featued_image

பண்டா – செல்வா ஒப்பந்தம் | தமிழ்

auhtor

on
2019-07-26


By :
Thamil

தமிழர்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழ் மக்களின் போராட்ட உணர்ச்சிகள் அதிகரித்த நிலையில் தமிழரசுக்கட்சி தொண்டர்களைத் திரட்டத் தொடங்கியது. இந்த நிலையில் பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார். இதனை செல்வநாயகம் ஏற்றுக் கொண்டார்.

“….தகராறுகளைத் தீர்க்கும் விடயத்தில் பேச்சுவர்த்தைக்கும், சமரசத்தீர்வுக்கும் முதலிடம் அளிக்க வேண்டும் என்பதில் நான் நம்பிக்கையுள்ளவன்; இக் கருத்தை ஏற்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.” என செல்வநாயகம் அறிக்கை விட்டார். இதனையடுத்து இருதரப்பினருக்குமிடையே பேச்சு வார்த்தை நடாத்த முயற்சி எடுக்கப்பட்டது.

பண்டாரநாயக்காவின் கொரகொல்லை வீட்டில் செல்வநாயகத்திற்கும் பண்டாரநாயக்காவிற்குமிடையில் முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது “தமிழ் மக்கள் தங்களை இந் நாட்டு மக்கள் என்று எண்ணச் செய்வதற்கு ஏற்ற ஒழுங்கை அரசாங்கம் செய்ய வேண்டும். தங்களைத்தாங்களே ஆளக்கூடிய சமஷ்டி அமைப்பின் மூலமே அதைச் செய்ய முடியும் என்று செல்வா கூறினார்.” இரு தரப்புக்குமிடையில் பல இரவுகள் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. இரு தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக 1957 யூலை 26ம் திகதி நள்ளிரவு பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

 

“இலங்கையின் அரசியல் வரலாற்றில் இனப்பிரச்சினைக்கான முதல் தீர்வு
முயற்சியாக அமைந்திருந்தது பண்டா- செல்வா உடன்படிக்கை.”

இரண்டு பாகங்களைக் கொண்டிருந்த இந்த உடன்படிக்கையின் முதல் பாகமானது அரசியல் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள உரிமைகள் பற்றிய நெருக்கடியையும் எப்படி அதனைத் தீர்க்க முயலுதல் வேண்டும் என்ற முன்னாயத்தப்போக்கினையும் வெளிப்படுத்தியிருந்தது.

இவ் ஒப்பந்தத்தின் இரண்டாவது பாகமானது முழுமையான நிர்வாகப் பரவலாக்கல் தொடர்பான அடிப்படைகளினையும் அதற்கு ஏற்ற வகையிலான அரசியல் அலகுகளினையும்
முன்மொழிந்தது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அமிர்தலிங்கம் உள்ளிடட் சிலர் இதனை எதிர்த்த போது சமஷ்டி ஆட்சியமைப்புக்கான அடிப்படையை இவ் ஒப்பந்தம் மூலம் உருவாக்கியுள்ளோம் என்று தன்நிலைப்பாட்டைத் தந்தை செல்வா விளக்கினார்.

இவ் ஒப்பந்தம் மூலம் அடையவுள்ள இலக்குகளையும் விளக்கினார். அவையாவன

   தமிழர் தாயகம் வடக்கும் கிழக்கும் என்பதை ஏற்கச்செய்தல்.
   வடக்கிலும் கிழக்கிலும் தமிழில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல்.
 இலங்கையின் தேசிய சிறுபான்மையினரின் மொழியாகத் தமிழை அங்கிகரிக்கச் செய்தல்.
 பிரஜாவுரிமைப் பிரச்சினையை மீளாய்வு செய்யச் செய்தல்.

மொழி, பிரதேச சபை தொடர்பாக குறிப்பிடும் இந்த உடன்படிக்கை ஒன்றுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகள்”பற்றிக் குறிப்பிடுகிறது. இது ஒரு மொழிவழி மாநிலக் கோட்பாட்டிற்கு முரணானது.

தமிழரசுக்கட்சியின் அரசியல் வரலாற்றில் பண்டா -செல்வா ஒப்பந்தம் ஒரு முக்கிய கட்டமாய்
அமைந்தது. ஆனாலும் தமிழரசுக்கட்சியின் கொள்கையிலிருந்து அவ் ஒப்பந்தம் ஓர் இறங்கு முகமாய் அமைந்தது.

ஒட்டு மொத்தமாக இந்த உடன்படிக்கையினை நோக்கும் போது தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த தாயகப் பிரதேசத்தினை பல கோணத்தில் துண்டு போடுவதற்கும் ஒரே தேசியத் தன்மையை தகர்ப்பதற்கும் அரசியல் ரீதியாக மட்டுமன்றி நிர்வாக அடிப்படையிலும் வாய்ப்புக்களை பண்டா – செல்வா உடன்படிக்கை அளித்துள்ளது.

இவவ்வாறான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்துவதில் பல தடைகள் ஏற்பட்டன. ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதனைத் தடுக்க ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை ஒன்றை ஒழுங்கு செய்தார். இந்த ஊர்வலத்தின் முன் டட்லி சேனநாயக்கா, ஜெயவர்த்தனா ஆகியோர் சென்றனர். ஜக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் பௌத்த பிக்குகளைத் தூண்டி விட்டனர். பிக்குகள் ஊர்வலமாகச் சென்று பிரதமர் வீட்டின் முன் உட்கார்ந்து சத்தியாக்கிரகம் செய்தனர். இதனையடுத்து பிரதமர் பிக்குகளை சந்திக்கவே ஒப்பந்தத்தை கிழித்து வீசுமாறு பிக்குகள் கோரினர். இதன் காரணமாக பண்டாரநாயக்கா இந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார்.

சமஷ்டி முறையையோ அல்லது குறைந்தபட்சம் பிரதேச சுயாட்சி முறையையோ கூடக் கொண்டிராத இந்த ஒப்பந்தம் எட்டு மாத அற்ப ஆயுளுடன் 1958 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி காலாவதியாகிவிட்டது.

Our Facebook Page

Archives