக்கு மற்றொரு நோயாக விளங்குபவை.

சீனா மற்றும் ரஸ்யாவுடன் எட்டப்படவுள்ள உடன்பாடுகள் சிறீலங்காவின் தற்போதைய மேற்கு முதன்மை வெளிவிவகாரக் கொள்கையிலிருந்து சிறிது விலகுவதாக அமையும். அத்தோடு பிராந்திய சக்திகளிற்கு முதன்மையளிப்பதென்பது மேற்கு முதன்மையை மேலும் சிதைவுக்குள்ளாக்குவதாகும்.

தற்போதைய சிறீலங்கா என்பது மேற்குலகின் நிதியுதவிகளிலும் முதலீடுகளிலும் வெகுவாக தங்கியிருப்பதாகும். வருடாந்த வரவு செலவுத்திட்டத்தை விடவும் கொடையாளி நாடுகளின் மாநாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குமளவுக்கு கீர்த்தி பெற்றிருக்கிறது சிறீலங்காவின் பொருண்மியம்.

மகிந்த உறவுகொள்ளச் சிந்தித்திருக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் எல்லாமே ஆயுதங்களையும் மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவு பொருளாதார, தொழில்நுட்ப உதவிகளையும் முதலீடுகளையுமே சிறீலங்காவுக்கு வழங்கவல்லன. சிறீலங்காவின் பணப்பெட்டி டொலர்களையும்,யூரோவையும், ஸ்ரேலிங் பவுணையுமே நம்பியிருக்கின்றது. ரூபாக்களையும், யுவான்களையும், ரூபிள்களையுமல்ல. அவை கிடைக்கப்போவதுமில்லை. அவற்றுக்கு உலக சந்தையில் கிராக்கியுமில்லை.

எனவே ஒட்டுமொத்தமாக மகிந்த சிந்தித்த விடயங்கள் இலங்கை தீவை தீயிடப்போகின்ற சமாச்சாரங்களாகவே இருக்கப்போகின்றன. சட்டிக்குள்ளிருந்து அடுப்புக்குள் சிறீலங்கா விழப்போகின்றது.

(குறிப்பு – ஊடகர் அமரர் பு. சத்தியமூர்த்தி –  இறுதிப் போர்க்காலத்தில் செய்தி சேகரிப்பிற்காக வள்ளிபுனம் பகுதிக்கு சென்றவேளையில் எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். எவ்விதமான அச்சுறுத்தல் சூழலிலும் துணிந்து  நின்று ஊடகப் பணியாற்றியவராக சத்தியமூர்த்தி அவர்கள் நினைவுகூரப்படுகின்றார்)

Our Facebook Page

Archives